நான் கண்ட கொழும்பு

*
கொழும்பு விமானநிலையத்தை விட்டு வெளியேவந்ததும் சிங்களதேசம் உங்களை வரவேற்கிறது என்று பொருள்பட சிரித்தமுகத்துடன் பெரிய கட்டவுட்டில் வரவேற்றார் "மன்னர்". யாழ் செல்லவிரும்பி நேரமின்மையால் (யாழ்ப்பாணம் செல்ல இலங்கை அரசிடம் அனுமதி முன்கூட்டியே வாங்கவேண்டும்) கொழும்போடு நின்றுவிட்டேன், தங்கிருந்த விடுதியில் சுற்றிபார்க்க நீர்கொழும்பு போ, கடற்க்கரை போ என்று அறிவுரை வழங்கினர் விடுதி ஊழியர்கள், பொது வாகனத்திலேயே ஊருக்குள் செல்வது என்று முடிவுசெய்து கட்டுநாயக்கா பேருந்து நிலையத்துக்கு சென்றேன், (பொது வாகனத்தை பயன்படுத்தும் பொழுது மக்களின் இயல்பு வாழ்க்கையை சிறிதேனும் அறிந்துக்கொள்ள வாய்ப்பு கிட்டும் ), கட்டுநாயக்கா பேருந்து நிலையத்தில் எங்கு செல்வது என்று தெரியாமல் நின்றுகொண்டிருக்க ஒரு குளிரூட்டப்பட்ட பேருந்து (வேன் போன்று இருந்தது) புறப்பட தயாராக இருந்தது, சிங்களத்தில் மட்டும் எழுதிருந்ததால் புரியவில்லை, அதை தவிர்த்து கோட்டை என்று தமிழில் எழுதிருந்த பேருந்தில் ஏறிக்கொண்டேன், சிங்களம் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ஊர் பெயர்கள் பெரும்பாலான பேருந்தில் எழுதபட்டிருந்தது.



கொழும்பை நோக்கிய பயணம் தொடர்ந்தது ஒரு மணிநேரத்தில் கோட்டையை அடைந்தேன் கோட்டை என்பது தொடர்வண்டி நிலையம் என்று ஊகத்தின் அடிப்படையில் வந்தது வீண்போகவில்லை. நினைத்த இடத்துக்குத்தான் வந்திருந்தேன், ஊரில் எங்கு பார்த்தாலும் மன்னர் எதோ ஒரு வெள்ளைகார பெண்மணியிடம் பட்டம் வாங்குவது போல ப்ளக்ஸ் வைத்திருந்தனர், மன்னரின் தம்பிமார்களின் படங்களும் ஆங்காங்கே பார்க்கமுடிந்தது. அந்த இடத்தை பொறுமையாக பார்த்துக்கொண்டே முன்னோக்கி சென்றேன். இலங்கை பணம் குறைவாக இருந்ததால் பணமாற்று கடையை தேடத்தொடங்கினேன், கண்ணில் படும்தூரத்தில் ஒன்றும் இருப்பதாக தெரியவில்லை, பக்கத்தில் இருந்த கடையில் வழிகேட்க ஒரு மசூதி அருகில் இருப்பதாக வழி கூறினார் அந்த கடைக்காரர், நேராக சுற்றி பார்த்துக்கொண்டே செல்ல மத்திய பேருந்து நிலையம் வந்தது, அதை கடந்தும் ஏதும் கண்ணில் படவில்லை, அருகில் ஒரு கடையில் தமிழில் பாடல் ஒலித்துக்கொண்டிருந்தது அவரிடம் வழி கேட்க, இந்தியாவிலிருந்து வரிங்களா ? என்று கேட்டு தமிழகம் என்று சொன்னதும் தமிழிலேயே பேசுங்க என்று கூறினார், சிறிது நேரம் உள்ள உக்காருங்க இந்த வேலைய முடித்துவிட்டு உங்களுக்கு உதவுறேன் என்று கூற. நானும் கடைக்குள் அமர்ந்துக்கொண்டேன்.

கொழும்பின் பல பேருந்து நிறுத்தத்தை கட்ட ஏர்டெல் உதவிருப்பதை உணரமுடிந்தது, பல விளம்பர தட்டிகளையும் நகர் முழுவதும் சிங்களத்தில் வைத்துள்ளனர், டி.வி.எஸ் மோட்டோர்ஸ் மற்றும் ஏர்டெல் விளம்பரங்கள் மட்டுமே தமிழில் பார்க்கமுடியவில்லை. அவர் வேலையை முடித்தபின்பு வெளியில் வந்து வழிகூறினார் அதற்க்கு முன்பாக அவர் நண்பரிடம் பேசி எங்கு கடை திறந்திருக்கும் என்று கேட்டு கூறினார். ஞாயிறு என்பதால் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டிருக்கும் என்று கூறி நகைக்கடைகளில் கேட்டு பாருங்கள் என்றும் கூறினார் வேண்டும் என்றால் தானும் கூடவந்து உதவுவதாக கூறினார், உதவிக்கி நன்றி கூறி வந்த பாதையிலேயே மீண்டும் நடக்க தொடங்கினேன்.

சிறிது தூரத்தில் வலது பக்கம் திரும்ப , சிறுதொழில் புரிவோருக்கான சந்தை இருந்தது அதை மன்னரின் தம்பி(அரசியல்) திறந்து வைத்திருந்தார் என்று புகைப்படம் காட்டிகொடுத்தது, தொடர்ந்து செல்ல பெரும்பாலான கடைகள் பூட்டப்பட்டிருந்தன, தனிமையில் கால்கள் போனபாதையில் சென்றுகொண்டிருந்தேன் வழிகேட்டால் பொறுமையுடனும் உண்மையான வழியையும் கூறுகின்றனர் கொழும்பு வாசிகள். சிறிது நேரத்தில் ஒரு மசூதியை அடைய அங்கு ஒரு சிறுவன் பக்கத்தில் ஒரு கடையிருப்பதாக கூற அங்கு சென்று பார்த்தால் கடை போட்டிருந்தது. அங்கிருந்தவரிடம் கேட்க ஆங்கிலத்தில் ஒரு தெருவின் பெயரை கூறி அங்கு நகைக்கடைகளில் கேட்டுப்பார்க்க கூறினார், அந்த தெருவை அடைந்ததும் பார்த்தால் செட்டியார் கட்டிடம், நாடார் கட்டிடம் என்று சாதி பெயர்கள் கொண்ட கட்டிடங்கள் அதிகம் காணப்பட்டது அந்த பகுதி முழுவதும் நகைக்கடை ஆனால் பெரும்பாலும் மூடப்பட்டிருந்தது. ஒரு கடையில் மட்டும் இன்றைய கணக்கு முடிச்சாச்சி குறைந்த அளவு வேண்டுமென்றால் மாற்றிக்கொள்ளுங்கள் என்று கூறினார், பணத்தை மாற்றிக்கொண்டு வெளியில் வந்து பார்த்தால் ஒரு ஆயிர ரூபாய் தாளில் மன்னர் இரண்டு கைகளை உயர்த்தி காண்பிப்பது போல இருந்தது.

லோஷன் அண்ணாவுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பே வருவதை தெரிவிக்க வேண்டும் என்று எண்ணி வந்து இறங்கிய பிறகு தான் கூப்பிட்டு சொல்லமுடிந்தது, நான்கு மணிக்கு மேல் வந்துடுவேன், பார்க்கலாம் என்று கூறிருந்தார், அவரை அழைத்து, இடம் தெரியாததால் மத்தியபேருந்து நிலையம் அருகில் இருக்கிறேன் என்று கூறிவிட்டு பேருந்து நிலையத்தை நோக்கிநடக்க தொடங்கினேன் குறுக்கு வழியில் வந்ததால் மீண்டும் சிறுதொழில் புரிவோர் சந்தை பக்கம் வந்துசேர்ந்தேன் அருகில் மேலே புத்தர் சிலையை காண நேர்ந்தது.



பேருந்து நிலையத்தை அடைந்தபொழுது வெய்யிலின் அளவு கூடியிருந்தது. சிறிது நேரத்திலேயே லோஷன் அண்ணன் அவரது உறவினர் ஒருவருடன் வந்து கூட்டிக்கொண்டு சென்றார், ஏற்கனவே ஒரு முறை லோஷன் அண்ணனை சிங்கையில் சந்தித்திருந்ததால் இயல்பாகவே பேசமுடிந்தது, ஏதாவது ஒரு கடைக்கு செல்லலாம் என்று அவர் வண்டியில் அந்த பகுதியில் பார்க்க அனைத்து கடைகளும் மூடிருந்தன, ஒவ்வொரு இடமாக செல்ல அந்த இடத்தை பற்றி கூறிக்கொண்டு வந்தார், நான் பணம் மாற்ற சென்ற தெருவிற்கு வேறு பெயர் இருந்தாலும் இன்னும் மக்கள் செட்டி தெரு என்று தான் அழைப்பார்களாம், அதை சுற்றியுள்ள பகுதியில் கடைவைத்திருப்பது பெரும்பாலும் தமிழகத்திலிருந்து வந்தவர்கள்தான் என்றும் கூறினார். இதே தெருக்களில் மற்ற நாட்களில் வந்தால் நடக்க கூட இயலாது அவ்வளவு கூட்டம் இருக்கும் என்று சொல்ல அந்த தெருக்களை மறுமுறை பார்த்துக்கொண்டே சென்றேன்.

சரியாக அமர்ந்து பேச நல்ல உணவகம் கிடைக்கததால் "கொழும்பி எந்த கடை திறந்திருக்கோ இல்லையோ கே.எப்.சி மற்றும் பீசா-ஹட் திறந்திருக்கும் வாங்க போகலாம் என்று கூட்டிசென்றார்" பல விசயங்களை பற்றி பேசிக்கொண்டிருந்தோம், தொலைபேசியில் பேசியபோதே பொன்னம்பலனார் கோவிலுக்கு போயிட்டு போங்க என்று சொல்லிருந்தார். சந்திப்பின் முடிவில் அவரே அந்த கோவிலில் வந்து இறக்கிவிட்டு அருகில் உள்ள அருளனந்தர் கோவிலுக்கு போயிட்டு போங்க வேண்டிக்கொண்டது நடக்கும் என்று நம்பிக்கை உள்ளது என்று கூறி விடைப்பெற்றார். நான் பணம் மாற்றுவதற்காக அந்த பகுதி முழுவதுமே சுற்றிருந்தேன் அதை சுற்றியுள்ள பகுதிகளை லோஷன் அண்ணன் காண்பித்திருந்தார்.


பொன்னம்பலனார் கோவில் கருங்கல்லால் கட்டப்பட்டிருந்தது, பராமரிப்புகூட நன்றாக இருக்கிறது, கோவிலை சுற்றி பார்த்துவிட்டு நடந்து சென்று அருளனந்தர் கோவிலை பார்க்க உள்ளுக்குள் சிங்களத்தில் பூசை நடந்துக்கொண்டிருந்தது. சில நொடிகள் கோவிலின் வெளியிலேயே நின்று பார்த்துவிட்டு மீண்டும் கோட்டையை நோக்கி புறப்பட்டேன். ஒரு பேருந்து எடுத்து கோட்டையை அடைந்ததும். விமானநிலைய பேருந்தில் ஏறிக்கொண்டேன் குளிரூட்டப்ட்டிருந்த வண்டி, பெயரளவில் மட்டும் குளிர் இருந்தது பேருந்து கட்டணமாக எழுபது வாங்கியதாக ஞாபகம். கட்டுநாயக்காவை ஒருமணிநேரம் இருபது நிமிடங்கள் சென்று வந்தடைந்தது, அருகிலிருந்த உணவகத்திற்கு சென்றுவிட்டு தங்கிருந்த விடுதியை நோக்கி சென்றேன். விடுதியில் பணிபுரியும் இருபது வயதை கடந்த சிங்கள பையன் ஒருவன் நன்றாக பேசிக்கொண்டிருந்தான். தமிழகத்தில் உள்ள பிரபலமான அரசியல்வாதிகள் எங்கள் அரசுக்கு எதிராக இருக்கிறார்கள் ஆனால் இங்கு சிங்கள , தமிழ் , இசுலாமிய மக்கள் அன்புடனும் அமைதியாகவும் வாழ்கிறோம் என்று கூறிகொண்டு இருந்தான்.

