பத்ரிநாத் - குப்தகாசி - கேதர்நாத் - பகுதி 2

*
பகுதி 1 படிக்க இங்கு சொடுக்கவும்ஜோஷிமத் வருவதற்குள் என் பக்கத்து இருக்கையில் பெரியவரும் அவரது மனைவியும் மாறி மாறி அமர்ந்து வந்தனர்(முழுக்குடும்பமும் வந்ததால் அவர்கள் பேச்சிதுனைகேர்ப்ப அவ்வபோது மாறி அமர்ந்துகொண்டனர்), இருவருமே வயதானவர்கள். அந்த பாட்டி அவர்கள் வீட்டில் செய்து கொண்டுவந்த தின்பண்டத்தை கொடுக்க பேருக்கு ஒன்று எடுத்துக்கொண்டேன். பேருந்து பயண வழியெங்கும் இருசக்கர வாகனங்களில் வரும் சர்தார்களை காணமுடிந்தது எனக்கு அருகில் அமர்ந்திருந்த பெரியவரை அது பற்றி கேட்க இந்த வழியாக செல்லும் அனைத்து வாகனங்களும் பத்ரிநாத்துக்குதான் செல்லும் என்று கூறினார், எனக்கு அவர் பதிலில் உடன்பாடு இல்லை. தெரியாமல் சொல்கிறார் என்று உறுதியாக நினைத்தேன்.

ஜோஷிமத்தில் வண்டி இறக்கிவிட்ட இடத்தில் நிற்பதை பார்த்த பக்கத்து இருக்கை பெரியவர் அவர்களுடன் வந்து தங்கிகொள்ளும்படி கூறினர்(அறை பக்கத்திலேயே இருந்தது), தயக்கம் இருந்தாலும் எனக்கு வேறு வழியில்லை ஆகவே அவருடன் சென்றேன், நான் சென்ற வண்டியில் இருந்தவர்களில் பெரும்பாலோனோர் அங்கு இருந்தனர், புதியதாக கடைக்காக கட்டப்பட்ட இடத்தை வாடகைக்கு விட்டதில் எங்கள் வண்டியில் வந்தவர்களுக்கு அந்த இடம் கிடைத்தது. கூடவே பெட்டும் வாடகைக்கு கிடைத்தது. நான் கதவின் அருகிலேயே படுத்துக்கொண்டேன், பின்பு என்னருகில் பெரியவரின் மகன் வந்து படுத்துக்கொண்டார். எங்களுடன் பயணித்த மிக வயதான தம்பதிகளும் (இவர்கள் வேறு, இருவர் மட்டும் வந்திருந்தனர்). படுப்பதற்கு முன் அந்த தாத்தா சூடத்தை பற்றவைத்து சுற்றிலும் காட்டிவிட்டு அனைவருக்கும் திருநீறு கொடுத்தார். தூங்க ஆரம்பித்து சிலநிமிடங்களிலேயே யாரோ எழுப்புவது போல இருந்தது.

எழுப்பியது பெரியவரின் மருமகன், விடியற்காலையிலேயே எழுப்பிவிட்டனர், எழமனமில்லாமல் எழுந்து கிளம்பதுடங்கினேன். வரிசையாக தயார் நிலையில் நின்றுகொண்டிருந்தன வண்டிகள், நான் வந்த பேருந்தை கண்டுபிடித்து ஏறிக்கொண்டேன். சாலை திறக்கப்பட்டதும் வண்டிகள் நகர தொடங்கின, சாலைகள் நன்றாக இருந்தது என்று கூற இயலாது. வண்டி விஷ்னுப்ரயாக், கோவிந்க்காட் வழியாக சென்றது, ஜோஷிமத்திலிருந்து கோவிந்க்காட்டுக்கு இருபத்தி இரண்டு கி.மீ, கோவிந்க்காட்டிலிருந்துதான் ஹெம்குந்து செல்லவேண்டும், சீக்கியர்களின் புனிதஇடமாக இது விளங்குகிறது ஆனால் 15 கி.மீட்டர் மலையில் நடந்து சென்றுதான் அந்த இடத்தை அடையமுடியும். (சீக்கியர்கள் இருசக்கர வாகனங்களில் கானபட்டதர்க்கான காரணம் இதுதான்). வழியிலே ஒருவர் கைகாட்ட வண்டியை நிறுத்த அவரை எற்றிக்கொண்டனர் வேட்டிமட்டும் அணிதிருந்தார் மேல் சட்டை இல்லை கையில் பெரிய குச்சி அதில் முள் முள்ளாக இருப்பது போல் இருந்தது, அவரிடம் நடத்துனர் பயனசீட்டுக்கு காசு கேக்க, தன்னிடம் காசு இல்லை என்றும் தான் பாபா என்று கூறினார் (வடஇந்தியாவில் அனைத்து சாமியார்களையும்,யோகிகளையும் பாபா என்று தான் அழைப்பர்), சிறிது நேரத்தில் ஏன் இந்தமாதரி கம்ப வச்சிருக்கிங்க முள் முள்ளா இருக்கு என்று நான் கேக்க காடுகளில் இருப்பதால் மிருகங்களில் இருந்து பாதுகாக்க இதை வைத்திருக்கிறேன் என்று கூறினார்.

