வைஷ்ணவாதேவி கோவில் - கட்ரா - ஜம்மு
எனது வடஇந்திய நண்பன் குப்தாவுடன் ஏற்கனவே ஒரு பயணம் சென்றிருந்த நிலையில். அடுத்த பயணம் வைஷ்ணவாதேவி கோவிலுக்கு செல்லலாம் என்று கூப்பிட, கோவில் என்பதை விட ஜம்முவை கடந்து அறுபது கி.மீ செல்லபோகிறோம் என்று கூறியதால் உடனே சம்மதம் தெரிவித்தேன். தொடர்வண்டியில் ஜம்முவரை முன்பதிவு செய்ய முயற்ச்சித்தோம் ஆனால் ஒரு இருக்கை கூட எங்கள் பயண தேதியில் கிடைக்காததால் பேருந்திலேயே செல்லலாம் என்று முடிவு செய்தோம். பேருந்து என்று முடிவான பிறகு எனக்கு ஒரே சந்தோசம் பஞ்சாப் வழியாக ஒரு பயணம் மேற்க்கொள்ளவேண்டும் என்ற எனது நெடுநாள் விருப்பம் நிறைவேறப்போவதை நினைத்து.

பயண தேதி அன்று ஒரு ஆட்டோவில் காஷ்மீரி கேட்டை நோக்கி புறப்பட்டோம், அந்த ஆட்டோ ஓட்டுனர் பந்தயத்தில் செல்வதை போல அந்த பெரிய சாலையில் குறுக்கும் நெடுக்குமாக பலவன்டிகளை முந்திக்கொண்டு பலபேரின் சாபத்தை வாங்கிகட்டிக்கொண்டு சென்றுக்கொண்டிருந்தார் ஒரு சிக்னலில் ஆட்டோ நிற்க, தொம் தொம் என்று அடி விழும் சத்தம் கேட்டது, அடி எங்கள் ஆட்டோ ஒட்டுனருக்குதான் பைக்கில் வந்த ஒருவர் அவரை அடிக்க ஆட்டோ ஓட்டுனர் திரும்பி அடிக்காமல் மனிப்பு கேட்டுக்கொண்டிருந்தார் உடனே என் நண்பன் "ராம் சே சலோ" என்று கூறிக்கொண்டிருந்தான். ஆறாம் சே என்றாலும் ராம்சே என்றாலும் ஒன்று தான் என்று தெரிந்துக்கொண்டேன். (இதே போன்ற ஒரு நிகழ்ச்சி மதுரா பேருந்து நிலையத்தின் வெளியில் சில மாதம் கழித்து கண்டேன் ஆனால் அதில் அடிவாங்கியது ஒரு அரசு பேருந்து ஓட்டுனர், அடி கொடுத்தது ஒரு பைக் ஓட்டுனர் ). பிறகு அந்த ஆட்டோ ஓட்டுனர் மெதுவாக எங்களை காஷ்மீரி கேட்டில் விட்டு சென்றார்.

குளிர்சாதம் செய்யப்பட்ட தனியார் வண்டிகளை தேடி ஒரு வண்டியிலும் இடம் கிடைக்காததால், வேறு வழியில்லாமல் அரசு பேருந்தை நோக்கி கிளம்பினோம் ஆனால் அங்கும் சொகுசு பேருந்து கிடைக்கவில்லை. நம்ம ஊர் டவுன் பேருந்தை போல ஒரு வண்டி ஜம்முவுக்கு செல்ல தயாராகி கொண்டிருந்தது அதை விட்டால் அப்பொழுது வேறு வண்டி இல்லை என்பதால் அதில் ஏறிக்கொண்டோம். வண்டி அம்பாலா, லூதியானா, ஜலந்தர் வழியாக ஜம்முவுவை நோக்கி சென்று கொண்டிருந்தது பஞ்சாப்பின் ஒரு சிறு சாலையோர கடையில் தேநீருக்காக நிறுத்தப்பட்டது. தேநீர் குடித்தப்பின் ஏண்டா குடித்தோம் என்று இருந்தது. பஞ்சாப் ஜம்மு எல்லையிலேயே வாகன சோதனை நடைபெற்றது, அனைத்து வண்டிகளும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. பின்பு விடியற்காலை ஜம்முவை அடைந்தோம், அங்கு சிறிது நேரத்துலையே கட்ராவுக்கு வண்டி கிடைக்க தொடர்ந்து பயணித்தோம்.

வண்டியிலிருந்தே ஜம்முவை பார்த்துக்கொண்டே சென்றேன், நகரின் பெரும்பாலான பகுதிகளில் ராணுவம் இருப்பதற்க்கான அடையாளங்கள் தெரிந்தது. கோபுரத்தின் மீது துப்பாக்கியுடன் காவல் காப்பது போன்றவற்றை இங்கு தான் முதன் முதலில் பார்த்தேன். ஜம்முவை கடந்தவுடன் ஒரு இடத்தில் வண்டியை நிறுத்தி நடத்துனர் இரண்டு சீப்பு வாழைப்பழங்களை வாங்கினார், ஜம்மு நகரை கடந்தவுடன் மலை பகுதி ஆரம்பமாகியது. நிறைய வளைவுகளை கடந்து செல்லவேண்டிருந்தது, சாலையின் இடது பக்கத்தில் குரங்கு கூட்டங்களை தென்பட்டது, சென்று கொண்டிருந்த வண்டியிலிருந்து வாழைப்பழங்கள் வீசப்பட்டுக்கொண்டிருந்தது வேறு யாரும் அல்ல நம்ம நடத்துனர்தான் அந்த வேலையை செய்துகொண்டிருந்தார் நாட்டில் மழை பொழிய நம்ம நடத்துனரும் ஒருகாரணம் என்று எண்ணிக்கொண்டேன், பல மலைகளை கடந்து வண்டி கட்ராவை அடைந்தது.

மலைகளின் நடுவில் அந்த ஊர் அமைந்திருந்தது போல் இருந்தது. மழை பொழிந்து இருந்ததால் அந்த ஊரின் அழகை அது மேலும் கூட்டிருந்தது, வண்டியை விட்டு இறங்கியவுடன். எங்களிடம் அறை எடுத்துக்கொள்ளுங்கள் என்று நிறையபேர் சூழ்ந்துக்கொண்டனர், நாங்கள் ஒரு வரை தேர்ந்தெடுக்க அவர் அங்கு இருந்த ஒரு சிறிய அலுவலகத்தில் (பேருந்து நிலையத்திலேயே) எங்களின் பெயர்களை பதிவு செய்து கொள்ள சொன்னார், கோவிலுக்கு செல்பவர்கள் அனைவரும் அங்கு பதிவு செய்ய வேண்டுமாம். பதிவு செய்ததற்கு ஒரு ரசிது கொடுத்தார்கள்.