சிறிது நேரத்திலேயே ஒரு சிங்கள செய்தித்தாள் கொண்டுவந்து அதில் ஒரு படத்தை காட்டி இது எல்லாம் வி.புலிகளின் இடங்கள் இங்க தான் கொடுமை படுத்துவாங்க பாருங்க என்று காட்டினான். தாங்கள்/தங்கள் அரசு உங்கள் முன்பு தவறாக சித்தரிக்கபட்டுவுள்ளது என்பது போலவே பெரும்பாலான சிங்களர்களின் மனநிலை உள்ளது. தமிழர்களும் தங்களின் அடையாளங்களை இழக்க விரும்பவில்லை என்றே தோன்றுகிறது.

தனிமையில் பல பயணங்கள் சென்றிருக்கிறேன் நமக்கான முழு சுதந்திரமும் நம்மிடம் இருக்கும் ஆகவே மகிழ்ச்சியின் அளவும் கூடுதலாக இருக்கும் ஆனால் இந்த பயணத்தில் மகிழ்ச்சி என்பது ஏதும் இல்லை இலங்கையில் இறங்கி மீண்டும் கிளம்பும்வரை இதே தேசத்தின் இன்னொரு மூலையில் பலலட்சம் மக்கள் கொன்று புதைக்கபட்டிருகிறார்கள் / எரிக்கபட்டிருக்கிறார்கள் என்ற எண்ணம் இருந்துக்கொண்டே இருந்தது.

பத்ரிநாத் - குப்தகாசி - கேதர்நாத் - பகுதி 5

*(கேதார்நாத் செல்ல நுழைவாயில்)

குறுகலான பாதையின் இரண்டு புறமும் கடைகள், இது தான் கோவிலுக்கு செல்லவதற்கு சரியான பாதையா என்று தோன்று அளவுக்கு இருந்தது, பன்னிரெண்டு கி.மீ'ரை கடக்க , நடைப்பயணம், குதிரை மற்றும் தொட்டில் போன்ற ஒன்று உள்ளது, மிக வயதானவர்கள் தொட்டில் போன்று இருப்பதில் செல்லலாம் நான்கு பேர் சுமந்து செல்கின்றனர், நடக்கமுடியாதவர்கள் குதிரையில் செல்லலாம் அனைத்தும் பேரம் பேசி முடித்தபிறகு, நான் என்ன வயசாகிவிட்டதா என்று நடந்தே செல்ல விருப்பப்பட்டேன். நல்ல கூட்டம் ஜூன், ஜூலையில் அதிக கூட்டம் இருக்கும், வலதுபுறத்தில் மந்தாகினி நதி ஓடிக்கொண்டிருக்கிறது ஒழுங்கற்ற பாதை சில இடங்களில் கைப்பிடிகள் இடிந்து கிடக்கின்றது பல இடங்கிளில் அருவி போன்று நீர் கொட்டுகின்றது, கால்கள் வைக்கும் பொழுது பார்த்து வைக்கவேண்டி இருந்தது.







அனைத்து வயதினரையும் பார்க்க முடிந்தது, பிறந்து சிலமாதங்கலான குழந்தைகளை கூட தூக்கி வந்திருந்தனர், வேண்டுதலாக இருக்கலாம் என்று எண்ணிக்கொண்டேன், மிக வயதானவர்கள் அதிகம் தென்பட்டனர், சிறிது தூரத்திலேயே கால் வலி வந்து ஷூ போட்டு செல்வது அவசியம் என்று உணர்த்தியது. கவனம் பாதையில் இல்லை என்றால் ஈசனை அடுத்த நொடியே பார்ப்பது உறுதி, நடக்கையில் வியர்வையும் நின்றால் குளிரும் எடுக்கிறது, முதல் முறை சென்றபொழுது ஆங்காங்கே அமர்ந்து தேநீர் குடித்து மலையை அடைய மாலையாகிவிட்டது, இருபுறமும் பார்த்துக்கொண்டே செல்லலாம், நதியின் ஓசை சில்லென்று தென்றல், அழகிய மலைகள் என்று பல மலைகளை கடந்து சென்றுக்கொண்டிருந்தேன், வழியில் பலவிதமானவர்களை சந்திக்கமுடிந்தது, என்னைவிட இரண்டு வயது குறைவான நபரிடம் தேநீர் குடிக்கும்பொழுது பேசிக்கொண்டிருந்தேன், அவர் கோவிலை அடையும் வரை குடிநீரை தவிர எதுவும் குடிப்பதில்லை என்று கூறினார் நான் தேநீர் குடித்துவிட்டு கிளம்பும்பொழுது அவர் குதிரையில் ஏறி என் முன்னே சென்றார். தென்னிந்தியர்கள் அதிகம் இங்கு வருகின்றனர் குறிப்பாக தமிழ், தெலுகு மற்றும் கன்னடம் பேசும் மக்கள் அதிகம் வருகின்றனர். மற்றும் குஜராத்தி, வங்காளி மக்களும் குறிப்பிடதகுந்த அளவு பார்க்க முடிந்தது மலை ஏறுவதற்குள் ஒருவழியாகிவிட்டது எப்படித்தான் இந்த மலைக்கு நடந்து வராங்கலோன்னு தோன்றியது.





முதல் முறை சென்ற பொழுது ஐந்து மணிநேரங்களுக்கு மேல் நடக்க வேண்டி இருந்தது, கேதரை அடையும் பொழுது நடைபயணம் முடிந்தது மற்றும் கேதரை அடைந்தது என்ற இரண்டும் பெரு மகிழ்ச்சியை கொடுத்தது, சமதல பரப்பில் நடக்க தொடங்கி சில நிமிடங்கள்குள்ளே கோவிலின் மேல்பகுதி தெரிந்தது, இவ்வளவு தூரம் நடந்து வந்தது இதை பார்ப்பதற்குத்தான் என்று எண்ணிய பொழுது எழுந்த உணர்வை சொற்களில் அடைக்க முடியவில்லை, பிறகு மெதுவாக நடந்து ஒரு சிறு பாலத்தின் வழியே மந்தாகினி நதியை கடந்து பாலம் முடியும் இடத்தில் இருக்கும் மணியை அடிக்க பிறந்த இசை குளிருடன் சேர, தெய்வீக இசையாக மனது பாவித்தது. நான் கடந்த பின்னும் மணியோசை கேட்டுக்கொண்டே இருந்தது எனக்கு பின் வந்தவர்கள் அதற்க்கு காரணமாக இருந்தனர். சரியான பாதை தானா என்று எண்ணிக்கொண்டே சென்றேன் ஒரு வழியை பார்த்து ஒரு வளைவில் திரும்பியதும் கோவில் முழுவதுமாக தெரிய தொடர்ந்து நடந்தது என் கால்கள். இருபுறமும் கடைகள், அனைத்து பொருட்களும் குதிரையின் உதவிக்கொண்டுதான் வந்திருக்க வேண்டும்.






கோவிலை மையமாக கொண்டு உருவான ஊர், பல கட்டிடங்கள் அனைத்தும் ஒவ்வொரு மடத்துக்கு சொந்தமானது, பெரும்பாலான மாநிலங்களுக்கு சொந்தமாக மடங்கள் இருக்கின்றன, தமிழகத்துக்கு இருந்ததாக நினைவில்லை. அனைத்து கட்டிடங்கள் கட்டவும் எந்தளவு குதிரைகள் உழைத்திருக்கும் என்று என்ன முடிந்தது. கோவிலை நெருங்கியதும் பெரிய வரிசையை காண முடிந்தது வரிசையை தொடர்ந்து செல்ல அது கோவிலின் பின்புறம் சென்று கொண்டிருந்தது ஒரு கி.மீ இருக்கும் போல் என்று எண்ணிக்கொண்டு இறுதியாக சென்று நின்றுக்கொண்டேன், எனக்கு பின் பலரும் இணைத்துக்கொண்டுதான் இருந்தனர். வரிசை மெதுவாக நகர்ந்தது ஒரு கட்டத்தில் அப்படியே நின்று போனது. பனிபடர்ந்த மலைகள் மூன்றுபுறமும் அதன் நடுவில் கோவில். மாலைநேர குளிர், நமசிவாய கோசங்கள், புது அனுபவம், நான் தான் இப்படி தனிமையில் ஊர் சுற்றிக்கொண்டிருகிறேனா, முடிவை மாற்றிக்கொண்டு அனந்தவிகாரில்லிருந்து திரும்பி சென்றிருந்தால் இந்த அற்ப்புத இடத்தை பார்த்திருக்க முடியுமா ? என்று எண்ணி லேசான மழையில் மலையில் கோவிலை பார்த்துகொண்டு இருக்கும்பொழுதே குளிர் என்னில் இறங்குவதை உணரமுடிந்தது, நான் மட்டும் தான் ஷாட்சுடன் இருந்தது கோவிலை நெருங்கும் பொழுது மற்றவர்களை பார்த்து தெரிந்துக்கொண்டேன். நெடு நேரம் வரிசை நின்றதுக்கு காரணம் கோவிலில் பூசை செய்ததுதான் என்று, பின்புதான் தெரிந்தது. கோவிலின் பின்புறம் வழியாக வரிசை சென்றது அதற்க்குள் முழுவதுமாகவே இருட்டிருந்தது.

கோவில் வாயில் அருகில் இரண்டு சாமியார்கள், ஒருவர் அந்த குளிரிலும் சட்டை எதுவும் போடாமல் இன்னொருவர் ஒரு துணி போல் கட்டிக்கொண்டு அமர்ந்திருந்தனர், வரிசையில் இருந்தவர்கள் காசை கொடுத்துவிட்டு அவர்கள் கால்களை தொட்டு கும்பிட்டுக்கொண்டனர்,காசையும் கொடுத்துவிட்டு கால்களையும் தொட்டு கும்பிடுகிரார்களே என்று எண்ணி சிறுபுன்னகையுடன் கடந்து சென்றேன், தமிழக கோவில்களை ஒப்பிடும் பொழுது மிக மிக சிறிய கோவில் இதற்க்கா இவ்வளவு கூட்டம் வருகிறது என்று எண்ணிக்கொண்டே கோவிலுக்குள் நுழைந்தேன். முதலில் சிறு அறை பாண்டவர்களின் சிலைகள் மற்றும் கண்ணனின் சிலை என்று அந்த அறையில் இருந்தது, கண்ணன் இருந்த சிலையின் அருகில் ஒரு பலகையில் கிறுக்கியது போன்று தமிழில் எழுதபட்டிருந்தது, நம் மக்களை தமிழில் பெயர் காட்டி மகிழ்வித்து காசு சம்பாரிக்க இந்த எழுத்துக்கள் என்று எண்ணினாலும் அதை பார்த்தபொழுது பெரும்மகிழ்ச்சிதான் ஆனால் கோவிலின் பின்புறம் திருஞானசம்பந்தர் இயற்றிய திருக்கேதாரம் தமிழிலும் இந்தியிலும் கல்லில் பொறித்து வைத்திருந்ததை முதல் முறை சென்ற பொழுது பார்க்காமலே திரும்பிருந்தேன், அதற்க்குகாரணம் கோவிலை நெருங்கும்முன்பே சூழ்ந்த இருளும் முதல் முறை சென்ற பொழுது இருந்த மக்கள் கூட்டமாகவும் இருக்கலாம்.