வண்டி பண்டுகேஷ்வர்ரை கடந்து ஹனுமான் சட்டியை நெருங்கும்பொழுதே பனிபடர்ந்த மலைகளை காண முடிந்தது, வாழ்கையில் அருகிலிருந்து பணிபாறைகளை முதலில் நான் கண்டது இங்குதான். ஹனுமான் சட்டிலிருந்து பத்ரிநாத் 11 கி.மீ தொலைவில் இருக்கின்றது. ஜோஷிமத்திலிருந்து பத்ரிநாத் வரும் வழி மிக அழகாகவும் அபாயகரமானதாகவும் இருக்கின்றது. ரிஷிகேசிலிருந்து பத்ரிநாத்துக்கு முன்னூறு கி.மீட்டர் பயணத்தை முடித்து பத்ரிநாத்தை அடைந்ததும், வண்டியிலிருந்து "பத்ரிநாராயண மூர்த்திக்கு ஜெ", " பத்ரி விஷால்கி ஜெ" என்ற கோஷங்கள் எழும்பின, பாதுகாப்பாக வந்துசேர்ந்த ஒரு காரணம் போதும் அந்த கோஷங்கள் எழும்ப, பக்திகாரண கோஷங்கள் எல்லாம் பிற்பாடுதான்.

கோவிலுக்கு சென்றுவிட்டு பிறகு சிறிதுநேரம் ஊரை சுற்றிவிட்டு கேதர்நாத் செல்லவேண்டும் என்பதுதான் என் எண்ணமாக இருந்தது. வண்டியிலிருந்தவர்கள் அனைவரும் இறங்க பொறுமையாக இறங்கி அனைவரும் செல்ல இறுதியாக நான் அவர்களை பின்தொடர்ந்தேன். வழியில் காபியும், சிற்றுண்டியும் கொடுத்துகொண்டிருந்தனர் ( கோவில் சார்பாக என்று நினைக்கின்றேன்), நான் காப்பியை மட்டும் வாங்கிகுடித்துக்கொண்டே சென்றேன் அந்த குளிருக்கு சூடான காப்பி இதமாக இருந்தது. திரும்பி இடது பக்கம் பார்க்க முழுவதும் பனிபடர்ந்த மலை எதோ வெள்ளை பஞ்சை கொட்டிவைத்ததுபோல் இருந்தது கால்கள் நடக்க மறுத்துவிட்டன. சிலநிமிடங்கள் அங்கேயே நின்று பாருத்துகொண்டிருந்தேன். தனியாக சென்றால், யார் என்ன நினைப்பார்கள் என்று கவலைகொள்ளாமல் நாம் நாமாக நமக்கு பிடித்ததை ரசிக்க பிடித்த இடத்தில் அதிக நேரத்தை செலவளிக்கமுடியும்.கோவில் எந்த திசையில் இருக்கின்றது என்று தெரியாததால் மக்கள் கூட்டம் சென்றுகொண்டிருந்த திசையை நோக்கி பின்தொடர்ந்தேன். சிலநிமிட பயணத்திலேயே கோவிலை நெருங்கிவிட்டேன். சிறு பாலத்தின் வழியாக ஆற்றை கடந்து (அழக்னண்டா) கோவிலருகே சென்றேன், அப்பொழுது பெரியவரின் மகன் என்னை அவருடன் கூட்டிசென்றார், என் பையை அவரிடம் கொடுத்துவிட்டு கோவிலுக்கு வெளியில் இருந்த கரம்குந்தில்(வெந்நீர்நிரப்பப்பட்ட தொட்டி) குளித்துவிட்டு கோவிலுக்குள் செல்ல வரிசையில் நிற்க எண்ணி வரிசையை தொடர்ந்து செல்ல அது ஒரு கி.