பின்பு கடைவீதி வழியாக எங்களை ஒரு விடுதிக்கு அழைத்துச்சென்றார், விடுதியில் குளித்துவிட்டு (வெந்நீரில்) விடுதிக்கு அருகில் இருந்த கடைக்கு சென்றோம். என்னுடைய ப்ரிபெட் சிம் எடுக்கவில்லை ஆனால் நண்பனின் போஸ்ட்பெட் எடுத்தது ப்ரிபெட் சிம் இந்த மாநிலத்தில் எடுக்காது பாதுகாப்பு காரணத்திற்காக தடைவிதித்திருக்கலாம் என்று எண்ணிக்கொண்டேன், புகைப்பட கருவி எடுத்து வராததால் வாடகைக்கு ஒரு டப்பா புகைப்பட கருவியை எடுத்தோம். நண்பன் சூ போட்டுக்கொண்டே மலைக்கு போகலாம் என்று கூற, கூடவே கூடாது வெறும் காலுடன் தான் நடக்கவேண்டும் என்று கூறிவிட்டேன். கோவில் மலை அடிவாரத்துக்கு செல்லும் பொழுதே ஒரு சிறுவான் கையில் எண்ணையுடன் குறிக்கிட்டு அண்ணே காலுக்கு மசாஜ் செஞ்சிகிட்டு போங்க என்று கூற வேண்டாம் என்று கூறி நடையை கட்டினோம்.

மலையடிவாரத்திலேயே நன்கு பரிசோதனை நடைபெறுகின்றது. பரிசோதனைக்கு பின் பல கடைக்களில் பாரம்பரிய உடையை உடுத்தி புகைப்படம் எடுத்துக்கொள்கின்றனர். சிறிது தூரத்திலேயே ஒரு இடத்தில் அன்னதானம் வழங்க அங்கு உணவருந்த வேண்டும் அது நல்லது என்று குப்தா கூறினான். நானும் சம்மதித்து உணவருந்த சென்றேன், கட்டட வேலை செய்பவர்கள் பரிமாருவதுபோல இருந்தது, தினமும் ஆயிரகணக்கில் மக்களை காணும் அவர்களின் கடினம் புரிந்தாலும் அவர்களின் பரிமாறும் முறையை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

பக்தர்களின் பொருட்களை சுமக்கவும், குழந்தைகளை சுமக்கவும் அதிகம் தாடி வைத்த முகமதியர்கள் உதவுகிறார்கள், ஒரு இந்து கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு உதவும் முகமதியர்களை பார்க்க முடிந்தது. சிமென்ட் சாலை கோவில் வரை அந்த மலையில் போடபட்டிருகின்றது. கட்ராவிலிருந்து 12 கி.மீ மலையில் நடந்தே செல்லவேண்டும் பாதி வழியில் ஒரு குகை கோவில் இருக்கின்றது அங்கு தான் மாதா (வைஷ்ணவா தேவி) அரக்கனுக்கு பயந்து சிறிது காலம் தங்கியதாக என் நண்பன் கூறினான் அவன் இந்தி மற்றும் ஆங்கிலம் கலந்து ஒரு வழியாக கோவில் புராணத்தை கூற ஏண்டா இவ்வளவு சக்தி வாய்ந்த தேவி ஒரு அரக்கனுக்கு பயந்து இந்த குகையில் தங்கினாங்க என்று நான் கேட்க, பதிலுக்கு ஒரு முறை முறைத்தான். குகைக்கு செல்லும் வழியில் (பெரிய வரிசையில்) பெரியவர்களின் கோசத்தை விட சிறியவர்களின் கோசம் பலமாக இருந்தது " ஜெய் மாத்தா தி" , "வைஷ்ணவோ மாதாக்கி ஜெய்" பலமுறை ஒலிக்கப்பட்டது.குகைக்கு செல்லும் முன்பு பரிசோதனை பலமாக நடந்தது. தேவி இருந்ததாக கூறப்படும் குறையை நன்கு மொழுகி (ரப்பர் போன்று இருந்தது) வைத்திருக்கின்றனர் யாருக்கும் சிறு கீறல் கூட விழக்கூடாது என்ற நல்லெண்ணத்தினால் இருக்கலாம். குகைக்குள் நான் சிரமமில்லாமல் சென்று வந்தேன் நம்ம குப்தா கொஞ்சம் கடினப்பட்டார். குகை கோவிலுக்கு அடுத்து பயணத்தை தொடர்ந்தோம் செருப்பு இல்லாமல் நடந்ததால் கால்களில் வலி எடுத்தது (சிமெட் தரை தேய்ன்திருங்ததால்) புதியதாக போடாபட்டிருந்த சாலைகளில் செல்லும் பொழுது வலி இல்லை. இந்த கோவிலுக்கு சென்று வந்தால் விரைவில் திருமணம் நடக்குமாம் அதே போல வடஇந்தியர்கள் திருமணமான பின் கண்டிப்பாக இங்கு வருவதை எழுத படாத சட்டமாக வைத்திருகிறார்கள் என்றும் கூறினான்.

கட்டி சாதம் கட்டிக்கொண்டு குடும்பம் குடும்பமாக வந்தவர்களை பார்க்க முடிந்தது. பல மாநிலங்களிலிருந்து இது போல வந்திருந்தனர். திடிரென்று தகரசத்தங்கள் கேட்டது, வழியெங்கும் நிறைய தகர பந்தல்கள் போட்டிருன்ததன் காரணம் அப்பொழுதான் புலப்பட்டது, கற்கள் மலையிலிருந்து உருண்டுவருவது பக்தர்கள் மீது படாமலிருக்கத்தான் அந்த ஏற்ப்பாடுஎன்று. ஒரு வழியாக மாலையில் கோவிலை அடைந்தோம் இந்த முறை இன்னும் சோதனை பலமாக இருந்தது தோலில் செய்யப்பட்ட எந்த பொருட்களும் உள்ளுக்குள் அனுமதிக்கப்படவில்லை, சோதனை சாவடி அருகிலேயே பாதுகாப்பு பெட்டகங்கள் இருக்கின்றன. சோதனையை முடித்து உள்ளே சென்றால் பெரிய வரிசையில் காத்திருக்கவேண்டி இருந்தது எங்களுக்கு முன்பும் பின்பும் இருந்தது புதுமண தம்பதிகள், அவர்களை பார்த்துவிட்டு நானும் தான் வந்திருக்கேனே உன்கூட என்று கூற நண்பன் கோபமாகிவிட்டான்.