அலங்கரிக்கப்பட்டு இருந்த கேதாரனாதர் புலித்தோல் போத்திருந்த்தாக தோன்றியது அலங்காரம் அப்படி, பயணம் முழுவதுமாக வெற்றிபெற்றுவிட்டது என்று எண்ணிக்கொண்டேன், அதற்குள் மின்னல் போல வெளியேறவேண்டி இருந்தது . அதிக மக்கள் கூட்டம் என்பதால் சில நிமிடங்களுக்குள்ளே வலபக்க வழியாக வெளியேறினேன். கோவிலுக்கு பின்பு இன்னும் ஒரு சிறிய கோவில் அதற்குள் செல்ல, லிங்கத்தை தொட்டு பூசை செய்துக்கொண்டிருந்தனர். நானும் ஒரு சுற்று சுற்றிவிட்டு. வெளியே வரும்பொழுது இன்னும் கடுமையாக குளிர் இறங்க ஆரம்பித்தது. கோவிலை ஒரு சுறு சுற்றிவிட்டு தங்க அறை தேட எங்கும் கிட்டவில்லை முழுவதுமாக ஆக்கரமிக்கப்பட்டிருந்தது அறைகள், கேதர்நாத்தின் அனைத்து வீதிகளிலும் (இருப்பதே நாலு வீதிதான்) சுற்றியும் எங்கும் அறை கிடைக்கவில்லை, கௌரிகுந்த் செல்லலாம் என்றால் மிகவும் இருட்டிவிட்டது, என்னசெய்யலாம் என்று ஒரு மடத்தின் வெளியில் நின்று யோசித்துக்கொண்டிருக்கும் பொழுதே தம்பி அஞ்சு டிகிரிக்கு கீழ இருக்கும் இப்படி பேன்ட் கூட போடாம இருக்கியே உடம்பு சரியில்லாம போய்டும் என்று கண்டிக்கும் தொனியில் அந்த மடத்தை சேர்ந்தவர் கூற, பேன்ட்டை எடுத்து அங்கேயே சாட்ஸ் மேல் போட்டுக்கொண்டேன். திரும்பவும் ஒரு முறை கேதார் தெருக்களை வளம் வந்து எங்காவது அறை கிடைக்குமா என்று தேடிக்கொண்டே இருந்தேன். அந்த அந்த மாநிலத்தவருக்கு மட்டுமே முன்னுரிமை அந்த மடங்கள் கொடுக்கின்றன. தமிழர்களுக்கு என்று ஒரு இடம் அங்கு இல்லாதது பெரும் குறைதான் இத்தனைக்கு தமிழர்கள் அதிகம் செல்லும் இடம் அது. நீண்ட நேரத்துக்கு பிறகு தங்க இடம் கிடைக்கும் என்று நம்பிக்கை இழந்து ஒரு கடையில் அமர்ந்து விசாரிக்க, ஒருத்தர்தானே நான் உதவி செய்யுறேன் ஆனா அவர் கேக்குற தொகைய கொடுத்துடுங்க என்று கூறினார், சிறிது நேரத்தில் ஒருவர் வந்து கூட்டிச்சென்றார்.


இடம் நன்றாக இருந்தது என்று எல்லாம் கூற முடியாது ஒரு ஐந்து மணிநேரம் தங்க தானே என்றும், இது கிடைத்ததே பெரிது என்றும் நினைத்து காசை கொடுத்து விட்டு உள்ளே சென்றால் பெரிய அறையில் இன்னும் நான்கு பேர் இருந்தனர் உத்திரபிரதேசத்தை சேர்ந்தவர்கள். யாருன்னே தெரியாதே என்று எண்ணினாலும் வேறு வழியில்லாமல் தங்க வேண்டி இருந்தது, என்ன வேல பாக்குறிங்கன்னு என்னை ஒருவர் கேட்க பதில் கூறிவிட்டு, அவர்களை நான் கேட்க ஒருவர் பண்டிட் என்று மிடுக்காக கூறினார், அந்த ஐந்து மணிநேரமும் மெதுவாக கடக்க சிலமணி நேரங்கள் தூங்கியும் இருந்தேன், விடியற்காலையில் விழித்ததும் அவர்களை காண அவர்களும் கிளம்ப தயாராக இருந்தனர் ஒருவர் என்னையும் வா என்று கூட்டிசெல்ல அவர்கள் பின்னால் தொடர்ந்தேன் கோவிலின் வெளியில் இருந்து வணங்கிவிட்டு (விடியற்காலையே பெரிய வரிசை நின்றுக்கொண்டிருந்தது) கௌரிகுந்த்தை நோக்கி நடக்க தொடங்கினோம்.


தேடல் தொடரும்....

குறிப்பு : புகைப்படங்கள் அனைத்தும் மூன்றாவதுமுறை சென்றபொழுது எடுத்தது

பத்ரிநாத் - குப்தகாசி - கேதர்நாத் - பகுதி 4

*


கிடைக்கும் வண்டியை கொண்டு சமோலி, கோபிஸ்வர், குந்ட் , குப்தகாசி , கௌரிகுந்த் வழியாக கேதர்நாத்தை அடையலாம் என்று எண்ணி சமோலி வரை செல்லும் மகேந்திரா வண்டியில் ஏறினேன் உத்ராஞ்சல் மலைகளில் இருக்கும் ஊர்களுக்கு செல்ல அதிகம்கிடைப்பது மகேந்திரா வண்டிகள்தான் தினபோக்குவரத்து பயன்பாட்டில் இதன் பங்கு இன்றியமையாததாக விளங்குகின்றது. அனைத்து இருக்கைகளும் ஆட்கள் கிடைத்தபிறகுதான் வண்டியை எடுப்பார்கள் சில சமயம் உடனே இருக்கைகளுக்கு ஆட்கள் வந்துவிடுவார்கள். இல்லை என்றால் ஆட்கள் கிடைக்கும் வரைவண்டியை எடுக்க மாட்டார்கள். ஒரு வழியாக ஜோஷிமத் வழியாக சமோலியை அடைந்து அடுத்து கோபிஸ்வர் வண்டிக்காக காத்திருக்கதொடங்கினேன்.

பிறகுதான் தெரிந்தது நேரமாகிவிட்டதால் கோபிஸ்வர் சென்றாலும் கௌரிகுந்த் செல்லும் வண்டியை பிடிக்க முடியாது என்று. வந்தவழியே செல்லாமல் புது வழியாக செல்லலாம் என்ற என் எண்ணம் நிறைவேறாமல் போக, அடுத்த வண்டியை பிடித்து நன்ட்ப்ரயாக்வழியாக கரன்பிரயாக் சென்றடைந்தேன். தெரியாத ஊர்களில் தனியா சுற்றுவதில் பயம் சிறிதும் இல்லை மாறாக மகிழ்ச்சியாகத்தான் இருந்தது. வரைபடம் இருந்ததால் வழிகள் அறிந்துகொள்வது சுலபமாக இருந்தது. டி.ஷர்ட், ஷார்ட்ஸ், தோலில் ஒரு பை, கையில் ஒரு தண்ணிர்பாட்டிலோடு கரன்பிரயாக்கில் திறிந்துகொண்டிருந்தேன். இந்த பயணம் முழுவதும் இதே கோலத்தில்தான் சுற்றிக்கொண்டிருந்தேன். ஒரு வழியாக ருத்ரபிரயாக் செல்லவண்டி கிடைத்து சிறிது நேரத்தில் ருத்ரபிரயாக்கை அடைந்தேன், ருத்ரபிரயாக் கொஞ்சம் பெரிய ஊர் அங்கு உணவை முடித்துக்கொண்டு அடுத்து குப்தகாசி வண்டியை பிடித்து குப்தகாசியை நோக்கி பயணித்தேன்.



தொலை தூர ஊர்களுக்கு நேரடியாக வண்டிகள் அதிகம் இல்லை மாறிதான் செல்லவேண்டி இருந்தது என் கோலத்தை பார்த்து பக்கத்தில் அமர்ந்திருந்தவர் எங்கு இருந்து வறிங்க என்று வினவ, நான் பத்ரியில் இருந்து வருகின்றேன் என்று கூற, என்ன எல்லாம் யமுநோதரி, கங்கோதரி, கேதர்நாத், பத்ரிநாத்ன்னு போவாங்க நீங்க பத்ரில இருந்து எதிர்வரிசையில் ஆரம்பிசிருகிங்க என்று சிரித்துக்கொண்டேகேட்டார், எனக்கு அந்த வரிசை முறை எல்லாம் தெரியாது என்று கூறி, அடுத்து கேதர்நாத் செல்லவேண்டும் எங்கு தங்கலாம் கௌரிகுந்தில் அறை கிடைக்குமா என்று கேட்க, அவர் கூட்டம் அதிகமாக இருக்கும் அறை கிடைக்கலனா சிரமமா போய்டும் அதனால குப்தகாசியிலேயே தங்கிடுங்க ஊரும் கொஞ்சம் பெரிய ஊர் என்றார், பேசிக்கொண்டிருக்கும் பொழுதே குந்ட் என்ற இடத்தில் வண்டி நின்றது மூன்று சாலைகள் பிரிந்தன ஒன்று கோபிஸ்வர் செல்ல அடுத்து குப்தாகாசி செல்ல மற்றொன்று நான் ருட்ரப்பியாகில் இருந்து வந்தபாதை, கோபிஸ்வர் வழியாக வந்தால் இங்கு தான் வந்து சேரும் என்று எண்ணிக்கொண்டேன் அதையே அரிகில் இருப்பவரிடம் கேட்டு உறுதிபடுத்திக்கொண்டேன்.



(குப்தகாசி)

குப்தகாசி வருவதற்குள் நான்குமணி இருக்கும் அறை தேடி திரும்ப அலைய தொடங்கினேன் ஒன்று அல்லது இரண்டு இடத்தில் மட்டும் அறை இருப்பதாக கூறினர் ஆனால் தனியாக வந்ததை அறிந்து கொடுக்கமறுத்துவிட்டனர் அதற்கான காரணம் அப்பொழுது தெரியவில்லை, ஏன் தனியா வந்தா கொடுக்கமாட்டேன்கிறாங்க என்று யோசித்துக்கொண்டே ஒரு நுழைவாயிலை கடந்து மேடான பகுதியை நோக்கி நடக்க தொடங்கினேன். சில நூறு மீட்டர் கடந்தவுடன் ஒரு கோவில் வந்தது அதை கடந்து ஒரு விடுதியை அடைந்தேன் பேருந்து நிறுத்தத்தில் தேநீர் அருந்தும் பொழுது இந்த விடுதியை பற்றி அந்த கடைக்காரர் கூறினார். அங்கு முதலில் அறை இல்லை என்று கூறினாலும் பிறகு ஆறுமணிக்கு மேல் வாருங்கள் எங்கள் மக்கள் யாரும் வரவில்லை என்றால் உங்களுக்கு (அவர்கள் மாநிலத்து மக்கள்) அறை தருகிறோம் என்று கூறினார், அறை கிடைக்கும் என்ற நம்பிக்கை முழுவதுமாக எனக்கு வந்திருந்தது, பொழுதை கழிக்கத்தான் வழியில் இருந்த காசி விஸ்வநாதர் கோவிலுக்கு சென்றேன், கோவிலுக்குள் நுழைந்தவுடம் ஒரு சிறிய குளம் படிகட்டின் வழியாக இறங்கினால் இரு பக்கத்திலும் காளை மற்றும் ஆட்டு தலை போன்ற உருவத்தின் வாயிலிருந்து நீர் வந்துகொண்டிருந்தது சிறு நிறுத்தம் கூட இல்லாமல்.







