*
கிடைக்கும் வண்டியை கொண்டு சமோலி, கோபிஸ்வர், குந்ட் , குப்தகாசி , கௌரிகுந்த் வழியாக கேதர்நாத்தை அடையலாம் என்று எண்ணி சமோலி வரை செல்லும் மகேந்திரா வண்டியில் ஏறினேன் உத்ராஞ்சல் மலைகளில் இருக்கும் ஊர்களுக்கு செல்ல அதிகம்கிடைப்பது மகேந்திரா வண்டிகள்தான் தினபோக்குவரத்து பயன்பாட்டில் இதன் பங்கு இன்றியமையாததாக விளங்குகின்றது. அனைத்து இருக்கைகளும் ஆட்கள் கிடைத்தபிறகுதான் வண்டியை எடுப்பார்கள் சில சமயம் உடனே இருக்கைகளுக்கு ஆட்கள் வந்துவிடுவார்கள். இல்லை என்றால் ஆட்கள் கிடைக்கும் வரைவண்டியை எடுக்க மாட்டார்கள். ஒரு வழியாக ஜோஷிமத் வழியாக சமோலியை அடைந்து அடுத்து கோபிஸ்வர் வண்டிக்காக காத்திருக்கதொடங்கினேன்.
பிறகுதான் தெரிந்தது நேரமாகிவிட்டதால் கோபிஸ்வர் சென்றாலும் கௌரிகுந்த் செல்லும் வண்டியை பிடிக்க முடியாது என்று. வந்தவழியே செல்லாமல் புது வழியாக செல்லலாம் என்ற என் எண்ணம் நிறைவேறாமல் போக, அடுத்த வண்டியை பிடித்து நன்ட்ப்ரயாக்வழியாக கரன்பிரயாக் சென்றடைந்தேன். தெரியாத ஊர்களில் தனியா சுற்றுவதில் பயம் சிறிதும் இல்லை மாறாக மகிழ்ச்சியாகத்தான் இருந்தது. வரைபடம் இருந்ததால் வழிகள் அறிந்துகொள்வது சுலபமாக இருந்தது. டி.ஷர்ட், ஷார்ட்ஸ், தோலில் ஒரு பை, கையில் ஒரு தண்ணிர்பாட்டிலோடு கரன்பிரயாக்கில் திறிந்துகொண்டிருந்தேன். இந்த பயணம் முழுவதும் இதே கோலத்தில்தான் சுற்றிக்கொண்டிருந்தேன். ஒரு வழியாக ருத்ரபிரயாக் செல்லவண்டி கிடைத்து சிறிது நேரத்தில் ருத்ரபிரயாக்கை அடைந்தேன், ருத்ரபிரயாக் கொஞ்சம் பெரிய ஊர் அங்கு உணவை முடித்துக்கொண்டு அடுத்து குப்தகாசி வண்டியை பிடித்து குப்தகாசியை நோக்கி பயணித்தேன்.
தொலை தூர ஊர்களுக்கு நேரடியாக வண்டிகள் அதிகம் இல்லை மாறிதான் செல்லவேண்டி இருந்தது என் கோலத்தை பார்த்து பக்கத்தில் அமர்ந்திருந்தவர் எங்கு இருந்து வறிங்க என்று வினவ, நான் பத்ரியில் இருந்து வருகின்றேன் என்று கூற, என்ன எல்லாம் யமுநோதரி, கங்கோதரி, கேதர்நாத், பத்ரிநாத்ன்னு போவாங்க நீங்க பத்ரில இருந்து எதிர்வரிசையில் ஆரம்பிசிருகிங்க என்று சிரித்துக்கொண்டேகேட்டார், எனக்கு அந்த வரிசை முறை எல்லாம் தெரியாது என்று கூறி, அடுத்து கேதர்நாத் செல்லவேண்டும் எங்கு தங்கலாம் கௌரிகுந்தில் அறை கிடைக்குமா என்று கேட்க, அவர் கூட்டம் அதிகமாக இருக்கும் அறை கிடைக்கலனா சிரமமா போய்டும் அதனால குப்தகாசியிலேயே தங்கிடுங்க ஊரும் கொஞ்சம் பெரிய ஊர் என்றார், பேசிக்கொண்டிருக்கும் பொழுதே குந்ட் என்ற இடத்தில் வண்டி நின்றது மூன்று சாலைகள் பிரிந்தன ஒன்று கோபிஸ்வர் செல்ல அடுத்து குப்தாகாசி செல்ல மற்றொன்று நான் ருட்ரப்பியாகில் இருந்து வந்தபாதை, கோபிஸ்வர் வழியாக வந்தால் இங்கு தான் வந்து சேரும் என்று எண்ணிக்கொண்டேன் அதையே அரிகில் இருப்பவரிடம் கேட்டு உறுதிபடுத்திக்கொண்டேன்.