மீ சென்றிருக்கும், இவ்வளவு கூட்டமாக இருக்கே எப்ப கோவிலுக்குள் போய் அப்பறம் எப்ப கேதார் போவது என்ற கவலை ஏற்பட்டது. ஈர ஷாட்ஷோடு வரிசையில் நின்றுகொண்டிருந்தேன் அனைவரும் கையில் அர்ச்சனை செய்ய பல பொருட்கள் சேர்ந்த ஒன்றை வைத்திருந்தனர் நானும் ஒன்று வாங்கிகொண்டேன் (திரும்பி போறப்ப அணியில் ப்ரஷாதம் கேப்பார்களே) மெல்ல நகர்ந்தது வரிசை ஓரிரு மணிநேரத்தில் கோவில் கதவை அடைந்தோம், கோவில் முன்பு கட்டப்பட்டிருந்த மணியிலிருந்து எழும்பும் ஓசையை கேட்பதே ஒரு வகை இன்பம்தான் வெளி வாயிலை தாண்டி கோவிலுக்குள் நான் நுழைந்ததும் கதவுசாத்தப்பட்டது அத்னால் எங்களுக்கு பல நிமிடங்கள் கடவுளைகாண வாய்ப்புகிடைத்தது.கோவிலுக்குள் நுழையும் பொழுதுதான் ஆகா.. எடுத்தவுடனே எதிர் கம்பெனிக்கு (வைணவம்) வந்துட்டேனே என்று தோன்றியது. வழக்கமாக வைணவ கோவில்களில் பெரிய ஈர்ப்பு எனக்கு இருந்ததில்லை (மதுராவில் கிருஷ்ணன் ராதா சிலையை தவிர்த்து ) பத்ரியும் அப்படித்தான் இருந்தது முதல்முறை செல்லும்பொழுது. பல கி.மீ பயணம் செய்து வந்ததால் கோவிலை பார்க்க ஆனந்தமாக இருந்தது என்பது உண்மை. கதவறிகில் இருந்தததால் அனைவரும் செல்லும்வரை அங்கு நின்று கருவறையை பார்க்க வாய்ப்பு கிடைத்தது. எதோ கறுப்பாக சிறியதாய் இருந்தார் மூலவர். இந்த கோவிலில் பழங்காலத்திலிருந்து நம்பூதிரிகள் தான் பூசை செய்கின்றனர், ஆதிசங்கரர் கேரளத்திலிருந்து வந்தாதால் கூட இருக்கலாம் (ஆயிரம் வருடங்கள் முன்புதான் மலையாளம் தோன்றியது, ஆதிசங்கரர் அதற்க்கு முன்பு தோன்றியவர் என்று நினைக்கின்றேன்). மூலவர் சன்னதியாயை விட்டு வெளியே வர எதிரே மகாலக்ஷ்மி சன்னதி. இவங்கள டெம்ப்ளேட்டா வச்சிதான் மகாலக்ஷ்மி மாதரி பொண்ணு கிடைக்கனும்ன்னு தேடுராங்கலானு பக்கத்தில் சென்று பார்த்தேன். அதன் அறிகிலேயே பல சிறிய சட்டிகளில் பொங்கிய சாதத்தை, நம்பூதரி வந்து தண்ணீர் தெளித்து ப்ரசாதமாக்க பிறகு அதை முப்பது ருபாய்க்கு பிரசாதமாக விற்கின்றனர் (கண்டிப்பாக காசுவுள்ளவர்களுக்குதான் பிரசாதம்)
முப்பதுரூபாய் கொடுத்து ஒரு தட்டில் (காகித தட்டு) சாதத்தை வாங்கி மூலவர் சந்நிதி சுவற்றில் சாய்ந்தவாறு உன்ன ஆரம்பித்தேன். உண்மையில் அதை நான் பிரசாதமாக பார்க்கவில்லை மதிய உணவாகத்தான் பார்த்தேன். (அனைவருக்கும் கிடைக்கவில்லை என்றால் அதன் பெயர் ப்ரஷாதம் ?).