எங்கிருந்து நீர் வருகிறது என்று யாருக்கும் தெரியவில்லை ஒன்று கங்கை என்றும் மற்றொன்று யமுனை என்றும் அங்கிருந்தவர்கள் கூறினர் ஏதோ குழாய்வைத்து தண்ணீர் விடுவது போல் இருந்தது ஆனால் இயற்கையாகவே வருகிறது என்று அங்கிருந்தவர் கூறினார் குடிப்பதற்கு அந்த நீரை எடுத்து சென்றுகொண்டிருந்தனர். கேதர்நாத் கோவில் கட்டபட்டபொழுது இந்த கோவிலும் கட்டப்பட்டது என்றுவெளியில் இருந்த கடைகாரர் கூறினார். எனக்கு அந்த கோவிலை பற்றி எதுவும் தெரியாது என்பதால் அணைத்திருக்கும் தலையைஆட்டினேன். ஆனால் அடுத்தடுத்த கேதர் பயணங்களில் குப்தகாசி கோவிலுக்கு செல்வதை கட்டாயமாக்கி கொண்டேன். அந்த வழிப்போக்கரினால்தான் குப்தகாசி கோவிலை பார்க்க வாய்ப்பு கிடைத்ததாக நினைத்துக்கொண்டேன் இன்னும் நேரம் இருந்ததால் கௌரிகுந்த் செல்லும் சாலையில் நடக்க தொடங்கினேன் ஊரை விட்டு இருநூறு மீட்டருக்குள் ஒரு மரத்தின் அருகில் சாலையின் ஓரத்தில் அமர்ந்துகொண்டேன் காரணம் அதற்கடுத்து இருந்த பள்ளத்தாக்கு, மாலை வேலை அழகான சூழல் அமையான இடம் துணைக்கு சில மேகங்கள், இதமான குளிர் என்று சிறிது நேரம் கடந்தது அடுத்த முறை சென்றபொழுதும் அந்த இடத்திற்கு சென்றதாக நினைவு, அமர்ந்து சிறிது நேரத்திலேயே நான் எங்கோ தூர தேசத்தில் சொர்கத்தின் எதிரில் அமர்ந்திருந்ததாக எண்ணிக்கொண்டேன். எதிரே தூரத்தில் சிறு கோடு போல சாலைகள் அதில் விளையாட்டு பொருட்கள் போல வண்டிகள், சொல்லாமல் வந்து அதனை மறைக்கும் மேகங்கள் சிறிது நேரத்தில் மீண்டும் தெளிந்த காட்சி என்று நேரம் கடந்தது, ஏதோ பெரியதாக சாதித்துவிட்டதாக நினைத்துக்கொண்டேன் அல்லது இத்தனை அழகான இயற்க்கையை பார்த்ததில் ஒரு மனநிறைவு.

இருட்டதொடங்கியவுடன் நேராக விடுதிக்கு செல்ல அவர்கள் தங்குவதற்கு ஏதாவது ஒரு அடையாள அட்டை கேட்டனர், நான் ஒருஅட்டையை கொடுக்க அரசாங்க அட்டைதான் வேண்டும் என்று கூறிவிட்டனர் பிறகு நான் என் வருமானவரி அட்டையை (பான் அட்டை) கொடுக்க, அறையை காலி செய்யும் பொழுது திரும்பிவாங்கி கொள்ளலாம் என்று கூறினர், முதலில் கொடுத்த அறை சரியில்லாததால் வேறு அறை கேட்க வாடகை அதிகம் ஆகும் என்று கூறினர் பரவாயில்லை என்று வேறு அறையை எடுத்துக்கொண்டேன், விடியற்காலையிலேயே எழவேண்டும் எண்ணம் அடிகடி வந்து சென்றது விடியற்காலையில் எழுந்து கிளம்பி முதல்வண்டியை பிடிக்க சென்றேன் சாவி ஒப்படைக்கும் பொழுது என்னுடைய வருமானவரி அட்டையை வாங்கிக்கொண்டு பேருந்துநிறுத்தத்தை நோக்கி நடக்கத்தொடங்கினேன். என்னை போல பலரும் அந்த வண்டிக்காக காத்திருந்தனர், வண்டி கிளம்பி பாதி தூரம்செல்வதற்குள் வாகன நெரிசலில் சிக்கிகொண்டது. வெகுநேரம் சென்றும் வாகன நெரிசல் தீராததால் அருகில் இருந்த கடைக்கு சென்று தேநீர் அருந்த தொடங்கிநோம். வெகு நேரம் கழித்து சிறிது சிறிதாக வண்டி நகர்ந்தது.

ராம்பூரை கடந்து சோன்பிரயாக் வரை வண்டி ஊர்ந்து சென்றது சோன்பிரயாகை கடந்து சில நிமிடங்களில் இதற்க்கு மேல் போகாது இங்கயே இறங்கிகொள்ளுங்கள் என்று ஓட்டுனர் கூற இறங்கி நடக்கத்தொடங்கினேன். வழி எங்கும் வரிசையாக வாகனங்கள் பெரும்பாலான மக்கள் வாகனங்களை விட்டு இறங்கி சாலையில் நின்றுகொண்டிருந்தனர். ஒரு சோதனை சாவடி இருந்தது மேலிருந்து வரும் வண்டிகளை மட்டும் தான் விட்டு கொண்டிருந்தனர் நெரிசலை தவர்க்க குறிப்பிட்ட நேரம் இப்படி செய்வார்கள் என்று கூறினார்கள். ஆனால் நடந்து போக தடை இல்லை.

தனியாக கௌரிகுந்தை நோக்கி நடக்க தொடங்கினேன் அடர்ந்த மரங்கள் சாலையில் ஒரு புறம் சிறிய ஆறு ஓடிகொண்டிருந்தது, ஒரு சிறு பாலத்தை கடக்கும் பொழுது ஆற்று தண்ணீரின் ஓசை மட்டுமே கேட்டது பிறகு பறவைகளின் ஓசை என்று தனிமையில் ரசித்துக்கொண்டே நடக்கத்தொடங்கினேன், கண்ணுக்கெட்டும் தூரம் வரை முன்னும் பின்னும் ஆள்நடமாட்டம் இல்லை. ஏதாவது வனவிலங்கு வந்துவிட்டாள் என்ன செய்வது என்று உள்ளுக்குள்தோன சமாளித்துக்கொள்ளலாம் என்று மனம் சமாதானம் செய்தது மூன்று நான்கு கி.மீ க்கு மேல நடந்திருப்பேன் பிறகு ஒரு வண்டி வந்தது கைகாட்டி நிறுத்த சில நிமிடங்களிலேயே கௌரிகுந்த்தை அடைந்தோம். அடுத்து பதினான்கு கி.மீ நடைபயணம் செய்யவேண்டும் செய்தால் கேதர்ரை சந்திக்கலாம். கேதர் செல்வதற்கு விநாயகர் ஒரு வாயிலில் அமர்ந்து வரவேற்றார் நான் அவரை நோக்கி நடக்கத்தொடங்கினேன்.

தேடல் தொடரும்....


குறிப்பு : புகைப்படங்கள் அனைத்தும் மூன்றாவதுமுறை சென்றபொழுது எடுத்தது

பத்ரிநாத் - குப்தகாசி - கேதர்நாத் - பகுதி 3

*


சமோலி சென்று வண்டி மாறி செல்லுங்கள் என்று பலர் கூற ஏனோ அப்படி போக தோணவில்லை, ஒரு நாள் பத்ரியில் தங்கிவிட்டு போகலாம் என்று முடிவுக்கு வந்து விடுதிஅறை தேட ஆரம்பித்தேன், ஆனால் நினைத்தது போல் எங்கும் அறை காலி இல்லை என்ற வசனம்தான், நடப்பது நடக்கட்டும் என்று பனி படர்ந்த மலையை நோக்கி நடக்க ஆரம்பித்துவிட்டேன் அது பத்ரிநாத் கோவிலுக்கு பின்புறம் அமைந்திருந்தது, சிறுது தூரத்திற்கு பிறகு சிறு சிறு குகைகள் சிறிய கோவில்களை பார்க்க முடிந்தது. அதிக மனித நடமாட்டம் கிடையாது. ஒரு சிலர் எதிரே தென்பட்டனர் ஒருவரும் மலைக்கு சென்றிருக்க வாய்ப்பில்லை என்று எண்ணிக்கொண்டேன்.


மலைக்கு ஏறுவதற்கு இடப்பக்கம் பெரிய பனிப்பாறை போன்று ஒரு கி.மீ மேல் பறந்து விரிந்து கிடந்தது. முதல் முறை பார்த்ததால் வித்தியாசமாக இருந்தது அங்கேயே கரையில் நின்றுவிட்டேன். அருகில் இருவர் இருந்தனர் அந்த பனி பாறை தொடங்கும் இடத்தை பார்க்க எண்ணி மலைஇருக்கும் திசையை நோக்கி பார்க்க கன்னுகெட்டும் தூரம் வரை அது பறந்து விரிந்து கிடந்தது. பணிகட்டிமேல் இறங்கி நடக்கலாமா என்று யோசித்துகொண்டிருக்கையில் அருகில் இருந்த இருவரில் ஒருவர் முதலில் ஒரு குச்சியையும் பிறகு ஒரு காலையும் வைத்து தட்டி பார்த்து இறங்க தொடங்கினார். துணைக்கு ஒருவர் கிடைக்க நானும் கட கட என்று கீழே இறங்கினேன், என்னை தொடர்ந்து முதலில் இறங்கியவரின் நண்பரும் இறங்கினார். முழங்காலுக்கு மேல் இருக்கும் பனிகட்டியின் உயரம் அதன் அடியில் ஊற்று போல தண்ணீர் ஓடிகொண்டிருந்தது. கையில் கொண்டு சென்ற குச்சியை கொண்டு பணிகட்டியில் கிறுக்க தொடங்கினேன் தமிழ் என்று சரியாக தெளிவில்லாமல் கிறுகிருந்தேன்.




இறங்குவதற்கு முன்பணிகட்டிகளின் மீது எறிந்திருந்த சிறுகற்கள் ஆங்காங்கு சிறு துளையை ஏற்படுத்தி பாதி வெளியே தெரிவது போல் இருந்தது அதில் ஒரு கல்லை எடுத்து பெரியதாக தமிழ் என்று எழுதினேன், அதை பார்த்து அருகில் இருந்தவர் என்ன எழுதிருகிங்க என்று கேட்க, அவருக்கு பதில் சொல்லிக்கொண்டே சிறுகுழந்தை போல பணிகட்டியில் சறுக்கி விளையாட தொடங்கினேன் என்னை பார்த்த அவர்கள் இருவரும் சறுக்கி விளையாட தொடங்கினார்கள், ஒருவருக்கு முப்பதைந்திருக்கும் இன்னொருவருக்கு நாற்பது வயதிருக்கும்.

( அடுத்த முறை சென்றபொழுது அங்கு பனிபாறைகள் இல்லை ஒரு ஆறு ஓடிகொண்டிருந்தது முதல்முறை சென்றபொழுது அதன் மீதுதான் விளையாடிகொண்டிருந்தேன் என்று நினைக்க சிலிர்ப்பாக இருந்தது, கொஞ்சம் பனிப்பாறை கரைந்திருந்தாலும் முதல் முறையே சிவலோகத்தை பார்த்திருப்பேன்)

சிறிது நேர விளையாட்டுக்கு பின் மீண்டும் மேலே ஏற தொடங்கினேன் அதற்குள் அவர்கள் இருவரிடமும் நல்ல அறிமுகம் கிடைத்துவிட்டது ஒருவர் மட்டும் புதிதாக வந்திருப்பதாகவும் அடுத்தவர் ஒவ்வொரு வருடமும் வந்து ஒருமாதம் தங்கிருந்துவிட்டு செல்வதாகவும் கூறினார். நேரம் போனது தெரியாமல் அங்கேயே சில மணிநேரம் இருந்திருக்க கூடும் இறுதியாக திரும்பும் பொழுது அவர்கள் எங்க தங்கிருகிங்க என்று வினவ இன்னும் அறை கிடைக்கவில்லை போய்த்தான் தேடனும் என்று கூறினேன், அறை கிடைப்பது கடினம் என்று கூறினார் பத்ரிநாத்தை நன்கு தெரிந்த அவர். சிறிது நேரத்திலேயே உங்களுக்கு விருப்பம் இருந்தால் எங்களுடனே தங்கலாம் ஒரு மடத்துக்கு சொந்தமான இடத்தில் தான் தங்கிருக்கிறோம் என்றார்.