(குப்தகாசி)
குப்தகாசி வருவதற்குள் நான்குமணி இருக்கும் அறை தேடி திரும்ப அலைய தொடங்கினேன் ஒன்று அல்லது இரண்டு இடத்தில் மட்டும் அறை இருப்பதாக கூறினர் ஆனால் தனியாக வந்ததை அறிந்து கொடுக்கமறுத்துவிட்டனர் அதற்கான காரணம் அப்பொழுது தெரியவில்லை, ஏன் தனியா வந்தா கொடுக்கமாட்டேன்கிறாங்க என்று யோசித்துக்கொண்டே ஒரு நுழைவாயிலை கடந்து மேடான பகுதியை நோக்கி நடக்க தொடங்கினேன். சில நூறு மீட்டர் கடந்தவுடன் ஒரு கோவில் வந்தது அதை கடந்து ஒரு விடுதியை அடைந்தேன் பேருந்து நிறுத்தத்தில் தேநீர் அருந்தும் பொழுது இந்த விடுதியை பற்றி அந்த கடைக்காரர் கூறினார். அங்கு முதலில் அறை இல்லை என்று கூறினாலும் பிறகு ஆறுமணிக்கு மேல் வாருங்கள் எங்கள் மக்கள் யாரும் வரவில்லை என்றால் உங்களுக்கு (அவர்கள் மாநிலத்து மக்கள்) அறை தருகிறோம் என்று கூறினார், அறை கிடைக்கும் என்ற நம்பிக்கை முழுவதுமாக எனக்கு வந்திருந்தது, பொழுதை கழிக்கத்தான் வழியில் இருந்த காசி விஸ்வநாதர் கோவிலுக்கு சென்றேன், கோவிலுக்குள் நுழைந்தவுடம் ஒரு சிறிய குளம் படிகட்டின் வழியாக இறங்கினால் இரு பக்கத்திலும் காளை மற்றும் ஆட்டு தலை போன்ற உருவத்தின் வாயிலிருந்து நீர் வந்துகொண்டிருந்தது சிறு நிறுத்தம் கூட இல்லாமல்.
எங்கிருந்து நீர் வருகிறது என்று யாருக்கும் தெரியவில்லை ஒன்று கங்கை என்றும் மற்றொன்று யமுனை என்றும் அங்கிருந்தவர்கள் கூறினர் ஏதோ குழாய்வைத்து தண்ணீர் விடுவது போல் இருந்தது ஆனால் இயற்கையாகவே வருகிறது என்று அங்கிருந்தவர் கூறினார் குடிப்பதற்கு அந்த நீரை எடுத்து சென்றுகொண்டிருந்தனர். கேதர்நாத் கோவில் கட்டபட்டபொழுது இந்த கோவிலும் கட்டப்பட்டது என்றுவெளியில் இருந்த கடைகாரர் கூறினார். எனக்கு அந்த கோவிலை பற்றி எதுவும் தெரியாது என்பதால் அணைத்திருக்கும் தலையைஆட்டினேன். ஆனால் அடுத்தடுத்த கேதர் பயணங்களில் குப்தகாசி கோவிலுக்கு செல்வதை கட்டாயமாக்கி கொண்டேன். அந்த வழிப்போக்கரினால்தான் குப்தகாசி கோவிலை பார்க்க வாய்ப்பு கிடைத்ததாக நினைத்துக்கொண்டேன் இன்னும் நேரம் இருந்ததால் கௌரிகுந்த் செல்லும் சாலையில் நடக்க தொடங்கினேன் ஊரை விட்டு இருநூறு மீட்டருக்குள் ஒரு மரத்தின் அருகில் சாலையின் ஓரத்தில் அமர்ந்துகொண்டேன் காரணம் அதற்கடுத்து இருந்த பள்ளத்தாக்கு, மாலை வேலை அழகான சூழல் அமையான இடம் துணைக்கு சில மேகங்கள், இதமான குளிர் என்று சிறிது நேரம் கடந்தது அடுத்த முறை சென்றபொழுதும் அந்த இடத்திற்கு சென்றதாக நினைவு, அமர்ந்து சிறிது நேரத்திலேயே நான் எங்கோ தூர தேசத்தில் சொர்கத்தின் எதிரில் அமர்ந்திருந்ததாக எண்ணிக்கொண்டேன். எதிரே தூரத்தில் சிறு கோடு போல சாலைகள் அதில் விளையாட்டு பொருட்கள் போல வண்டிகள், சொல்லாமல் வந்து அதனை மறைக்கும் மேகங்கள் சிறிது நேரத்தில் மீண்டும் தெளிந்த காட்சி என்று நேரம் கடந்தது, ஏதோ பெரியதாக சாதித்துவிட்டதாக நினைத்துக்கொண்டேன் அல்லது இத்தனை அழகான இயற்க்கையை பார்த்ததில் ஒரு மனநிறைவு.