உணவு உண்டுகொண்டிருக்கும் பொழுதே, சமையலறையில் இருந்து வந்த ஒருவரிடம் ஒரு விவசாயிபோலிருந்தவர் தானியங்களை தானமாக கொடுக்க முற்பட்டார் ஆனால் கோவிலை சேர்ந்தவர்(சமையலரையி இருந்து வந்தவர்) ஒரு விரலால் அதை தரையில் வைக்கசொல்ல, கொண்டுவந்தவர் தானியங்களை தரையில் வைத்தார், அதன் மீது தண்ணீர் தெளித்து பிறகு எடுத்துக்கொண்டார். ஆனால் சிறிது நேரத்திலேயே விவசாயிபோல் இருந்தவர் தன் நண்பரை கூட்டிவந்தார், ஆனால் அவரது நண்பர் பணமாக கொடுக்க இப்பொழுது கொடுப்பவரின் கை மேலும் வாங்கும் கோவிலை சேர்ந்தவரின் கை கீழுமாக இருந்தது, (இப்பொழுது தண்ணீர் தெளிக்க வில்லை ? ) முதல் நிகழ்வில் கோபமும் இரண்டாவது நிகழ்வில் சிரிப்பும்தான் எனக்கு வந்தது.

கோவிலை விட்டு வெளியே வந்து மலையை/கோவிலை திரும்பி பார்த்துவிட்டு எனது பையை கொடுத்தவரிடம் இருந்து வாங்கிக்கொண்டு பேருந்துநிலையத்தை நோக்கி நடக்கத்தொடங்கினேன்... சுற்றிலும் மலைசூழ்ந்த பகுதி பத்ரிநாத் பனிபடர்ந்த மலை, குளிர், நதி அதன் அழகு. எங்குபார்த்தாலும் காவயுடை சாமியார் கூட்டம், சாமியார் போர்வையில் பிச்சைகாரர்களும் இருப்பார் என்றே எனக்கு தோன்றியது ( காசு கொடுத்தவரின் முகத்தை பார்க்காமல் போட்ட காசைபார்தால் அவர் பிச்சைகாரர் என்று என் எண்ணமாக இருந்தது) கோபீஸ்வர் வழியாக கேதர்நாத் செல்ல பேருந்து இருப்பதாக ஏற்கனவே வழிபோக்கர்கள் சொல்லிருந்ததால் வேகமாக பேருந்து நிலையத்திற்கு சென்றேன். அங்கு பணிபுரிபர்களை கேக்க பேருந்து காலை எட்டுமைக்கே புறப்பட்டுவிட்டதாக பதில் வந்தது. இனி எப்படி செல்வது என்று யோசிக்கதொடங்கினேன்.

தேடல் தொடரும்...

குறிப்பு : புகைப்படங்கள் அனைத்தும் இரண்டாவதுமுறை சென்றபொழுது எடுத்தது

பத்ரிநாத் - குப்தகாசி - கேதர்நாத் - பகுதி 1

*


பத்ரிநாத் செல்வது கடினம், பெரிய மலைகளை கடந்து செல்லவேண்டும், என்ற நண்பர்களின் வார்த்தைகள் என்னை கண்டிப்பாக அங்கு போகவேண்டும் என்று தூண்டியது. ஒருவாரம் விடுப்பு எடுத்துக்கொண்டு நானும் என் நண்பனும் செல்ல திட்டமிட்டோம். ஆனால் எனக்கு மட்டும் தான் விடுப்பு கிடைத்தது. முடிவு செய்யப்பட்ட பயணம் ஏன் தடைபடவேண்டும் என்று தனியாக கிளம்பினேன். அதற்க்கு சில நாட்களுக்கு முன்பே கேதர்நாத், பத்ரிநாத்,கங்கோதரி, யமுநோதரி போன்ற இடங்களின் வரைபடம் மற்றும் தொலைவுகளை இணையத்தில் தேடி எடுத்துக்கொண்டேன். எனது அணியில் பெரும்பாலோனோர் வடஇந்தியர்கள்தான் அனால் அவர்கள் யாரும் பத்ரி,கேதர் சென்றதில்லை, ஒரு நண்பர் அவரது நண்பரிடம் கேட்டு எப்படி போகவேண்டு என்று கூறினார்.