சில மணிநேர பழக்கம்தான் என்றாலும் பெரியதாக நான் யோசிக்கவில்லை உடனே ஒப்புக்கொண்டேன் மடம் என்பதால் எதுவும் பிரச்சனை இருக்காது என்று என் மனம் என்னிருக்கலாம். வாடகை எவ்வளவு என்று கேட்க ச்சே ச்சே அது எல்லாம் இல்லை என்றார்.




கீழே இறங்கி கோவிலுக்கு அருகில் ஒரு பாலத்தின் தொடக்கத்தில் சிறிது நேரம் அமர்ந்தோம் பல காவிவுடை சாமியார்கள் கடந்து சென்றுகொண்டிருந்தனர், அங்கு அமர்ந்துகொண்டே சுற்றிலும் இருந்த மலைகளை பார்த்துக்கொண்டிருந்தேன். பிறகு ஒரு மடத்திருக்கு கூட்டிசென்றனர் அங்கு ஒரு சாமியார் அங்கு நின்றுகொண்டிருந்த மற்ற சாமியார்களுக்கு எதோ ஒரு சீட்டை கொடுத்துகொண்டிருந்தார், உணவு உண்பதற்காக இருக்கலாம் என்று எண்ணிக்கொண்டேன் என்னை அவர்கள் கூட்டிக்கொண்டு அந்த மடத்தின் தலைமை சாமியார் அறைக்கு சென்றனர், அந்த அறை முழுவதும் கடவுளின் படங்கள் அவர்கள் இருவரும் வயதான சாமியாரின் காலில் விழுந்து ஆசி வாங்கினார் பிறகு தரையில் அமர்ந்தனர், சாமியாரும் தரையில் அமர்ந்தார் நானும் அவர்கள் அருகில் அமர்ந்துகொண்டேன் அவர்கள் பேசிகொண்டிருகையிலே இன்னொரு சாமியார் அந்த அறைக்கு வந்து என்னருகில் அமர்ந்தார் நிறைய ருட்ராக்ஷ்மாலை அணிதிருந்தார். எப்படி நல்ல ருட்ராக்ஷத்தை கண்டறிவது என்று என்னருகில் வந்தமர்ந்த சாமியாரிடம் கேட்க நீரில் மூழ்கினால் நல்லது மிதந்தால் போலி என்று கூறினர். எங்கிருந்து ருத்ராக்ஷம் வருகிறது என்று கேட்க நேப்பாளிலிருந்து வருகிறது என்று கூறினார். எனக்கு ஒரு ருத்ராக்ஷம் வேணும் என்று கூற நாளை காலை வா கண்டிப்பாக வாங்கி வைக்கிறேன் என்று கூறினார். ஆனால் போதையூட்டும் தண்ணீர், அசைவம் கூடவே கூடாது என்றார் ஏற்கனவே அவைகளை தொடுவதில்லை என்று கூற புன்னகை அவரிடம் இருந்து வந்தது.அது கொஞ்சம் பெரிய மடமாக இருந்ததால் அங்கு தான் தங்கபோகிறோம் என்று என்னிருந்தேன் ஆனால் அங்கிருத்து வேறு ஒரு இடத்துக்கு கூட்டிசென்றனர்.


கொஞ்சம் உயரமான பகுதியில் அமைந்த ஒரு வீட்டுக் கூட்டிசென்றனர். அங்கு ஒரு வயதான துறவி இருந்தார், என்னை பற்றி கூட்டிசென்றவர் அவரிடம் சொல்ல, சிரித்துக்கொண்டே தாராளமாக தங்கிக்கோ ஒரு உருளைகிழங்கு கொஞ்சம் கோதுமை மாவுதான் கூட போடபோறேன் வேறு ஒன்னும் பெருசா நா செய்யபோறது இல்ல என்று புன்னகையுடன் கூறினார். அந்த வீட்டில் பாதி பூசை அறைதான் இருந்தது. சிறிது நேரத்திலேயே கடவுள் சிலைகள் மற்றும் பூசை அறையை சுத்தம் செய்து விளக்கேற்றி உடுக்கை அடித்து பூசையை தொடங்கினார் ஒரு மணிநேரத்துக்கு மேல் வழிபாடு தொடர்ந்தது அனைத்து இந்து கடவுள்களும் அங்கு இருந்தது. பூசை முடிந்ததும் திருநீறு கொடுத்தார். பிறகு சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தோம். கைலாயத்துக்கு செல்ல கடுவுசீடு, குடியுரிமை பற்றி தெரியாமல் உத்ராஞ்சல் எல்லை வரை சென்று திருப்பி அனுப்பப்பட்ட நிகழ்ச்சியை கூறினார்.



சிறிது நேரத்திலேயே என்னை கூட்டிவந்தவர் சமையலுக்கு வேண்டிய உதவிகள் செய்ய சப்பாத்தியும், உருளைக்கிழங்கு குருமாவும் செய்து கொடுத்தார். உணவு முடித்த பின் நன்கு இருடிருந்தது. அந்த வீட்டுக்கு ஒட்டியே இன்னொரு வீடு இருந்தது அந்த வீட்டில்தான் தங்க போகிறோம் என்றார், மூன்று நான்கு கட்டில்கள்இருந்தது கம்பளி போர்வைகள் ஏராளமாக இருந்தது. எங்கு விருப்பமோ அங்கு படுத்துக்குங்க என்று கூறினார் கூட்டிசென்றவர். ஒரு கட்டிலில் படுத்து மூன்று கம்பளிகள் போர்த்தியபிறகுதான் குளிர் அடங்கியது போல் இருந்தது எங்காவது விடுதியில் அறை கிடைத்திருந்தாலும் இத்தனை வசதி இருந்திருக்காது என்று மனம் கூறியது. நால்ல உறக்கம். லேசான குளிர் இருந்துகொண்டே இருந்தது உடம்பின் சூடு அதை தணிக்கும் பொருட்டு இருந்தது ஒரு புதுவிதமான உணர்வு உணரமுடிந்தது.

காலை வண்டிக்கு செல்லும் பொருட்டு விடியற்காலையிலேயே என்னை எழுப்பிவிட்டனர். வெளியில் வந்து வலது புறம் திரும்பி பனிபடர்ந்த மலையைகாண என்னையறியாமல் என் இருகரங்களும் தலைமேல் கூப்பி வணங்கியது. அனைவருக்கும் அந்த மலையை காணும் பொழுது அப்படிதான் தோனுமா என்று தெரியவில்லை ஆனால் எனக்கு பின்பு வந்த இருவரும் அவ்வாறே செய்தனர்.

காலையில் புறப்பட தயாராகியபிறகு அந்த வயதான பெண்துறவியின் வீடிற்கு சென்றோம் சிறிது நேரம் தரையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம் அவர் எனக்கு முன்பு தரையில் அமர்ந்திருந்தார், கிளம்பும் முன் அமர்ந்தவாறே அவரின் காலுக்கு நேராக குனியவும், மாதாஜிகிட்ட ஆசி வாங்கிக்கோ என்று என்னை கூறிவந்தவர் சொல்லவும் சரியாக இருந்தது. என் வாழ்க்கையில் இரண்டாவது முறை காலில்விழுந்து ஆசி வாங்கியது அன்றுதான் (முதல் முறை என் அன்னையிடம் பதினைந்து வயதில் ஆசி வாங்கினேன்). என் முதிகில் கைவைத்து இரண்டு மூன்று முறை தட்டி எதோ கூறினார், நல்லருன்னுதான் சொல்லிருப்பார் என்று எண்ணிக்கொண்டேன். ( அங்கு அனைவரும் முதுகில் தட்டிதான் ஆசி வழங்குகிறார்கள்). துறவியிடம் ஆசி வாங்கினால் நல்லது என்று எல்லாம் எண்ணி காலில் விழவில்லை, ஊர் பேர் தெரியாத என்னக்கு ஒரு நாள் தங்க இடம் கொடுத்து ஒரு வேலை உணவு கொடுத்த அந்த மனது என்னை காலில் விழவைத்தது.

பிறகு நேராக கரம்குந்த்துக்கு சென்று நீராடிவிட்டு கோவிலுக்கு செல்லலாம் என்று என்ன நீண்ட வரிசை கண்ணுக்கு தென்பட அப்படியே கிளம்புவதாக அவர்களிடம் கூறிவிட்டு பேருந்துநிலையத்தை நோக்கி நடக்கத்தொடங்கினேன், அவர்கள் இருவரும் கோவிலுக்கு சென்றனர், எனக்கு பெரும்உதவி செய்தவருக்கு நன்றி என்று கூறினேன் அது பத்தாது என்று என் மனம் கூறினாலும் வேறு என்ன சொல்வது என்று அப்பொழுது தெரியவில்லை. எனக்கு அவர் உதவி செய்தது இறையின் செயல்தான் என்று என் மனம் எண்ணிக்கொண்டது, இந்த முறை கேதர்நாத் செல்லும்வண்டி நிரம்பிவிட்டதால் சீக்கிரம் எடுத்துவிட்டனர். வேறுவழியில்லாமல் எப்படியாவது இன்று செல்லவேண்டும் என்று வரைபடத்தை எடுத்து பார்க்க தொடங்கினேன்.


தேடல் தொடரும்...

குறிப்பு : புகைப்படங்கள் அனைத்தும் இரண்டாவதுமுறை சென்றபொழுது எடுத்தது

பத்ரிநாத் - குப்தகாசி - கேதர்நாத் - பகுதி 2

*
பகுதி 1 படிக்க இங்கு சொடுக்கவும்



ஜோஷிமத் வருவதற்குள் என் பக்கத்து இருக்கையில் பெரியவரும் அவரது மனைவியும் மாறி மாறி அமர்ந்து வந்தனர்(முழுக்குடும்பமும் வந்ததால் அவர்கள் பேச்சிதுனைகேர்ப்ப அவ்வபோது மாறி அமர்ந்துகொண்டனர்), இருவருமே வயதானவர்கள். அந்த பாட்டி அவர்கள் வீட்டில் செய்து கொண்டுவந்த தின்பண்டத்தை கொடுக்க பேருக்கு ஒன்று எடுத்துக்கொண்டேன். பேருந்து பயண வழியெங்கும் இருசக்கர வாகனங்களில் வரும் சர்தார்களை காணமுடிந்தது எனக்கு அருகில் அமர்ந்திருந்த பெரியவரை அது பற்றி கேட்க இந்த வழியாக செல்லும் அனைத்து வாகனங்களும் பத்ரிநாத்துக்குதான் செல்லும் என்று கூறினார், எனக்கு அவர் பதிலில் உடன்பாடு இல்லை. தெரியாமல் சொல்கிறார் என்று உறுதியாக நினைத்தேன்.

ஜோஷிமத்தில் வண்டி இறக்கிவிட்ட இடத்தில் நிற்பதை பார்த்த பக்கத்து இருக்கை பெரியவர் அவர்களுடன் வந்து தங்கிகொள்ளும்படி கூறினர்(அறை பக்கத்திலேயே இருந்தது), தயக்கம் இருந்தாலும் எனக்கு வேறு வழியில்லை ஆகவே அவருடன் சென்றேன், நான் சென்ற வண்டியில் இருந்தவர்களில் பெரும்பாலோனோர் அங்கு இருந்தனர், புதியதாக கடைக்காக கட்டப்பட்ட இடத்தை வாடகைக்கு விட்டதில் எங்கள் வண்டியில் வந்தவர்களுக்கு அந்த இடம் கிடைத்தது. கூடவே பெட்டும் வாடகைக்கு கிடைத்தது. நான் கதவின் அருகிலேயே படுத்துக்கொண்டேன், பின்பு என்னருகில் பெரியவரின் மகன் வந்து படுத்துக்கொண்டார். எங்களுடன் பயணித்த மிக வயதான தம்பதிகளும் (இவர்கள் வேறு, இருவர் மட்டும் வந்திருந்தனர்). படுப்பதற்கு முன் அந்த தாத்தா சூடத்தை பற்றவைத்து சுற்றிலும் காட்டிவிட்டு அனைவருக்கும் திருநீறு கொடுத்தார். தூங்க ஆரம்பித்து சிலநிமிடங்களிலேயே யாரோ எழுப்புவது போல இருந்தது.