(வைஷ்ணவாதேவி கோவில்)


நீண்ட நேர காத்திருப்புக்கு பிறகு வரிசை நகர ஆரம்பித்தது ஒரு பெரிய தேவி படம் இருந்ததை பார்த்து அது தான் கருவறை என்று எண்ணிக்கொண்டேன் அனால் இன்னும் வரிசை வேறு எங்கோ சென்றதால் தொடர்ந்து சென்றேன் ஒரு குகை போல இருந்த இடத்துக்குள் சென்றோம் கருவறையை அடைந்த பின் எதோ ஒரு வித ஈர்ப்பு இருந்தது சிலைக்கு அருகில் செல்லும் பொழுது அங்கு எதோ ஒரு வித சக்தியை உணரமுடிந்தது என் பயண தொடக்கத்திலிருந்தே கொடைக்கானல் செல்வது போலத்தான் என் மனநிலை இருந்தது ஆனால் என்னால் எப்படி இதை உணரமுடிந்தது என்பதை நினைத்து ஆச்சரியமாக இருந்தது, நெடுநாட்கள் நாத்திகம் பேசி திரிந்தவனுக்கு திருவண்ணாமலை எதோ ஒரு சக்தி இருப்பதற்கான பிள்ளையார் சுழி போட மதுரா அதை வழிநடத்த வைஷ்ணவோ தேவி கோவில் அதற்க்கு முழுவடிவம் கொடுத்தது ஆனால் உருவமுள்ள கடவுளை ஏற்றுக்கொள்வதில் சிக்கல் இருந்துக்கொண்டே இருந்தது. இனம்புரியாத ஈர்ப்புக்கு கடவுள் என்று பெயர் கொடுத்து அதற்கான தேடலை நான் தொடங்க இந்த கோவிலும் முக்கியகாரணம் என்பதை மறுக்கயியலாது,

(வைஷ்ணவா தேவி)

கோவிலிலிருந்து வந்தபிறகும் ஆச்சிரியத்திலிருந்து என்னால் விடுபடமுடியவில்லை என் நண்பனிடம் கேட்க அவனுக்கும் அதே உணர்வு இருந்ததாக கூறினான். வழிபாட்டிற்கு கொடுத்த தேங்காய் பழத்திற்கு பதிலாக (கருவறைக்கு முன்பாகவே வாங்கிக்கொள்ளபடும்) வேறு தேங்காய் பலம் மற்றும் ஒரு பாகெட் கல்கண்டு கொடுத்தார்கள். அதோடு ஒரு சிறிய நாணயவடிவில் வைஷ்ணவோ கோவில் முத்திரை அச்சு பொறிக்கப்பட்டு இருந்தது. கோவிலை விட்டு வெளியேறும் பொழுது நன்றாக இருட்டிருந்தது கால் வலி வேறு, பேட்டரியால் இயங்கும் சிறியவாகநத்தை கொண்டு பாதி தொலைவு வரை கொண்டு விடுகின்றனர் அனால் அங்கு சென்று பார்க்க வயதானவர்களுக்கும் குழந்தைகளுக்கும் என்று எழுதபட்டிருந்தது. வேறு வழியில்லாமல் நடந்தே செல்லவேண்டி இருந்தது.

பாதி வழியிலே நன்றாக மழை பிடிக்க நினைந்துக்கொண்டே இறங்கினோம். நீண்ட நேர பயணத்திற்கு பிறகு ஒரு கடையில் தேநீர் அருந்திவிட்டு மீண்டும் நடக்கதொடங்கினோம் கட்ராவை அடைந்தபின் எங்கள் விடுதியை கண்டுபிடிக்க நெடுநேரம் பிடித்தது, நல்ல ஓய்வுக்கு பின் அடுத்தநாள் காலை குளித்துவிட்டு மலையை பார்க்க பனி மூடிருந்தது அட நாம மேல இருக்கும் போது இல்லையே என்ற வருத்தம் தொற்றிக்கொண்டது. ப்லிம் ரோலை வைத்துக்கொண்டு அந்த ஓட்ட காமெராவை கடைக்காரரிடம் கொடுத்துவிட்டு கடைவீதிக்கு சென்று வேண்டியதை வாங்கிக்கொண்டோம் அப்பொழுதே மதியமாகிவிட்டது. டில்லிக்கு பேருந்து இல்லாததால் சண்டிகர் பேருந்தில் ஏறி பத்தான்கோட்டில் இறங்கிக்கொண்டோம்.

பத்தான்கோட்டில் பேருந்து நிலையத்திற்கு சற்று மும்பே இருந்த மூன்று சாலைகள் சந்திக்கும் இடத்தின் நடுவில் நின்றுக்கொண்டு பேருந்துக்காக காத்திருந்தோம் நீண்ட நேரத்திற்கு பின் ராஜஸ்த்தான் போக்குவரத்து கழக பேருந்து வந்தது அதில் ஏறிக்கொண்டோம். முதன் முதலில் எந்திரத்தை கொண்டு நடத்துனர் பயணசீட்டு கொடுத்ததை இங்கு தான் பார்த்தேன் நம்ம ஊரிலும் வந்தால் எப்படி இருக்கும் என்று என்னினேன் (அப்பொழுது தமிழகத்தில் இந்த முறை கிடையாது ) நண்பன் அவன் சொந்த ஊரில் இறங்கிக்கொண்டான், ஜலந்தரில் தேநீருக்காக வண்டி நிறுத்தப்பட்டது அங்கு தேநீர் குடித்து விட்டு உறங்க டில்லி வந்தப்பின் நடத்துனர் எழுப்பித்தான் எழுந்தேன்.

நான் சென்ற கோவில்களிலேயே காசுக்கு மதிப்பு கொடுக்காத ஒரு கோவில் இதுதான் , மீண்டும் செல்லவேண்டு என்று எண்ணம் தோன்றியது ஆனால் இன்று வரை அந்த வாய்ப்பு அமையவில்லை.
(படங்கள் இணையதளங்களிலிருந்து எடுக்கப்பட்டது நாங்கள் வாடகைக்கு எடுத்த புகைப்படகருவியிலிருந்து படங்கள் மிகவும் அற்புதமாக வந்ததால் இங்கு கொடுக்கவில்லை)

மதுரா, ஆக்ரா


ஆக்ரா பக்கத்தில் தானே இருக்கு ஒருநாள் போய் தாஜ்மஹால பாத்துட்டு வந்துடலாம் என்று என் அறை நண்பர்கள் இருவரிடமும் கேட்டேன். ஏற்கனவே அவர்கள் அங்கு சென்றிருந்ததால் வர மறுத்துவிட்டார்கள். அலுவலக நண்பனும் வர மறுத்த நிலையில் ஒரு டிராவல்ஸ்சில் விசாரித்து ஒரு நாள் பேக்கேஜ் ட்ரிப்க்கு முன்பதிவு செய்தேன்.