நண்பர் கூறியபடி ஒரு ஆட்டோவில் ஆனந்தவிஹார் பேருந்து நிலையத்திற்கு செல்ல அங்கு ரிஷிகேஷ் பேருந்து இருக்கவில்லை. தவறுதலாக வந்தது பிறகுதான் தெரிந்தது, தனியா வேற போகணும், எப்படி பட்ட ஊர் / மக்கள் என்று கூட தெரியாது நான் பேசும் இந்தியை வைத்து கண்டிப்பாக தென்இந்தியன் என்று தெரியும் சிலர் ஏமாற்றகூட பார்ப்பார்கள் இத்தனை எண்ணங்களுக்கு மத்தியில், இப்படியே வீட்டுக்கு திரும்பிடலாமா என்று யோசிக்க . ச்சி ச்சி வீட்டுல இருந்து கிளம்பி வந்தாச்சி இனிமேல் எதுக்கு திரும்பி போகணும், தெரியாத ஊர் புதிய அனுபவம் கிடைக்கும் என்று எதோ ஒரு நம்பிக்கையுடன் ஒரு டவுன் பேருந்தை பிடித்து காஷ்மிரிகேட் பேருந்து நிலையத்தை அடைந்தேன், பிறகு ரிஷிகேஷ் செல்லும் பேருந்தில் ஏற ஆறுமனிநேர பயணத்துக்குப்பின் அடுத்தநாள் காலை ரிஷிகேஷ் பேருந்துநிலையத்தில் இறங்கி ஒரு தேநீர் குடித்துக்கொண்டே பத்ரி, கேதர், கங்கோதரி, யமுநோதரி செல்வதற்காக இருக்கும் பேருந்துநிலையத்தை (திஹ்ரி பேருந்து நிலையம்) பற்றி விசாரித்து ஒரு ஆட்டோவில் ஏறி அந்த பேருந்து நிலையத்தை அடைந்தேன். காலை 5.30 மணியிலிருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன, காலையிலேயே செல்வது சிறந்தது.


பேருந்துகள் சிறியதாக இருந்தன அதற்கான காரணம் அப்பொழுது தெரியவில்லை, இரண்டு பேருந்துகள் புறப்பட தயாராக இருந்தது ஒன்று கேதர்நாத்துக்கும் மற்றொன்று பத்ரிநாத்துக்கும் செல்லவிருந்து எதில் ஏறுவது என்று சிறு தயக்கம் வந்தது. பத்ரிநாத் செல்லும் பேருந்தில் இருக்கைகள் அதிகம் காலியாக இருந்ததால் அதில் ஏறிக்கொண்டேன். கடைசி வரிசையிலிருந்து மூன்றாவது வரிசையில் வலது சன்னலோரத்தில் அமர்ந்துகொண்டேன். சிறிது நேரத்திலேயே வண்டி நிரம்ப தொடங்கியது. ஜான்சியை சேர்ந்த ஒரு குடுபத்தினர் மகன் மகள்கள், மருமகன்கள், பேரகுழந்தைகள் உடன் வண்டியில் ஏறிக்கொண்டனர். குடும்ப தலைவர் எனது பக்கத்தில் வந்து அமர்ந்துக்கொண்டார், பலமாதங்கள் வெட்டப்படாத தலைமுடி, பலவாரங்கள் சவரம் செய்யாத முகம், டி.ஷர்ட் , சாட்ஸ் இது தான் என் அடையாளம். சிறுபையன் ஒருவன் கோவில் புராணங்களை இந்தி மற்றும் ஆங்கிலத்தில் விற்றுக்கொண்டிருந்தான் ஆங்கிலத்தில் ஒரு புத்தகத்தை வாங்கிக்கொண்டேன்.