எழுப்பியது பெரியவரின் மருமகன், விடியற்காலையிலேயே எழுப்பிவிட்டனர், எழமனமில்லாமல் எழுந்து கிளம்பதுடங்கினேன். வரிசையாக தயார் நிலையில் நின்றுகொண்டிருந்தன வண்டிகள், நான் வந்த பேருந்தை கண்டுபிடித்து ஏறிக்கொண்டேன். சாலை திறக்கப்பட்டதும் வண்டிகள் நகர தொடங்கின, சாலைகள் நன்றாக இருந்தது என்று கூற இயலாது. வண்டி விஷ்னுப்ரயாக், கோவிந்க்காட் வழியாக சென்றது, ஜோஷிமத்திலிருந்து கோவிந்க்காட்டுக்கு இருபத்தி இரண்டு கி.மீ, கோவிந்க்காட்டிலிருந்துதான் ஹெம்குந்து செல்லவேண்டும், சீக்கியர்களின் புனிதஇடமாக இது விளங்குகிறது ஆனால் 15 கி.மீட்டர் மலையில் நடந்து சென்றுதான் அந்த இடத்தை அடையமுடியும். (சீக்கியர்கள் இருசக்கர வாகனங்களில் கானபட்டதர்க்கான காரணம் இதுதான்). வழியிலே ஒருவர் கைகாட்ட வண்டியை நிறுத்த அவரை எற்றிக்கொண்டனர் வேட்டிமட்டும் அணிதிருந்தார் மேல் சட்டை இல்லை கையில் பெரிய குச்சி அதில் முள் முள்ளாக இருப்பது போல் இருந்தது, அவரிடம் நடத்துனர் பயனசீட்டுக்கு காசு கேக்க, தன்னிடம் காசு இல்லை என்றும் தான் பாபா என்று கூறினார் (வடஇந்தியாவில் அனைத்து சாமியார்களையும்,யோகிகளையும் பாபா என்று தான் அழைப்பர்), சிறிது நேரத்தில் ஏன் இந்தமாதரி கம்ப வச்சிருக்கிங்க முள் முள்ளா இருக்கு என்று நான் கேக்க காடுகளில் இருப்பதால் மிருகங்களில் இருந்து பாதுகாக்க இதை வைத்திருக்கிறேன் என்று கூறினார்.

வண்டி பண்டுகேஷ்வர்ரை கடந்து ஹனுமான் சட்டியை நெருங்கும்பொழுதே பனிபடர்ந்த மலைகளை காண முடிந்தது, வாழ்கையில் அருகிலிருந்து பணிபாறைகளை முதலில் நான் கண்டது இங்குதான். ஹனுமான் சட்டிலிருந்து பத்ரிநாத் 11 கி.மீ தொலைவில் இருக்கின்றது. ஜோஷிமத்திலிருந்து பத்ரிநாத் வரும் வழி மிக அழகாகவும் அபாயகரமானதாகவும் இருக்கின்றது. ரிஷிகேசிலிருந்து பத்ரிநாத்துக்கு முன்னூறு கி.மீட்டர் பயணத்தை முடித்து பத்ரிநாத்தை அடைந்ததும், வண்டியிலிருந்து "பத்ரிநாராயண மூர்த்திக்கு ஜெ", " பத்ரி விஷால்கி ஜெ" என்ற கோஷங்கள் எழும்பின, பாதுகாப்பாக வந்துசேர்ந்த ஒரு காரணம் போதும் அந்த கோஷங்கள் எழும்ப, பக்திகாரண கோஷங்கள் எல்லாம் பிற்பாடுதான்.

கோவிலுக்கு சென்றுவிட்டு பிறகு சிறிதுநேரம் ஊரை சுற்றிவிட்டு கேதர்நாத் செல்லவேண்டும் என்பதுதான் என் எண்ணமாக இருந்தது. வண்டியிலிருந்தவர்கள் அனைவரும் இறங்க பொறுமையாக இறங்கி அனைவரும் செல்ல இறுதியாக நான் அவர்களை பின்தொடர்ந்தேன். வழியில் காபியும், சிற்றுண்டியும் கொடுத்துகொண்டிருந்தனர் ( கோவில் சார்பாக என்று நினைக்கின்றேன்), நான் காப்பியை மட்டும் வாங்கிகுடித்துக்கொண்டே சென்றேன் அந்த குளிருக்கு சூடான காப்பி இதமாக இருந்தது. திரும்பி இடது பக்கம் பார்க்க முழுவதும் பனிபடர்ந்த மலை எதோ வெள்ளை பஞ்சை கொட்டிவைத்ததுபோல் இருந்தது கால்கள் நடக்க மறுத்துவிட்டன. சிலநிமிடங்கள் அங்கேயே நின்று பாருத்துகொண்டிருந்தேன். தனியாக சென்றால், யார் என்ன நினைப்பார்கள் என்று கவலைகொள்ளாமல் நாம் நாமாக நமக்கு பிடித்ததை ரசிக்க பிடித்த இடத்தில் அதிக நேரத்தை செலவளிக்கமுடியும்.



கோவில் எந்த திசையில் இருக்கின்றது என்று தெரியாததால் மக்கள் கூட்டம் சென்றுகொண்டிருந்த திசையை நோக்கி பின்தொடர்ந்தேன். சிலநிமிட பயணத்திலேயே கோவிலை நெருங்கிவிட்டேன். சிறு பாலத்தின் வழியாக ஆற்றை கடந்து (அழக்னண்டா) கோவிலருகே சென்றேன், அப்பொழுது பெரியவரின் மகன் என்னை அவருடன் கூட்டிசென்றார், என் பையை அவரிடம் கொடுத்துவிட்டு கோவிலுக்கு வெளியில் இருந்த கரம்குந்தில்(வெந்நீர்நிரப்பப்பட்ட தொட்டி) குளித்துவிட்டு கோவிலுக்குள் செல்ல வரிசையில் நிற்க எண்ணி வரிசையை தொடர்ந்து செல்ல அது ஒரு கி.மீ சென்றிருக்கும், இவ்வளவு கூட்டமாக இருக்கே எப்ப கோவிலுக்குள் போய் அப்பறம் எப்ப கேதார் போவது என்ற கவலை ஏற்பட்டது. ஈர ஷாட்ஷோடு வரிசையில் நின்றுகொண்டிருந்தேன் அனைவரும் கையில் அர்ச்சனை செய்ய பல பொருட்கள் சேர்ந்த ஒன்றை வைத்திருந்தனர் நானும் ஒன்று வாங்கிகொண்டேன் (திரும்பி போறப்ப அணியில் ப்ரஷாதம் கேப்பார்களே) மெல்ல நகர்ந்தது வரிசை ஓரிரு மணிநேரத்தில் கோவில் கதவை அடைந்தோம், கோவில் முன்பு கட்டப்பட்டிருந்த மணியிலிருந்து எழும்பும் ஓசையை கேட்பதே ஒரு வகை இன்பம்தான் வெளி வாயிலை தாண்டி கோவிலுக்குள் நான் நுழைந்ததும் கதவுசாத்தப்பட்டது அத்னால் எங்களுக்கு பல நிமிடங்கள் கடவுளைகாண வாய்ப்புகிடைத்தது.



கோவிலுக்குள் நுழையும் பொழுதுதான் ஆகா.. எடுத்தவுடனே எதிர் கம்பெனிக்கு (வைணவம்) வந்துட்டேனே என்று தோன்றியது. வழக்கமாக வைணவ கோவில்களில் பெரிய ஈர்ப்பு எனக்கு இருந்ததில்லை (மதுராவில் கிருஷ்ணன் ராதா சிலையை தவிர்த்து ) பத்ரியும் அப்படித்தான் இருந்தது முதல்முறை செல்லும்பொழுது. பல கி.மீ பயணம் செய்து வந்ததால் கோவிலை பார்க்க ஆனந்தமாக இருந்தது என்பது உண்மை. கதவறிகில் இருந்தததால் அனைவரும் செல்லும்வரை அங்கு நின்று கருவறையை பார்க்க வாய்ப்பு கிடைத்தது. எதோ கறுப்பாக சிறியதாய் இருந்தார் மூலவர். இந்த கோவிலில் பழங்காலத்திலிருந்து நம்பூதிரிகள் தான் பூசை செய்கின்றனர், ஆதிசங்கரர் கேரளத்திலிருந்து வந்தாதால் கூட இருக்கலாம் (ஆயிரம் வருடங்கள் முன்புதான் மலையாளம் தோன்றியது, ஆதிசங்கரர் அதற்க்கு முன்பு தோன்றியவர் என்று நினைக்கின்றேன்). மூலவர் சன்னதியாயை விட்டு வெளியே வர எதிரே மகாலக்ஷ்மி சன்னதி. இவங்கள டெம்ப்ளேட்டா வச்சிதான் மகாலக்ஷ்மி மாதரி பொண்ணு கிடைக்கனும்ன்னு தேடுராங்கலானு பக்கத்தில் சென்று பார்த்தேன். அதன் அறிகிலேயே பல சிறிய சட்டிகளில் பொங்கிய சாதத்தை, நம்பூதரி வந்து தண்ணீர் தெளித்து ப்ரசாதமாக்க பிறகு அதை முப்பது ருபாய்க்கு பிரசாதமாக விற்கின்றனர் (கண்டிப்பாக காசுவுள்ளவர்களுக்குதான் பிரசாதம்)
முப்பதுரூபாய் கொடுத்து ஒரு தட்டில் (காகித தட்டு) சாதத்தை வாங்கி மூலவர் சந்நிதி சுவற்றில் சாய்ந்தவாறு உன்ன ஆரம்பித்தேன். உண்மையில் அதை நான் பிரசாதமாக பார்க்கவில்லை மதிய உணவாகத்தான் பார்த்தேன். (அனைவருக்கும் கிடைக்கவில்லை என்றால் அதன் பெயர் ப்ரஷாதம் ?).

உணவு உண்டுகொண்டிருக்கும் பொழுதே, சமையலறையில் இருந்து வந்த ஒருவரிடம் ஒரு விவசாயிபோலிருந்தவர் தானியங்களை தானமாக கொடுக்க முற்பட்டார் ஆனால் கோவிலை சேர்ந்தவர்(சமையலரையி இருந்து வந்தவர்) ஒரு விரலால் அதை தரையில் வைக்கசொல்ல, கொண்டுவந்தவர் தானியங்களை தரையில் வைத்தார், அதன் மீது தண்ணீர் தெளித்து பிறகு எடுத்துக்கொண்டார். ஆனால் சிறிது நேரத்திலேயே விவசாயிபோல் இருந்தவர் தன் நண்பரை கூட்டிவந்தார், ஆனால் அவரது நண்பர் பணமாக கொடுக்க இப்பொழுது கொடுப்பவரின் கை மேலும் வாங்கும் கோவிலை சேர்ந்தவரின் கை கீழுமாக இருந்தது, (இப்பொழுது தண்ணீர் தெளிக்க வில்லை ? ) முதல் நிகழ்வில் கோபமும் இரண்டாவது நிகழ்வில் சிரிப்பும்தான் எனக்கு வந்தது.