விடியற்காலையில் சொன்ன நேரத்தைவிட ஒரு மணிநேரம் கழித்து ஒரு காரில் வந்து என்னை வீட்டிலிருந்து அழைத்துக்கொண்டு சென்றனர். அந்த வண்டி நேராக தென் டெல்லியில் உள்ள ஒரு பெட்ரோல் நிலையத்திற்கு அழைத்து சென்றது அங்கு என்னை இறக்கிவிட்டு ஒரு வண்டி என்னை கொடுத்துவிட்டு சென்றுவிட்டனர். ஒருமணிநேரம் கழித்து ஒரு பேருந்து அந்த என்னை சுமந்து வந்தது அட பள்ளிகூட சுற்றுலா போல இருக்கும்போல என்று எண்ணிக்கொண்டு வண்டியில் ஏறி பார்க்க வண்டி முழுவதும் நிரம்பிருந்தது நடுவில் ஒரு இருக்கையில் ஒருவர் மட்டும் அமர்ந்திருக்க அருகில் அமரசொன்னார்கள், சன்னலுக்கு அருகில் அமர விருப்பபடுபவர்களில் ஒருவன் என்பதால் அந்த இருக்கை வேண்டாம் என்று சொல்லிவிட்டு வண்டியின் இறுதி வரிசையில் சன்னலோரத்தில் அமர்ந்துக்கொண்டேன்.

என்னருகில் இரண்டு பெரியவர்கள் வெள்ளைநிற உடையில் தலையில் வெள்ளை தொப்பியுடன் அமர்ந்திருந்தனர், தாங்கள் வட கர்நாடகாவை சேர்ந்தவர்கள் என்று அறிமுகபடுத்திக்கொண்டனர் வண்டியில் என்னைத்தவிர தமிழர்கள் இல்லை. இந்த பயணம் ஒரு தினுசாகத்தான் இருக்கபோகின்றது என்று எண்ணிக்கொண்டேன். அவர்கள் பேசிக்கொண்டிருந்த கன்னட வார்த்தைகளை எனக்கு தெரிந்த வார்த்தைகள் கொண்டு பொருத்திப்பார்த்தேன் ஒன்றும் பொருந்தவில்லை. பிறகு அவர்கள் கன்னடத்தை பற்றி தெளிவாக கூறினார்கள். பெங்களூர் கன்னடா என்பது தமிழ் கலந்த கன்னடா என்பதால் தமிழர்களுக்கு ஓரளவுக்கு புரியும் என்று கூறினார்கள். அதே போல் மங்களூர், வட கர்நாடகாவில் பேசும் கன்னடாவையும் பற்றி கூறக்கேட்டுக்கொண்டேன். வழியில் உணவிற்காக ஒரு உணவகத்தில் நிறுத்த ஒரு காபி மட்டும் வாங்கி குடித்துக்கொண்டேன்.

வண்டி சிறிது நேரத்தில் ஆக்ராவை நோக்கி கிளம்பியது அப்பொழுதுதான் தெரிந்தது ஒவ்வொருவரிடமும் ஒவ்வொருமாதறி பயணத்திற்கான பணம் வாங்கியது. இரண்டு மூன்று டிராவல்சை விசாரித்து ஏறுவது நல்லது என்றும் கூறினர் பின்பு தான் எனக்கு தெரியும் பல நிறுவனங்கள் தினமும் இது போல் தாஜ்மகாலை பார்க்க பயணம் ஏற்பாடு செய்கிறார்கள் என்று, பேசிக்கொண்டிருக்கும் பொழுதே நாங்கள் சென்ற பேருந்து அங்கும் இங்குமாக சாலையில் நடனமாடிக்கொண்டிருந்தது , ஓட்டுனரின் சாமர்த்தியத்தால் சாலையின் ஒரு ஓரத்தில் சென்று வண்டி நின்றது. டெல்லி - ஆக்ரா சாலை நாட்டின் முக்கியமான சாலைகளில் ஒன்று அதிக வண்டிகள் செல்லும் அந்த சாலையில் விபத்திலிருந்து தப்பியதே பெரியவிசயமாக தோன்றியது. வெடித்திருந்த டயரை கழட்டிவிட்டு ஏற்கனவே இருந்த டயரை ஓட்டுனர் மாற்றினார்.

வண்டி மதுராவை கடந்து ஆக்ரா கோட்டையை நோக்கி நகர்ந்தது சிறிது நேரத்திலேயே ஆக்ரா கோட்டையை அடைந்துவிட்டோம். இப்பொழுது ஒரு கைடு எங்களுக்காக அனுப்பபட்டிருந்தார். அவர் பெரும்பாலும் இந்தியில் கோட்டையை பற்றி சொல்லிக்கொண்டு வந்தார். பளிங்கி கட்டடத்தில் பதிக்க பட்டிருந்த சிகப்பு, ஊதா நிற கற்களை இமைகொட்டாமல் பார்க்க தோன்றியது. கட்டடகலை மிகவும் அற்புதமாக இருந்தது. பளிங்கினால் கட்டப்பட்டது அதன் கூடுதல் சிறப்பு. அரசரின் படுக்கையறையில் சுவர்களின் மத்தியில் இரண்டு குழிகளை காட்டினர். வெய்யில் காலத்தில் குளிந்தநீர் ஊற்றி குளிர்சாதன அறையாகவும் மற்றும் குளிர்காலத்தில் வெந்நீர் ஊற்றி அந்த அறையை வெதுவெதுபாகவும் வைத்துக்கொள்வார்கள் என்று கூறினார் அங்கிருந்து தாஜ்மகாலை பார்க்க அழகாக இருந்தது. அந்த கூட்டத்திலிருந்து தனியாக பிரிந்து மீனா பஜார்(பெண்கலுக்கு மட்டும் தான் அனுமதியாம் அந்த காலத்தில், இப்பொழுது காட்சிபொருள்), அரசவை, தூண்கள், கட்டடங்கள் அதில் உள்ள ஓவிங்கள் என்று ஒன்றுவிடாமல் பார்த்துக்கொண்டிருந்தேன். கொடுத்த நேரம் முடிவதற்குள் வண்டிக்கு திரும்பினேன்.
மதிய உணவிற்காக ஒரு உணவகத்தில் நிறுத்தப்பட்டது அங்கு நம்மஊர் சாப்பாடு கிடைத்தது. உணவை முடித்துவிட்டு நேராக தாஜ்மகாலை நோக்கி புறப்பட்டோம் ஒரு குறுப்பிட்ட தூரத்திற்கு மேல் பொது வாகனங்களுக்கு அனுமதி கிடையாது அதனால் அங்குகிருந்து ஓட்டகவண்டி அல்லது சிறிய பேருந்தில் செல்லலாம், நாங்கள் சிறிய பேருந்தில் சென்றோம். வெளிநாட்டவருக்கு அதிகமாக நுழைவுகட்டணம் வசுலிக்கப்பட்டது. இந்தியர்களுக்கு குறைவுதான், உலக அதிசியத்தில் ஒன்று என்பதைவிட சிறுவயதில் இருந்து பிரமிப்பாக கேட்ட ஒன்றை பார்க்கபோகின்றோம் என்ற மகிழ்ச்சி இருந்தது. காவலர் சோதனைகளுக்கு பின்பு பொறுமையாக நடந்து சென்று இடதுபக்கம் திரும்பிய பொழுது சற்று தொலைவில் இருத்த தாஜ்மகாலை பார்த்தேன். அதே இடத்தில் சிறிது நேரம் நின்றுக்கொண்டு அதன் அழகை பார்த்துக்கொண்டிருந்தேன் என்னைப்போல் பலரும் பார்த்துக்கொண்டிருந்தனர்.