வண்டி கிளம்பியவுடன் "பத்ரி விஷால்கி ஜெ" என்று கோஷங்கள் வண்டியிலிருந்து எழும்பின, வாங்கிய புத்தகத்தை படிக்க ஆரம்பித்து சிறிது நேரத்திற்கு பிறகு சன்னல்வழியாக வெளியே பார்க்க. சில மாதங்களுக்கு முன் நான் சென்ற லக்ஷ்மன் ஜுலா பாலத்தை உயரத்தில் இருந்து பார்க்க அற்புதமாக இருந்தது (ரிஷிகேஷில் இருந்து தான் இமயமலை ஆரம்பிக்கிறது), வண்டி மேலே செல்ல செல்ல கங்கை நதிக்கும் வண்டிக்குமான இடைவெளி கூடிக்கொண்டே இருந்தது. மிக உயரத்தில் இருந்து கங்கையை பார்த்துக்கொண்டே செல்வது புதிய அனுபவத்தை கொடுக்கும், வண்டி வழியில் நிறுத்த, இறங்கி சாலையின் ஓரத்தில் பலமாக கால்ஊன்றி கீழே ஓடும் நதியை பார்க்க ஒரே ஆனந்தம் ஒரு பக்கம் தவறி விழுந்தால் அவ்வளுவுதான் என்ற எண்ணமும் கூட. ஆனால் அதைவிட ஆழமான, அழகான இடங்களை பார்க்கபோகிறேன் என்று அப்பொழுது தெரியவில்லை. பயணம் வெற்றிபெற்றுவிட்டதாக மனது இங்கேயே அறிவித்துவிட்டது.

ரிஷிகேஷை அடுத்து கொஞ்சம் பெரிய ஊர் தேவ்ப்ரயாக், இங்கு தான் பாகிரதி மற்றும் அழக்னண்டா என்ற இரண்டு நதிகள் இணைந்து கங்கையாக மாறுகின்றது. கங்கையாக மாறி தரை பகுதியில் பாயும் முதல் இடம் ரிஷிகேஷ். வண்டியில் அமர்ந்துக்கொண்டே இவற்றை பார்த்துக்கொண்டு சென்றுக்கொண்டிருந்தேன் அப்பொழுது இவ்வளவு விபரம் தெரியாது, எனக்கு அருகில் இருந்த பெரியவர் தான்னை அறிமுகபடுதிக்கொண்டு என்னை பற்றி கேட்டு தெரிந்துக்கொண்டார், அவரது மகள் திருமணம் முடிந்து குடும்பத்துடன் பத்ரிநாத் சென்று கொண்டிருப்பதாக கூறினார். அவர்கள் கொண்டுவந்த தின்பண்டங்களை எனக்கு கொடுத்தார் அப்பொழுது வேண்டாம் என்று மறுத்துவிட்டேன்.
(பாகிரதி மற்றும் அழக்னண்டா என்ற இரண்டு நதிகள் இணைந்து கங்கையாக மாறுகின்றது)