கோவிலை விட்டு வெளியே வந்து மலையை/கோவிலை திரும்பி பார்த்துவிட்டு எனது பையை கொடுத்தவரிடம் இருந்து வாங்கிக்கொண்டு பேருந்துநிலையத்தை நோக்கி நடக்கத்தொடங்கினேன்... சுற்றிலும் மலைசூழ்ந்த பகுதி பத்ரிநாத் பனிபடர்ந்த மலை, குளிர், நதி அதன் அழகு. எங்குபார்த்தாலும் காவயுடை சாமியார் கூட்டம், சாமியார் போர்வையில் பிச்சைகாரர்களும் இருப்பார் என்றே எனக்கு தோன்றியது ( காசு கொடுத்தவரின் முகத்தை பார்க்காமல் போட்ட காசைபார்தால் அவர் பிச்சைகாரர் என்று என் எண்ணமாக இருந்தது) கோபீஸ்வர் வழியாக கேதர்நாத் செல்ல பேருந்து இருப்பதாக ஏற்கனவே வழிபோக்கர்கள் சொல்லிருந்ததால் வேகமாக பேருந்து நிலையத்திற்கு சென்றேன். அங்கு பணிபுரிபர்களை கேக்க பேருந்து காலை எட்டுமைக்கே புறப்பட்டுவிட்டதாக பதில் வந்தது. இனி எப்படி செல்வது என்று யோசிக்கதொடங்கினேன்.

தேடல் தொடரும்...

குறிப்பு : புகைப்படங்கள் அனைத்தும் இரண்டாவதுமுறை சென்றபொழுது எடுத்தது

பத்ரிநாத் - குப்தகாசி - கேதர்நாத் - பகுதி 1

*


பத்ரிநாத் செல்வது கடினம், பெரிய மலைகளை கடந்து செல்லவேண்டும், என்ற நண்பர்களின் வார்த்தைகள் என்னை கண்டிப்பாக அங்கு போகவேண்டும் என்று தூண்டியது. ஒருவாரம் விடுப்பு எடுத்துக்கொண்டு நானும் என் நண்பனும் செல்ல திட்டமிட்டோம். ஆனால் எனக்கு மட்டும் தான் விடுப்பு கிடைத்தது. முடிவு செய்யப்பட்ட பயணம் ஏன் தடைபடவேண்டும் என்று தனியாக கிளம்பினேன். அதற்க்கு சில நாட்களுக்கு முன்பே கேதர்நாத், பத்ரிநாத்,கங்கோதரி, யமுநோதரி போன்ற இடங்களின் வரைபடம் மற்றும் தொலைவுகளை இணையத்தில் தேடி எடுத்துக்கொண்டேன். எனது அணியில் பெரும்பாலோனோர் வடஇந்தியர்கள்தான் அனால் அவர்கள் யாரும் பத்ரி,கேதர் சென்றதில்லை, ஒரு நண்பர் அவரது நண்பரிடம் கேட்டு எப்படி போகவேண்டு என்று கூறினார்.


நண்பர் கூறியபடி ஒரு ஆட்டோவில் ஆனந்தவிஹார் பேருந்து நிலையத்திற்கு செல்ல அங்கு ரிஷிகேஷ் பேருந்து இருக்கவில்லை. தவறுதலாக வந்தது பிறகுதான் தெரிந்தது, தனியா வேற போகணும், எப்படி பட்ட ஊர் / மக்கள் என்று கூட தெரியாது நான் பேசும் இந்தியை வைத்து கண்டிப்பாக தென்இந்தியன் என்று தெரியும் சிலர் ஏமாற்றகூட பார்ப்பார்கள் இத்தனை எண்ணங்களுக்கு மத்தியில், இப்படியே வீட்டுக்கு திரும்பிடலாமா என்று யோசிக்க . ச்சி ச்சி வீட்டுல இருந்து கிளம்பி வந்தாச்சி இனிமேல் எதுக்கு திரும்பி போகணும், தெரியாத ஊர் புதிய அனுபவம் கிடைக்கும் என்று எதோ ஒரு நம்பிக்கையுடன் ஒரு டவுன் பேருந்தை பிடித்து காஷ்மிரிகேட் பேருந்து நிலையத்தை அடைந்தேன், பிறகு ரிஷிகேஷ் செல்லும் பேருந்தில் ஏற ஆறுமனிநேர பயணத்துக்குப்பின் அடுத்தநாள் காலை ரிஷிகேஷ் பேருந்துநிலையத்தில் இறங்கி ஒரு தேநீர் குடித்துக்கொண்டே பத்ரி, கேதர், கங்கோதரி, யமுநோதரி செல்வதற்காக இருக்கும் பேருந்துநிலையத்தை (திஹ்ரி பேருந்து நிலையம்) பற்றி விசாரித்து ஒரு ஆட்டோவில் ஏறி அந்த பேருந்து நிலையத்தை அடைந்தேன். காலை 5.30 மணியிலிருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன, காலையிலேயே செல்வது சிறந்தது.


பேருந்துகள் சிறியதாக இருந்தன அதற்கான காரணம் அப்பொழுது தெரியவில்லை, இரண்டு பேருந்துகள் புறப்பட தயாராக இருந்தது ஒன்று கேதர்நாத்துக்கும் மற்றொன்று பத்ரிநாத்துக்கும் செல்லவிருந்து எதில் ஏறுவது என்று சிறு தயக்கம் வந்தது. பத்ரிநாத் செல்லும் பேருந்தில் இருக்கைகள் அதிகம் காலியாக இருந்ததால் அதில் ஏறிக்கொண்டேன். கடைசி வரிசையிலிருந்து மூன்றாவது வரிசையில் வலது சன்னலோரத்தில் அமர்ந்துகொண்டேன். சிறிது நேரத்திலேயே வண்டி நிரம்ப தொடங்கியது. ஜான்சியை சேர்ந்த ஒரு குடுபத்தினர் மகன் மகள்கள், மருமகன்கள், பேரகுழந்தைகள் உடன் வண்டியில் ஏறிக்கொண்டனர். குடும்ப தலைவர் எனது பக்கத்தில் வந்து அமர்ந்துக்கொண்டார், பலமாதங்கள் வெட்டப்படாத தலைமுடி, பலவாரங்கள் சவரம் செய்யாத முகம், டி.ஷர்ட் , சாட்ஸ் இது தான் என் அடையாளம். சிறுபையன் ஒருவன் கோவில் புராணங்களை இந்தி மற்றும் ஆங்கிலத்தில் விற்றுக்கொண்டிருந்தான் ஆங்கிலத்தில் ஒரு புத்தகத்தை வாங்கிக்கொண்டேன்.


வண்டி கிளம்பியவுடன் "பத்ரி விஷால்கி ஜெ" என்று கோஷங்கள் வண்டியிலிருந்து எழும்பின, வாங்கிய புத்தகத்தை படிக்க ஆரம்பித்து சிறிது நேரத்திற்கு பிறகு சன்னல்வழியாக வெளியே பார்க்க. சில மாதங்களுக்கு முன் நான் சென்ற லக்ஷ்மன் ஜுலா பாலத்தை உயரத்தில் இருந்து பார்க்க அற்புதமாக இருந்தது (ரிஷிகேஷில் இருந்து தான் இமயமலை ஆரம்பிக்கிறது), வண்டி மேலே செல்ல செல்ல கங்கை நதிக்கும் வண்டிக்குமான இடைவெளி கூடிக்கொண்டே இருந்தது. மிக உயரத்தில் இருந்து கங்கையை பார்த்துக்கொண்டே செல்வது புதிய அனுபவத்தை கொடுக்கும், வண்டி வழியில் நிறுத்த, இறங்கி சாலையின் ஓரத்தில் பலமாக கால்ஊன்றி கீழே ஓடும் நதியை பார்க்க ஒரே ஆனந்தம் ஒரு பக்கம் தவறி விழுந்தால் அவ்வளுவுதான் என்ற எண்ணமும் கூட. ஆனால் அதைவிட ஆழமான, அழகான இடங்களை பார்க்கபோகிறேன் என்று அப்பொழுது தெரியவில்லை. பயணம் வெற்றிபெற்றுவிட்டதாக மனது இங்கேயே அறிவித்துவிட்டது.





ரிஷிகேஷை அடுத்து கொஞ்சம் பெரிய ஊர் தேவ்ப்ரயாக், இங்கு தான் பாகிரதி மற்றும் அழக்னண்டா என்ற இரண்டு நதிகள் இணைந்து கங்கையாக மாறுகின்றது. கங்கையாக மாறி தரை பகுதியில் பாயும் முதல் இடம் ரிஷிகேஷ். வண்டியில் அமர்ந்துக்கொண்டே இவற்றை பார்த்துக்கொண்டு சென்றுக்கொண்டிருந்தேன் அப்பொழுது இவ்வளவு விபரம் தெரியாது, எனக்கு அருகில் இருந்த பெரியவர் தான்னை அறிமுகபடுதிக்கொண்டு என்னை பற்றி கேட்டு தெரிந்துக்கொண்டார், அவரது மகள் திருமணம் முடிந்து குடும்பத்துடன் பத்ரிநாத் சென்று கொண்டிருப்பதாக கூறினார். அவர்கள் கொண்டுவந்த தின்பண்டங்களை எனக்கு கொடுத்தார் அப்பொழுது வேண்டாம் என்று மறுத்துவிட்டேன்.
(பாகிரதி மற்றும் அழக்னண்டா என்ற இரண்டு நதிகள் இணைந்து கங்கையாக மாறுகின்றது)

அடுத்து வண்டி ஸ்ரீநகர் என்ற ஊரை கடந்தது, மலைமீது அமைந்திருக்கும் பெரிய ஊர் மற்றும் அழகான ஊர், தேவ்ப்ரயாகில் இருந்து முப்பத்திமூன்று கி.மீ ரில் அமைந்துள்ளது இந்த ஊர். தனியாக நான் ஊர்சுற்ற கிளம்பியதால் அலுவலக நண்பன் (வடஇந்திய) அவ்வபோது எங்கு இருக்கிறேன் என்று என் கைதொலைபேசியில் அழைத்து தெரிந்துகொண்டான். உண்மையில் நான் தொலைந்துவிடுவேனோ என்ற பயமாக கூட இருந்திருக்கலாம். ஸ்ரீநகரில் இருந்து முப்பத்திநான்கு கி.மீ ரில் ருத்ரபிரயாக் என்னும் ஊர் வந்தது இங்கிருந்துதான் பத்ரிநாத்துக்கும் கேதர்நாத்துக்கும் இரண்டாக சாலைகள் பிரிகின்றன. அடுத்து கரன்பிரயாக், நன்ட்ப்ரயாக் வழியாக சென்று சமோலியை அடைந்தோம். இந்த ஊர் சமோலி மாவட்டத்தை சேர்ந்திருந்தாலும் மாவட்டத்தின் தலைநகரம் கோபீஸ்வர், சமோலியை கடந்து வண்டி ஜோஷிமத் செல்வதற்குள் இருட்டிவிட்டது (மாலையே வெளிச்சம் மங்கிவிடுகிறது) அங்கு இரவு தங்கிவிட்டு காலையில்தான் செல்லமுடியும் என்று கூறிவிட்டனர், மலைபகுதி என்பதால் பகலில் மட்டுமே பயணம் செய்ய அனுமதிஉண்டு. மற்றநேரங்களில் பாதையை மூடிவிடுகின்றனர். ஆதலால் இரவு அறை எடுத்து தங்கிவிட்டு விடியற்காலை ஆறுமணிக்குள் வண்டி இருக்கும் இடத்துக்கு வந்துவிடுங்கள் என்று ஓட்டுனர் கூறினர், ரிஷிகேசிலிருந்து ஜோஷிமத் வருவதற்கு பத்து முதல் பன்னிரண்டு மணிநேரமாகும், முழுவதும் மலைமீது பயணம்.( வழியில் மண்சரிவு, விபத்து எந்தவண்டிக்கும் நேராதபட்சத்தில்)