தாஜ்மகாலை நோக்கி மெதுவாக நடக்கத்தொடங்கினேன் இரண்டுபக்கமும் புல்வெளிகள் மரங்கள் இருந்தன கட்டடத்தின் அருகில் காலணியை கழட்டிவிட்டு படிக்கட்டுகளின் வழியாக மேலே சென்று தாஜ்மஹாலுக்குல் நுழைந்தேன் அழகிய வேலைபாடுகளுடன் அந்த இடம் அற்புதமாக இருந்தது அதன் மைய்ய பகுதியில் அமைந்த கல்லறையை பார்த்தேன், அதன் மீதும் கலைநயத்துடன் வேலைபாடுகள் இருந்தது. கல்லறையை பார்க்கும் பொழுது அதற்குமுன் அங்கு கோவில் இருந்தது என்று என் நண்பன் கூறியது நினைவுக்கு வந்தது (மெய்யோ பொய்யோ எனக்கு தெரியாது) வெளியே சென்று அந்த மகாலின் பின் பகுதிக்கு சென்றேன். அழகான சூழல் அங்கிருந்து அருகில் ஓடிக்கொண்டிருக்கும் யமுனா நதியை பார்க்க அற்புதமாக இருக்கும். நதியில் ஓரிரு படகுகள் சென்றுகொண்டிருந்தது முழங்கால் உயர தடுப்பு சுவற்றுக்கு அருகில் அமர்ந்துக்கொண்டு (பின் புறம்) நதியை பார்ப்பதற்கு அழகாக இருந்தது, தாஜ்மகாலை விட அதன் பின் புறத்தில் அமர்ந்து நதியை பார்ப்பது மிகவும் பிடித்திருந்தது. குளிர்காலத்தில் சென்றதால் வெய்யில் இல்லை. (நண்பர்களுடனான அடுத்த பயணத்தில் மாலையிலிருந்து இருட்டும்வரை அதே இடத்திலிருந்து நதி மற்றும் தாஜ்மகாலை பார்க்க வாய்ப்புகிடைத்தது, அப்பொழுது தனியாக வாகனத்தில் சென்றதால் நேரத்தை கவனத்தில் கொள்ளவில்லை) கொடுக்கப்பட்ட நேரம் முடிந்து சிறிது நேரம் கழித்து வண்டிக்கு சென்றேன். ஆனால் என்னையும் சேர்த்து வண்டியில் பத்துப்பேர் கூட இருக்கவில்லை, அனைவரும் வரும் வரை காத்திருந்து வண்டி மதுராவை நோக்கி புறப்பட்டது.
வண்டி மதுராவை அடைந்ததும் நேராக கிருஷ்ணன் கோவிலுக்கு கூட்டிசென்றனர், கோவிலுக்குள் நுழையும் பொழுது கொண்டு சென்ற அனைத்து பொருட்களும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது, பையில் இருந்த தங்கராஜா வடிகட்டி மென்சுருட்டாரும் அவரது நண்பர் லைட்டரும் குப்பையில் தூக்கி வீசப்பட்டனர். பிறகு உடலை பரிசோதிக்கும் பொழுது நான் நெளிந்து கொண்டிருப்பதை பார்த்து இன்னும் திருமணம் ஆகவில்லையா என்று அந்த காவலர் கேட்டக, ஆமாம் என்று கூறினேன் உடனே கோவில் கோபுரத்தை பார்த்து பகைவன் சீக்கிரம் இவனுக்கு திருமணமாக அருள்புரி என்று அவர் கூற சிரித்துக்கொண்டே கோவிலுக்குள் நுழைந்தேன்


துப்பாக்கிகளை வைத்துக்கொண்டு மூலைக்கு மூலை காவலர்கள் நின்றுக்கொண்டிருந்தனர் எதேச்சையாக மேலே பார்க்க படங்களில் வருவது போல் ஆங்காங்கு காவலர்கள் நின்றுக்கொண்டு துப்பாக்கி வைத்துக்கொண்டிருந்தனர்.
கிருஷ்ணர் பிறந்த இடத்தில் அவரது படம் வைத்திருக்கின்றனர் நம்ம ஊர்களில் மிக பழையவீடுகளுக்குள் செல்வது போன்ற உணர்வு இருந்தது. அந்த இடத்தை பார்த்து பெரியதாக ஈர்ப்பு ஏதும் ஏற்ப்படவில்லை. (அடுத்த இரண்டு பயணங்களிலும் கூட) அங்கு ஒரு வயதான பெண்மணி இந்தியில் கிருஷ்ணன் புகழை பாடிக்கொண்டிருந்தார். பிறகு அந்த இடத்தை ஒட்டி மண்டபம் போல் இருந்த கோவிலுக்கு சென்றேன், சிலைக்கு திரை போட்டு மூடிருந்ததால் சிறிது நேரம் அங்கு அமர நேர்ந்தது கண்களை மூடிக்கொண்டு எதையோ நினைத்துக்கொண்டிருந்தேன். கண்களை திறந்து பார்க்கும்பொழுது திரைவிலகிருந்தது பளிங்கிபோன்ற கிருஷ்ணா, ராதா சிற்பம் கடவுள் நம்பிக்கைக்கு அப்பாற்பட்டு கவர்ந்தது (அப்பொழுது எனக்கு கடவுள் நம்பிக்கை அவ்வளவாக கிடையாது). அதோடு அந்த சிலையை பார்பவர்களுக்கு கட்டாயம் திருமணம் செய்துகொள்ள தோன்றும் (திருமணம் ஆகாதவர்களுக்கு ), எனக்கு உடனே அந்த காவலரின் நினைப்பு வந்தது. கொடுத்த நேரம் முடிந்திருந்ததால் வண்டியை நோக்கி புறப்பட்டேன். அடுத்த இரண்டு பயணங்கள் மதுரா செல்ல அந்த சிலை என்னை கவர்ந்ததும் ஒரு காரணமாக இருக்கலாம்.
வண்டி இப்பொழுது பிருந்தாவனை நோக்கி சென்றது அங்கு பல சிறு சிறு கோவில்கள் இருக்கின்றன முதல் முறை அங்கு சென்றபொழுது எனக்கு அது தெரியாது பிருந்தாவன் என்றால் ஒரு குறுப்பிட்ட புகழ் பெற்ற கோவிலுக்குத்தான் கூட்டிசெல்வார்கள் என்று நினைத்துவிட்டேன். அங்கு காசுக்கு இருந்த மரியாதை கிருஷ்ணனின் புகழை மிஞ்சிருந்தது. எனக்கு அன்று கூட்டி சென்ற கோவில் பிடிக்கவில்லை (இரண்டாவது முறை சென்ற கோவில் பிடித்திருந்தது கோவில் பெயர் நினைவில்லை) மதுரா மற்றும் பிருந்தாவனும் லெஸ்ஸி மற்றும் பால் பொருட்களுக்கு புகழ்பெற்றது, பார்க்கும் இடங்களில் எல்லாம் கிடைக்கும். லெஸ்ஸி மிகவும் நன்றாக இருந்தது.