அடுத்து வண்டி ஸ்ரீநகர் என்ற ஊரை கடந்தது, மலைமீது அமைந்திருக்கும் பெரிய ஊர் மற்றும் அழகான ஊர், தேவ்ப்ரயாகில் இருந்து முப்பத்திமூன்று கி.மீ ரில் அமைந்துள்ளது இந்த ஊர். தனியாக நான் ஊர்சுற்ற கிளம்பியதால் அலுவலக நண்பன் (வடஇந்திய) அவ்வபோது எங்கு இருக்கிறேன் என்று என் கைதொலைபேசியில் அழைத்து தெரிந்துகொண்டான். உண்மையில் நான் தொலைந்துவிடுவேனோ என்ற பயமாக கூட இருந்திருக்கலாம். ஸ்ரீநகரில் இருந்து முப்பத்திநான்கு கி.மீ ரில் ருத்ரபிரயாக் என்னும் ஊர் வந்தது இங்கிருந்துதான் பத்ரிநாத்துக்கும் கேதர்நாத்துக்கும் இரண்டாக சாலைகள் பிரிகின்றன. அடுத்து கரன்பிரயாக், நன்ட்ப்ரயாக் வழியாக சென்று சமோலியை அடைந்தோம். இந்த ஊர் சமோலி மாவட்டத்தை சேர்ந்திருந்தாலும் மாவட்டத்தின் தலைநகரம் கோபீஸ்வர், சமோலியை கடந்து வண்டி ஜோஷிமத் செல்வதற்குள் இருட்டிவிட்டது (மாலையே வெளிச்சம் மங்கிவிடுகிறது) அங்கு இரவு தங்கிவிட்டு காலையில்தான் செல்லமுடியும் என்று கூறிவிட்டனர், மலைபகுதி என்பதால் பகலில் மட்டுமே பயணம் செய்ய அனுமதிஉண்டு. மற்றநேரங்களில் பாதையை மூடிவிடுகின்றனர். ஆதலால் இரவு அறை எடுத்து தங்கிவிட்டு விடியற்காலை ஆறுமணிக்குள் வண்டி இருக்கும் இடத்துக்கு வந்துவிடுங்கள் என்று ஓட்டுனர் கூறினர், ரிஷிகேசிலிருந்து ஜோஷிமத் வருவதற்கு பத்து முதல் பன்னிரண்டு மணிநேரமாகும், முழுவதும் மலைமீது பயணம்.( வழியில் மண்சரிவு, விபத்து எந்தவண்டிக்கும் நேராதபட்சத்தில்)


ஜோஷிமத்தில் இறங்கியவுடன் வீசிய காற்று சில்லென்று வருட, தொடக்கத்தில் இதமான குளிர் உடலில் பரவ ஒரு வித இன்பம் தொற்றிக்கொண்டது, ஜோஷிமத்தில் ஆதிசங்கரர் தங்கிருந்தாக கூறினர் எதையோ நிறுவியதாக கூட கூறினர், அவருக்கு ஒரு கோவில்கூட இருப்பதாக கூறினர். ஆனால் எனக்கு அந்த நேரத்தில் ஒரு அறை மட்டுமே தேவை என்பதில் கவனம் இருந்தது குளிர் அதிகமாக ஆரம்பித்ததால், பல நல்ல விடுதிகளை கொண்ட ஊர் வருடத்தில் இரண்டு மூன்று மாதங்கள் மட்டுமே நல்ல வருமானம் இருக்கும் என்று தோன்றுகிறது ( வருடத்தில் ஆறு மாதங்கள் மட்டுமே பத்ரி, கேதர் போன்ற கோவில்கள் திறந்திருக்கும் மற்ற மாதங்களில் கடும் பனிபொழிவு காரணமாக திறக்கப்படமாட்டாது) நான் சென்ற நேரம் அப்படி, ஒரு விடுதியில் கூட அறை கிடைக்கவில்லை, அதுமட்டும் இல்லாமல் தனியாக சென்றதால் அறை கிடைப்பது கடினமாக இருந்தது, குளிர் வேறு அதிகமாகிக்கொண்டே இருந்தது ஒரு மணி நேரம் அலைந்து எங்கும் தங்க அறை கிடைக்காததால் வண்டி இறக்கிவிட்ட இடத்திற்கே திரும்பி வந்தேன். கோவில் திறந்த முதல் இரண்டு மாதங்கள் பயணம் செய்ய சிறந்த நாட்கள் அடுத்து மழைக்காலம் வருவதால் யாரும் செல்ல விருப்பபடமாட்டார்கள் (மண்சரிவுகள் இருக்கும்) ஆகவே முதல் இரண்டு மாதங்கள் அதிக மக்கள் வருவதால் அறை வாடகை யானைவிலை இருக்கும் அதற்க்கு தயாராக இருந்தாலும் அறை கிடைப்பதில் சிரமம் இருக்கும். இன்னைக்கு சிவராத்திரிதான் குளிரிலேயே கிடக்கவேண்டியதுதான் என்று என்மனதை தயார் படுத்திக்கொண்டேன்.

தேடல் தொடரும்...

குறிப்பு : முதல் புகைப்படத்தை தவிர மற்ற அனைத்தும் இணையத்திலிருந்து எடுக்கப்பட்டது