இருட்டதொடங்கியவுடன் நேராக விடுதிக்கு செல்ல அவர்கள் தங்குவதற்கு ஏதாவது ஒரு அடையாள அட்டை கேட்டனர், நான் ஒருஅட்டையை கொடுக்க அரசாங்க அட்டைதான் வேண்டும் என்று கூறிவிட்டனர் பிறகு நான் என் வருமானவரி அட்டையை (பான் அட்டை) கொடுக்க, அறையை காலி செய்யும் பொழுது திரும்பிவாங்கி கொள்ளலாம் என்று கூறினர், முதலில் கொடுத்த அறை சரியில்லாததால் வேறு அறை கேட்க வாடகை அதிகம் ஆகும் என்று கூறினர் பரவாயில்லை என்று வேறு அறையை எடுத்துக்கொண்டேன், விடியற்காலையிலேயே எழவேண்டும் எண்ணம் அடிகடி வந்து சென்றது விடியற்காலையில் எழுந்து கிளம்பி முதல்வண்டியை பிடிக்க சென்றேன் சாவி ஒப்படைக்கும் பொழுது என்னுடைய வருமானவரி அட்டையை வாங்கிக்கொண்டு பேருந்துநிறுத்தத்தை நோக்கி நடக்கத்தொடங்கினேன். என்னை போல பலரும் அந்த வண்டிக்காக காத்திருந்தனர், வண்டி கிளம்பி பாதி தூரம்செல்வதற்குள் வாகன நெரிசலில் சிக்கிகொண்டது. வெகுநேரம் சென்றும் வாகன நெரிசல் தீராததால் அருகில் இருந்த கடைக்கு சென்று தேநீர் அருந்த தொடங்கிநோம். வெகு நேரம் கழித்து சிறிது சிறிதாக வண்டி நகர்ந்தது.
ராம்பூரை கடந்து சோன்பிரயாக் வரை வண்டி ஊர்ந்து சென்றது சோன்பிரயாகை கடந்து சில நிமிடங்களில் இதற்க்கு மேல் போகாது இங்கயே இறங்கிகொள்ளுங்கள் என்று ஓட்டுனர் கூற இறங்கி நடக்கத்தொடங்கினேன். வழி எங்கும் வரிசையாக வாகனங்கள் பெரும்பாலான மக்கள் வாகனங்களை விட்டு இறங்கி சாலையில் நின்றுகொண்டிருந்தனர். ஒரு சோதனை சாவடி இருந்தது மேலிருந்து வரும் வண்டிகளை மட்டும் தான் விட்டு கொண்டிருந்தனர் நெரிசலை தவர்க்க குறிப்பிட்ட நேரம் இப்படி செய்வார்கள் என்று கூறினார்கள். ஆனால் நடந்து போக தடை இல்லை.
தனியாக கௌரிகுந்தை நோக்கி நடக்க தொடங்கினேன் அடர்ந்த மரங்கள் சாலையில் ஒரு புறம் சிறிய ஆறு ஓடிகொண்டிருந்தது, ஒரு சிறு பாலத்தை கடக்கும் பொழுது ஆற்று தண்ணீரின் ஓசை மட்டுமே கேட்டது பிறகு பறவைகளின் ஓசை என்று தனிமையில் ரசித்துக்கொண்டே நடக்கத்தொடங்கினேன், கண்ணுக்கெட்டும் தூரம் வரை முன்னும் பின்னும் ஆள்நடமாட்டம் இல்லை. ஏதாவது வனவிலங்கு வந்துவிட்டாள் என்ன செய்வது என்று உள்ளுக்குள்தோன சமாளித்துக்கொள்ளலாம் என்று மனம் சமாதானம் செய்தது மூன்று நான்கு கி.மீ க்கு மேல நடந்திருப்பேன் பிறகு ஒரு வண்டி வந்தது கைகாட்டி நிறுத்த சில நிமிடங்களிலேயே கௌரிகுந்த்தை அடைந்தோம். அடுத்து பதினான்கு கி.மீ நடைபயணம் செய்யவேண்டும் செய்தால் கேதர்ரை சந்திக்கலாம். கேதர் செல்வதற்கு விநாயகர் ஒரு வாயிலில் அமர்ந்து வரவேற்றார் நான் அவரை நோக்கி நடக்கத்தொடங்கினேன்.
தேடல் தொடரும்....
குறிப்பு : புகைப்படங்கள் அனைத்தும் மூன்றாவதுமுறை சென்றபொழுது எடுத்தது