பயணம் முடிந்து டெல்லியை நோக்கி கிளம்பினோம், இரவு பன்னிரெண்டை தாண்டியப்பின்தான் நான் ஏறிய இடத்துக்கு சென்றோம் பெட்ரோல் நிலையத்தின் எதிர் திசையில் இறங்கி, டிராவல்சுக்கு அழைக்க ரிங் போய் கொண்டே இருந்தது ஒருவரும் எடுக்கவில்லை, இனி இவர்களை நம்புவது வீண் என்று முடிவுசெய்து, அருகில் இருந்த ஆடோவை கேட்க வரமுடியாது என்று கூறிவிட்டார், வேறு ஆடோக்க்காக காத்திருந்து காத்திருந்து மணி ஒன்றுக்கு மேல் கடந்துவிட்டது. அருகில் ஒரு சுமோ போன்ற வண்டியில் இடுப்பில் கை துப்பாக்கியுடன் இருந்த காவலரிடம் எங்கு ஆட்டோ கிடைக்கும் என்று கேட்க அவர் பழைய ஆட்டோகாரரையே கை காட்டினர், அவர் வர முடியாதுன்னு கூறிவிட்டார் என்று கூற. என் கூட வா என்று அழைத்து சென்றார். ஏன் போகமாட்டேன்கிற என்று அவர் கேட்க சார் எனக்கு அங்க போக பெர்மிட் இல்ல என்று கூறி வேறு எங்கோ சென்ற ஆட்டோ ஒன்றை நிறுத்தி ஒரு இடத்தில் இறங்கி மாறிக்கொள் என்று அனுப்பிவைத்தார்.

அந்த ஆட்டோவில் என்னைத்தவிர ஐந்தாறு பேர் இருந்திருக்கக்கூடும். வண்டி ஓட்டுனரிடம் நான் போக வேண்டிய இடத்தை சொல்ல ஐயோ இது பரிதாபாத் போகுது என்று கூறிகொண்டிருக்கும் பொழுதே நிறுத்துங்கள் என்று கூறி ஒரு பாலத்திற்கு அடியில் இறங்கிக்கொண்டேன்.(இருந்த இடத்திலிருந்து இரண்டு கி.மீ கடந்திருப்போம்) பயபுள்ள ஏமாத்தி ஏத்திவிட்டுடானே என்று எண்ணிக்கொண்டு அடுத்த வண்டிக்காக காத்திருந்தேன். எந்தவண்டியும் நிற்கவில்லை. வேறு வழியில்லாமல் பாலத்திற்கு கீழ் ஒரு ஆடோவுக்குள் தூங்கிகொண்டிருந்தவரை எழுப்பி போகவேண்டிய இடத்தை சொல்லி வண்டி எதுவும் நிற்க்கமாட்டேன்கிது என்று கூற, இங்க எந்த வண்டியும் நிற்காது என்று கூறி, என் நிலைமையை பார்த்து என்னுடன் வர சம்மதித்தார், பர்மிட் இல்லாததால் அக்க்ஷ்யதாமை தாண்டி விட்டுவிடுகிறேன் அதற்க்கு மேல் வரமுடியாது என்று கூற நான் எதுவும் பேசாமல் சம்மதித்தேன்.

அக்க்ஷயதாமை தாண்டி என்னை இறக்கிவிட்டவுடன் மிக்கநன்றி என்று கூறி அவரை அனுப்பிவிட்டு அடுத்தவண்டிக்காக காத்திருந்தேன். செய்தித்தாள் எடுக்கவந்தவர் ஆடோவை நிறுத்த, நான் சவாரி ஏத்தக்கூடாது ஆனா உங்களை இந்தியன் ஆயில் வரை வேண்டுமானால் விட்டுவிடுகிறேன் என்று கூறி ஏற்றிக்கொண்டார் அங்கு சென்றவுடன் அவரை கூட்டிக்கொண்டு இரவு கடைக்கு (தள்ளுவண்டி கடை, அதுமட்டும்தான் இருக்கும் இரவில்) சென்று தேநீர், தங்கராசாவை வாங்கிகொடுத்து மற்றும் பேசியதொகையை(அவர் கேட்டதொகையை) கொடுத்துவிட்டு தங்கராஜா வடிகட்டி மென்சுருட்டாரை துணைக்கு அழைத்துக்கொண்டு வீட்டுக்கு நடக்கத்தொடங்கினேன் (அதற்குள் அதிகாலை ஆகிவிட்டது)

அடுத்தானாள் அந்த டிராவல்ஸ் எண்ணுக்கு தொடர்புகொள்ள தொடர்ந்து அழைத்துக்கொண்டே இருந்தேன் ஆனால் யாரும் எடுக்கவே இல்லை...

(நான் பயணத்திற்கு முன்பதிவு செய்தது தொலைபேசியில், காசு வீடுதேடி வந்து வாங்கிக்கொண்டனர் அதனால் இறுதிவரை அந்த டிராவல்ஸ் எங்கு இருக்கின்றது என்றே பார்க்கவேயில்லை)

ஹரித்வார் மற்றும் ரிஷிகேஷ்

*
நானும் எனது வடஇந்திய நண்பனும் ஹரித்வார் மற்றும் ரிஷிகேஷ் செல்ல திட்டமிட்டு காஷ்மிரி கேட் பேருந்து நிலையத்தை இரவு சென்றடைந்தோம். தேராதூநிலிருந்து ரிஷிகேஷ் செல்லும் வழியின் இருபக்கமும் அழகாக இருக்கும் என்று என் அலுவலக நண்பர் ஒருவர் சொன்னதால். தேராதூன் பேருந்து எடுத்து செல்லலாம் என்று என் நண்பனிடம் சொல்ல, அது ரொம்ப சுத்து என்று அவன் சொல்ல, அது எனக்கு தெரியும் நீ சும்மா வா என்று கூறிக்கொண்டே தேராதூன் பேருந்தில் ஏறினேன் நண்பனும் "பாகல்" என்று என்னை திட்டிக்கொண்டே என் அருகில் வந்தமர்ந்தான்.