ஜோஷிமத்தில் இறங்கியவுடன் வீசிய காற்று சில்லென்று வருட, தொடக்கத்தில் இதமான குளிர் உடலில் பரவ ஒரு வித இன்பம் தொற்றிக்கொண்டது, ஜோஷிமத்தில் ஆதிசங்கரர் தங்கிருந்தாக கூறினர் எதையோ நிறுவியதாக கூட கூறினர், அவருக்கு ஒரு கோவில்கூட இருப்பதாக கூறினர். ஆனால் எனக்கு அந்த நேரத்தில் ஒரு அறை மட்டுமே தேவை என்பதில் கவனம் இருந்தது குளிர் அதிகமாக ஆரம்பித்ததால், பல நல்ல விடுதிகளை கொண்ட ஊர் வருடத்தில் இரண்டு மூன்று மாதங்கள் மட்டுமே நல்ல வருமானம் இருக்கும் என்று தோன்றுகிறது ( வருடத்தில் ஆறு மாதங்கள் மட்டுமே பத்ரி, கேதர் போன்ற கோவில்கள் திறந்திருக்கும் மற்ற மாதங்களில் கடும் பனிபொழிவு காரணமாக திறக்கப்படமாட்டாது) நான் சென்ற நேரம் அப்படி, ஒரு விடுதியில் கூட அறை கிடைக்கவில்லை, அதுமட்டும் இல்லாமல் தனியாக சென்றதால் அறை கிடைப்பது கடினமாக இருந்தது, குளிர் வேறு அதிகமாகிக்கொண்டே இருந்தது ஒரு மணி நேரம் அலைந்து எங்கும் தங்க அறை கிடைக்காததால் வண்டி இறக்கிவிட்ட இடத்திற்கே திரும்பி வந்தேன். கோவில் திறந்த முதல் இரண்டு மாதங்கள் பயணம் செய்ய சிறந்த நாட்கள் அடுத்து மழைக்காலம் வருவதால் யாரும் செல்ல விருப்பபடமாட்டார்கள் (மண்சரிவுகள் இருக்கும்) ஆகவே முதல் இரண்டு மாதங்கள் அதிக மக்கள் வருவதால் அறை வாடகை யானைவிலை இருக்கும் அதற்க்கு தயாராக இருந்தாலும் அறை கிடைப்பதில் சிரமம் இருக்கும். இன்னைக்கு சிவராத்திரிதான் குளிரிலேயே கிடக்கவேண்டியதுதான் என்று என்மனதை தயார் படுத்திக்கொண்டேன்.

தேடல் தொடரும்...

குறிப்பு : முதல் புகைப்படத்தை தவிர மற்ற அனைத்தும் இணையத்திலிருந்து எடுக்கப்பட்டது

கோடா திங்கி - ஜோகூர், மலேசியா

*

முதல்நாள் மாலை நண்பர் அழைத்து கோடா திங்கி போலாமா என்று கேட்க உடனே ஒத்துக்கொண்டேன். ஊர் சுற்ற வேண்டான்னா சொல்ல போறோம். அடுத்தநாள் காலை பத்துமணிக்கு மேல் ஜோகூர் இமிக்றேசனை அடைந்தோம். என்னுடைய கடுவுசீட்டு மற்றும் விசாவை அலுவலர் பார்த்து உங்கள் பெயர் என்று கேக்க, பக்கத்திலிருந்த அதிகாரி சிரித்துக்கொண்டே சாருக்கானா ? (உண்மையாக தான் ) என்று கேட்க ( மலாய்காரர்கள் இந்தி சினிமாவை பார்பார்கள்), சிரித்துக்கொண்டே என்னுடைய பெயரை கூற, ஆவணத்தை சரிபார்த்துவிட்டு அனுமதித்தார்.

ஜே.பி டவுனில் வழக்கமாக செல்லும் உணவகத்திற்கு சென்று, காலை உணவை முடித்துக்கொண்டோம். (நிர்வாகம் மாறியிருந்தது உணவின் தரமும் சரியில்லை), அங்கு பசும்பால் காப்பி கிடைக்கததால் அருகிலிருந்து மற்றொரு உணவகத்திற்கு சென்று காப்பி குடித்துவிட்டு, முக்கிய சாலைக்கு வந்து டேக்சிக்காக காத்திருக்க ஒரு மலாய்காரர் வண்டி வந்தது, 40 ரிங்கிட்டுக்கு அருவி வரை வர சமதிக்க உடனே நாங்கள் மூவரும் ஏறிக்கொண்டோம், ஜோகூர் பக்ருவிலிருந்து கோடா திங்கி டவுன் வரை 42 கி.மீ அங்கிருந்து அருவிக்கு 14 கி.மீ செல்லவேண்டும்.

மலேசிய தேசிய நெடுங்சாலைகளில் பயணிப்பதே தனி சுகம்தான், அகலமான சாலை, சாலைகளின் இருபுறமும் பசுமையான மரங்கள், அதை ரசித்துக்கொண்டே சென்றோம் கோடா திங்கி நகரத்துக்கு சில கி.மீ முன்பு சாலை விபத்தின் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட பயணம் தாமதமானது, நாப்பத்தி ஐந்து நிமிடங்களில் செலவேண்டிய இடத்துக்கு ஒன்னரை மணிநேரம் பயணம் செய்யவேண்டி இருந்தது, அருவின் முகப்பை அடைந்த பொழுது ஒரு மணிக்கு மேல் இருக்கும். நெரிசலின் காரணமாக நேரம் அதிகமானதை காரணமாக கொண்டு அதிக பணம் கேட்க அவர் கூச்சப்பட நாங்களே 50 ரிங்கிட் கொடுத்தோம், திரும்பி வரும் நேரத்தை நாங்கள் சொல்ல அவர் காத்திருப்பதாக கூறினார்.



நபர் ஒன்றுக்கு பத்து ரிங்கிட் நுழைவுகட்டணம் வசுளிக்கப்பட்டது, அதிகம் என்று தோன்றியது, ரிசாட்டுக்கு சென்று ஒரு லாக்கரை எடுத்து முக்கியமானவற்றை வைத்துவிட்டு அருவியை நோக்கி நடக்க தொடங்கினோம், அருவியை பார்த்ததும் சிறிது ஏமாற்றம், மிக சிறிய அருவி, நீரில் காலைவைக்க முதலில் முடியவில்லை பிரீசரில் இருந்து எடுத்த தண்ணியை போல, ஜில்லென்று இருந்தது, நீருக்கடியில் அதிக கற்கள் இருந்ததால் பொறுமையாக நீரில் நடந்து சென்று தண்ணீர் கொட்டும் இடத்தை அடைந்தோம். நீரின் வேகம் சிறிது நேரத்திலேயே கூடிவிட்டது. அருவியில் குளித்துவிட்டு அறிகிலிருந்த பாறையில் அமர அருவி சாரல் பட இதமாக இருந்தது. அருவி நீர் ஓடும் பாதையில் நீச்சல் குளம் போல ஒரு பகுதி இருந்தது மூன்றடி ஆழம்தான் இருக்கும்.




அங்கு சென்று ஒரு டுயுபை வாடகைக்கு எடுத்துக்கொண்டு நெடு நேரம் நீரில் மிதந்துகொண்டிருந்தேன், ரைடு போவதற்கு வடிவமைக்கபட்டிருந்தது பாதையில் இரண்டு மூன்று ரைடு சென்று விட்டு மீண்டும் நீரில் குளித்துகொண்டிருக்கையில் இரண்டு தமிழ் குடும்பத்தை பார்க்க முடிந்தது, ஜில்லென்று இருந்ததால் நீரில் காலை வைக்க பயந்து கொண்டிருந்த மலசிய தமிழ் இளைஞரை அவரது மற்ற தமிழ் நண்பர்கள் ஒட்டிகொண்டிருந்தனர் என்னை பார்த்து அவர் புன்னகைக்க பதிலுக்கு நானும் புன்னகைத்தேன். நேரம் நான்கை தொட்டிருந்ததால் கிளம்ப ஆயத்தமானோம். உடையை மாற்றிவிட்டு லாக்கரிலிருந்து பொருட்களை எடுத்துக்கொண்டு, முகப்புக்கு சென்றால் அங்கு டேக்சி இல்லை பதினைத்து நிமிடம் காத்திருந்தும் வரவில்லை, நுழைவுசீட்டு கொடுத்தவரிடம் கேட்க நாங்கள் வந்த டேக்சி சென்றுவிட்டதாகவும் வேறு டேக்சி வேண்டும் என்றால் அழைக்கவேண்டும் என்றும் கூறினார் (கோடா திங்கி வரை செல்ல 25, ஜே.பி வரை செல்ல 65 ரிங்கிட் )

கோடா திங்கி சென்று மதிய உணவை முடித்துவிட்டு செல்லலாம் என்று முடிவுசெய்திருந்ததால் கோடா திங்கி வரை செல்ல ஒரு டேக்சி கேட்டோம், அவர் அவரது அலைபேசியிலிருந்து அழைத்துக்கொண்டிருக்கும் பொழுதே வெளியே ஒரு கார் வந்து நின்றது, கேட் திறந்தவுடன் எங்களை பார்த்து டவுனுக்கு போகனுமா என்று கேக்க நாங்கள் ஆம் என்றோம், தன்னுடனே வரலாம் என்று கூறினார் (வாடகை வண்டி அல்ல) பணம் வாங்கவும் மறுத்துவிட்டார், சீட்டு கொடுபவரிடம் டேக்சி வேண்டாம் என்று கூறிவிட்டு வந்தவர் வண்டியிலேயே சென்றோம், வண்டியில் தமிழ் திரைப்பட பாடல்கள் ஓடிக்கொண்டிருந்தது, எங்களுக்கு லிப்ட் கொடுத்தவர் மலேசிய தமிழர், தான் ஜே.பியை சேர்ந்தவர் என்று கூறினார், பேருந்து நிலையம் எங்கிருக்கிறது என்று சரியாக தெரியாததால் ஒரு குறிபிட்ட இடத்தில் இறங்கிகொண்டோம், மதியஉணவை பீசா ஹட் இருந்தால் அங்கே முடித்துக்கொல்லாம் என்று நண்பர் சொல்ல சிறிது தூரத்திலேயே ஒரு பீசா ஹட் இருந்தது, அங்கு மதிய உணவை முடித்துவிட்டு டேக்சிக்காக பேருந்து நிலையத்தை நோக்கி நடக்க தொடங்கினோம்.

ஜே.பி இமிக்றேசன்வரை செல்ல 40 ரிங்கிட் என்று பேசி ஒரு டேக்சியை பிடித்தோம், ஓட்டுனர் தமிழர், வண்டி எடுத்தவுடனே தமிழ் எப்.எம்க்கு மாற்றிவிட்டார். இனிமையான பாடல்களை கேட்டுக்கொண்டே ஜே.பி டவுனை 45 நிமிடங்களில் அடைந்துவிட்டோம், பசும்பால் காப்பி குடித்துவிட்டு செல்லலாம் என்று தோன்றியது ஆனால் நேரமின்மையை கருத்தில் கொண்டு வீட்டுக்கு திரும்பநேரிட்டது.

குறிப்பு : லர்கினிலிருந்து(ஜே.பி) கோடா திங்கி வரை பேருந்துகள் இயக்கப்படுகின்றன (ஜே.பி டவுன், இமிகிரேசன் முடித்து அதன் வாசலிலேயே ஏறிக்கொள்ளலாம்), கட்டணம் 5 ரிங்கிட்டுக்கு குறைவுதான், ஆனால் கோடா திங்கி நகரிலிருந்து அருவிக்கு செல்ல டேக்சி எடுக்கவேண்டும் (கட்டணம் 15 முதல் 25 ரிங்கிட் பேசுவதை பொருத்து). சிங்கை மற்றும் ஜோகுரிலிருபவர்கள் ஒருநாள் சென்றுவர சிறந்த இடம்.