வண்டி கிளம்பியது, முதல் முறை உத்ராஞ்சல் செல்வதால் சன்னல் அருகில் அமர்ந்துகொண்டு வேடிக்கை பார்த்துக்கொண்டே சென்றேன். என் நண்பன் முனகிக்கொண்டே வந்தான். விடியற்காலை தேராதூன் பேருந்து நிலையத்தை அடைந்தோம். ஒரு மாநில தலைநகர பேருந்துநிலையமா என்று வெறிச்சோடி கிடந்தது கேள்விகேட்கவைத்தது. இருந்தாலும் நமக்கு காபி தானே முக்கியம் என்று ஒரு காபி வாங்கி குடித்துக்கொண்டு இருக்கும் பொழுதே ஹரித்வார் பேருந்து வந்து சேர்ந்தது, முதல் ஆளாக பயணசீட்டு வாங்கிகொண்டு மீண்டும் வலது சன்னலோரம் அமர்ந்துகொண்டேன்

இரவு சரியாக தூங்காததால் தூக்கம் என்னை துரத்திக்கொண்டிருந்தது.. இருந்தாலும் இவ்வளவு தூரம் சுற்றிக்கொண்டு வந்தது வீனாங்கி விடக்கூடாது என்று வேடிக்கை பார்த்துக்கொண்டே வந்தேன். வந்தது வீண்போகவில்லை என்று அந்த இயற்க்கை அழகு நிறுபித்தது, ஆனால் என்நன்பன் அதை பார்க்க கொடுத்துவைக்காமல் தூங்கிவிட்டான். ஹரித்துவாரை அடைந்தவுடன். நேராக குளிக்க நண்பன் கூட்டிச்சென்றான் கங்கைல தான் குளிக்கணும் என்று கூட்டிசென்றான், நான் முதன்முதலில் கங்கையை பார்த்தது அங்குதான். தெளிந்த தண்ணீர், கொஞ்சம் அசந்தால் அடித்துசென்றுவிடும் போலிருந்தது நீரின் வேகம், மிக அதிகமாக கூட்டம் இருந்ததால் மெதுவாக குளித்துவிட்டு பக்கத்தில் இருந்த கோவிலுக்கு சென்று வந்தோம். பிறகு ரோப் கார் வழியாக மானச தேவி கோவிலுக்கு செல்ல திட்டமிட்டோம், ஆனால் ரோப் காரில் செல்ல கூட்டம் மிக அதிகமாக இருந்ததால் வேறு வழியில்லாமல் நடந்தே சென்றோம்.


நம்பிக்கை அவ்வளவாக இல்லாததால் ஏதோ பேருக்கு சென்றது போல கோவிலுக்கு சென்றுவிட்டு திரும்பினேன். இதுக்கு மேல இங்க வேணாம் நாம ரிஷிகேஷ் செல்லலாம் என்று ஒரு வண்டியில் ஏறினோம் நின்றுகொண்டிருந்த ஒரு பெரிய சிவன் சிலையை கடந்து சென்றோம். ரிஷிகேசில் ராமன் ஜுலா அருகில் அந்த வண்டிகாரர் இறக்கிவிட்டார், ராமன் ஜுலா வழியாக கங்கையை கடந்து அருகில் இருந்த ஹோட்டலில் ஒரு அறை எடுத்துக்கொண்டோம், சிறிது ஓய்வுக்கு பின், ரிஷிகேசை சுற்ற கிளம்பினோம்.

கங்கை நதி மிக அகலமாக இருந்தது, இரு கரைகளுக்கும் செல்ல படகு சவாரி இருக்கின்றது மற்றும் ராமன் ஜுலா, லக்ஷ்மன் ஜுலா என்று இரண்டு தொட்டில்கள்(பாலங்கள்), இருக்கின்றது.(லக்ஷ்மன் பாலம் எங்கிருக்கின்றது என்று ஒருவரை நான் கேட்க பாலம் அல்ல தொட்டில் என்று சொல்லவேண்டும் என்று முறைத்துக்கொண்டு சென்றார்), ஊரில் பாதிக்குமேல் வெளிநாட்டவர், அவர்களில் பெரும்பாலோனோர் காவி உடையில் அலைந்துகொண்டிருந்தனர். நிறைய சாமியார்கள் காவிவுடையில் இருந்தனர். மற்றும் திரும்பி இடம் எல்லாம் தியானபயிற்சி விளம்பரங்கள் இருந்தது.

ராமன் ஜுலா அருகில் இருந்த கோவிலுக்கு சென்றோம், பிறகு தேநீர் குடித்துவிட்டு கங்கையின் கரையில் மெதுவாக நடந்து சென்றோம். சிறு சிறு குழுக்களாக தியான பயிற்சி செய்துகொண்டிருந்தனர், ஒருசில வெளிநாட்டவர் அதிகமுடி வளர்த்துக்கொண்டு சாமியார் போல் காட்சியளித்தனர். சிறிது தூரத்திலேயே ஆற்று மணலில் இறங்கி நடக்க ஆரம்பித்தோம். சுற்றிருந்த மலைகள் கங்கைக்கு மேலுமும் அழகு சேர்த்தது. இங்கிருந்து தான் இமயமலை ஆரம்பிக்கிறது என்று தெரிந்ததும் ஒருவித மகிழ்ச்சி என்னுள் பரவியது, நதியின் சத்தத்தை தவிர வேறு எதுவும் கேட்கவில்லை அவ்வளவு அமைதியாக இருந்தது.

சிறிது நேரம் அமர்ந்துவிட்டு செல்லலாம் என்று முடிவெடுத்து ஆற்று மணலில் தனி தனியே அமர்ந்துகொண்டோம். எதிர் கரையில் முட்செடிகளுக்கு நடுவே யாரோ அமர்ந்திருப்பது போல் தோன்றியது ஆற்றின் அகலம் அதிகம் என்பதால் சரியாக தெரியவில்லை, உடனே புகைப்பட கருவியை கொண்டு ஜூம் செய்து பார்க்க ஒரு யோகி தியானம் செய்துகொண்டிருந்தது தெரிந்தது, அனால் முட்செடிகளுக்கு நடுவில் அந்த இக்கட்டான இடத்தில கடினப்பட்டு சென்று தியானம் செய்வதன் நோக்கம் எனக்கு புலப்படவில்லை,

கங்கை நதியில் குழந்தை போல் சிறுது நேரம் விளையாடிவிட்டு மணலில் வந்தமர்ந்தேன். சிறிது நேரத்திலேயே அமைதி என்னை கவ்விகொண்டது நன்றாக உணரமுடிந்தது ஒருமுறை அங்கு வந்தவர் மீண்டும் மீண்டும் வருவதன் காரணம் ஏதோ புரிந்தது போல தோன்றியது. ஆனால் அதிகமானோர் காவயுடையில் திரிவதன் காரணம் புலப்படவில்லை. ஆதவன் வீட்டுக்கு கிளம்பி கொண்டிருப்பதை உணர்ந்து லக்ஷ்மன் ஜூலாவை நோக்கி பயணித்தோம். சிறிது நேர நடைபயணத்திற்கு பின் லக்ஷ்மன் ஜூலாவை அடைந்தோம். அருகில் இருந்த கோவிலின் ஒவ்வொரு தளத்திலும் அனைத்து வகையான லிங்கங்களும் இருந்தது. கோவிலின் மேல் தளத்திலிருந்து பார்க்க கங்கையின் வளைவு, லக்ஷ்மன் ஜுலா மற்றும் கங்கையில் ராப்டிங் செய்து கொண்டிருப்பவர்களை பார்க்க அழகாக இருந்தது.(ராமன் ஜூலா)

(லக்ஷ்மன் ஜூலா)


லக்ஷ்மன் ஜூலாவை கடந்து சாலை வழியாக (எதிர் கரை), ராமன் ஜூலாவை நோக்கி பயணித்தோம். வழியில் லக்ஷ்மன் சிலையை கடக்கும் பொழுது. சுயநலமில்லாத ஒரு நல்ல மனிதன் லக்ஷ்மன். என்று என் அலுவலக தமிழ் சீனியர் எப்பொழுதோ சொன்னது ஞாபகத்திற்கு வந்தது. சிறிதுநேர நடைபயனத்திருக்கு பின் ராமன் ஜூலாவை அடைந்தோம் அறைக்கு செல்வதற்கு முன் ஒரு உணவகத்திற்கு சென்றோம். வெளிநாட்டவர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தது போல் தோன்றியது ஆனால் அதிக தாடியுடன் எங்களுக்கு எதிரில் அமர்ந்திருந்த வெளிநாட்டவருக்கும் எங்கள் கதி தான்.

எதிரில் இருந்தவர் தன்னை ஈரோப்பில் உள்ள ஒரு சிறிய நாட்டை சேர்ந்தவன் என்று அறிமுகபடுத்திக்கொண்டார். சில வருடங்களுக்கு முன் வந்தபொழுது இருந்த அமைதி இப்பொழுது இங்கு இல்லை மற்றும் மக்கள் தொகை அதிகரித்துவிட்டது அதனால் அமைதி போய்விட்டது என்று குறைபட்டுக்கொண்டார். மேலும் அவர் அமைதியை தேடி பத்ரிநாத் செல்லவிருப்பதாக கூறினார். ஏற்கனவே என் கூட வந்த நண்பன் பத்ரிநாத்தை பற்றி கூறியிருந்தது நினைவுக்கு வந்தது. அவர்கள் கூறியதை வைத்து ஒழுங்கற்ற பாதை மற்றும் கொடியமிருகங்கள் நடுவில் ஒரு பெரியமலை மீது அந்த கோவில் இருப்பதாக கற்பனை செய்துகொண்டேன் ஆனால் கண்டிப்பாக ஒரு நாள் அங்கு செல்லவேண்டும் என்ற எண்ணம் அப்பொழுது என்னுள் விதைக்கப்பட்டது. மேலும் அவரது மொழி சமஸ்கிருதத்தை ஒத்திருக்கும் என்று கூறினார். தியானம் கற்றுக்கொள்ளுங்கள் என்று அறிவுரைகளும் கிடைத்தது.

உணவை முடித்துக்கொண்டு அறைக்கு திரும்பும் வழியில் அமர்ந்திருப்பது போல் ஒரு பெரிய சிவன் சிலை தென்பட்டது அதன் அரிகில் ஒரு வெள்ளைக்கார பெண்மணி வெள்ளையுடையில் எதோ பொன்மொழிகளை அங்கு அமர்ந்திருப்பவர்களுக்கு சொல்லிக்கொண்டிருந்தார். அந்த சிலையின் அரிகில் செல்ல எனக்கு ஆவல் ஏற்பட சூவை கலட்டதொடங்கினேன்.. அதற்குள் அந்த பெண்மணி சூவுடனே வரலாம் என்று கூறினார். சிவன் சிலை அரிகில் செல்வதற்குள் எனக்கு குற்றஉணர்வு மேலோங்க. திரும்பி வந்து சூவை கழற்றிவிட்டு சிலையரிகில் சென்றேன் சிறிது நேரம் அங்கு அமர்ந்திருந்து இரவில் நிலவொலியில் கங்கையை கண்டுவிட்டு அறைக்கு திரும்பினோம்.

அடுத்தநாள் காலை அறையை காலிசெய்துவிட்டு கடைத்தெருவுக்கு சென்றோம் ராமன் ஜுலா அருகில் இருக்கும் கடைகளில் ருத்ராட்சம், ஸ்படிக மாலை கிடைக்கின்றது ஆனால் அசலா என்று பார்த்து வாங்குவது உங்கள் சாமர்த்தியம் அதே போல் ஓரிரு புத்தகசாலைகள் உள்ளன பெரும்பாலான ஆன்மீக புத்தகங்கள் இங்கு கிடைக்கின்றன. ஆனால் குறிப்பிட்ட தொகைக்கு மேல்வாங்கினால் தான் பண அட்டையை பயன்படுத்தமுடியும். பணமாக கையில் கொண்டு செல்வது நலம். அங்கிருந்து நேராக பேருந்து நிலையத்திற்கு சென்றோம். முக்கியசாலையில் இருந்து ஒரு சிறிய சாலை வழியாக பேருந்து நிலையத்திற்கு செல்லவேண்டும். அப்படி இக்கட்டான இடத்தில் பேருந்து நிலையத்தை வைத்திருந்த அரசாங்கத்தை பாராட்டாமல் இருக்கமுடியவில்லை.

நல்ல குளிர் சாதனம் செய்யப்பட்ட பேருந்தை பிடித்து டில்லியை சென்றடைந்தோம். அடுத்தநாள் அலுவலகம் சென்றதும் என்னை கூட்டி சென்ற நண்பனுக்கு எங்கள் கூட வேலைசெய்யும் சக நண்பரிடம்(கொஞ்சம் வயதானவர்) இருந்து நல்ல திட்டு கிடைத்தது, நம்மஊர் பெரியவர்கள் காசிக்கு செல்வது போல் வடஇந்தியர்கள் ஹரித்துவார் மற்றும் ரிஷிகேஷ் செல்வார்களாம். வயசான காலத்துல போகவேண்டிய இடத்துக்கு இப்பவே என்னை கூடிட்டு போனதுக்குதான் அந்த திட்டு. ஆனால் எனக்கு என்னமோ ஹரிதுவார் மற்றும் ரிஷிகேஷ் அனைவரும் செல்ல அருமையான இடமாக தோன்றியது குறிப்பாக ஆன்மீக தேடல் உள்ளவர்களை வெகுவாக ஈர்க்கும்.

குறிப்பு : ஹரித்துவார் மற்றும் ரிஷிகேஷ் செல்பவர்கள், டில்லியில் காஷ்மிரி கேட்டில் இருந்து ரிஷிகேஷ் பேருந்தை எடுத்தால் ஹரித்துவாரில் இறங்கிகொள்ளலாம், ஹரித்துவாரில் இருந்து ரிஷிகேசுக்கு அறை மணிநேரத்தில் சென்றுவிடலாம்