நான் கண்ட கொழும்பு

*
கொழும்பு விமானநிலையத்தை விட்டு வெளியேவந்ததும் சிங்களதேசம் உங்களை வரவேற்கிறது என்று பொருள்பட சிரித்தமுகத்துடன் பெரிய கட்டவுட்டில் வரவேற்றார் "மன்னர்". யாழ் செல்லவிரும்பி நேரமின்மையால் (யாழ்ப்பாணம் செல்ல இலங்கை அரசிடம் அனுமதி முன்கூட்டியே வாங்கவேண்டும்) கொழும்போடு நின்றுவிட்டேன், தங்கிருந்த விடுதியில் சுற்றிபார்க்க நீர்கொழும்பு போ, கடற்க்கரை போ என்று அறிவுரை வழங்கினர் விடுதி ஊழியர்கள், பொது வாகனத்திலேயே ஊருக்குள் செல்வது என்று முடிவுசெய்து கட்டுநாயக்கா பேருந்து நிலையத்துக்கு சென்றேன், (பொது வாகனத்தை பயன்படுத்தும் பொழுது மக்களின் இயல்பு வாழ்க்கையை சிறிதேனும் அறிந்துக்கொள்ள வாய்ப்பு கிட்டும் ), கட்டுநாயக்கா பேருந்து நிலையத்தில் எங்கு செல்வது என்று தெரியாமல் நின்றுகொண்டிருக்க ஒரு குளிரூட்டப்பட்ட பேருந்து (வேன் போன்று இருந்தது) புறப்பட தயாராக இருந்தது, சிங்களத்தில் மட்டும் எழுதிருந்ததால் புரியவில்லை, அதை தவிர்த்து கோட்டை என்று தமிழில் எழுதிருந்த பேருந்தில் ஏறிக்கொண்டேன், சிங்களம் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ஊர் பெயர்கள் பெரும்பாலான பேருந்தில் எழுதபட்டிருந்தது.



கொழும்பை நோக்கிய பயணம் தொடர்ந்தது ஒரு மணிநேரத்தில் கோட்டையை அடைந்தேன் கோட்டை என்பது தொடர்வண்டி நிலையம் என்று ஊகத்தின் அடிப்படையில் வந்தது வீண்போகவில்லை. நினைத்த இடத்துக்குத்தான் வந்திருந்தேன், ஊரில் எங்கு பார்த்தாலும் மன்னர் எதோ ஒரு வெள்ளைகார பெண்மணியிடம் பட்டம் வாங்குவது போல ப்ளக்ஸ் வைத்திருந்தனர், மன்னரின் தம்பிமார்களின் படங்களும் ஆங்காங்கே பார்க்கமுடிந்தது. அந்த இடத்தை பொறுமையாக பார்த்துக்கொண்டே முன்னோக்கி சென்றேன். இலங்கை பணம் குறைவாக இருந்ததால் பணமாற்று கடையை தேடத்தொடங்கினேன், கண்ணில் படும்தூரத்தில் ஒன்றும் இருப்பதாக தெரியவில்லை, பக்கத்தில் இருந்த கடையில் வழிகேட்க ஒரு மசூதி அருகில் இருப்பதாக வழி கூறினார் அந்த கடைக்காரர், நேராக சுற்றி பார்த்துக்கொண்டே செல்ல மத்திய பேருந்து நிலையம் வந்தது, அதை கடந்தும் ஏதும் கண்ணில் படவில்லை, அருகில் ஒரு கடையில் தமிழில் பாடல் ஒலித்துக்கொண்டிருந்தது அவரிடம் வழி கேட்க, இந்தியாவிலிருந்து வரிங்களா ? என்று கேட்டு தமிழகம் என்று சொன்னதும் தமிழிலேயே பேசுங்க என்று கூறினார், சிறிது நேரம் உள்ள உக்காருங்க இந்த வேலைய முடித்துவிட்டு உங்களுக்கு உதவுறேன் என்று கூற. நானும் கடைக்குள் அமர்ந்துக்கொண்டேன்.

கொழும்பின் பல பேருந்து நிறுத்தத்தை கட்ட ஏர்டெல் உதவிருப்பதை உணரமுடிந்தது, பல விளம்பர தட்டிகளையும் நகர் முழுவதும் சிங்களத்தில் வைத்துள்ளனர், டி.வி.எஸ் மோட்டோர்ஸ் மற்றும் ஏர்டெல் விளம்பரங்கள் மட்டுமே தமிழில் பார்க்கமுடியவில்லை. அவர் வேலையை முடித்தபின்பு வெளியில் வந்து வழிகூறினார் அதற்க்கு முன்பாக அவர் நண்பரிடம் பேசி எங்கு கடை திறந்திருக்கும் என்று கேட்டு கூறினார். ஞாயிறு என்பதால் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டிருக்கும் என்று கூறி நகைக்கடைகளில் கேட்டு பாருங்கள் என்றும் கூறினார் வேண்டும் என்றால் தானும் கூடவந்து உதவுவதாக கூறினார், உதவிக்கி நன்றி கூறி வந்த பாதையிலேயே மீண்டும் நடக்க தொடங்கினேன்.

சிறிது தூரத்தில் வலது பக்கம் திரும்ப , சிறுதொழில் புரிவோருக்கான சந்தை இருந்தது அதை மன்னரின் தம்பி(அரசியல்) திறந்து வைத்திருந்தார் என்று புகைப்படம் காட்டிகொடுத்தது, தொடர்ந்து செல்ல பெரும்பாலான கடைகள் பூட்டப்பட்டிருந்தன, தனிமையில் கால்கள் போனபாதையில் சென்றுகொண்டிருந்தேன் வழிகேட்டால் பொறுமையுடனும் உண்மையான வழியையும் கூறுகின்றனர் கொழும்பு வாசிகள். சிறிது நேரத்தில் ஒரு மசூதியை அடைய அங்கு ஒரு சிறுவன் பக்கத்தில் ஒரு கடையிருப்பதாக கூற அங்கு சென்று பார்த்தால் கடை போட்டிருந்தது. அங்கிருந்தவரிடம் கேட்க ஆங்கிலத்தில் ஒரு தெருவின் பெயரை கூறி அங்கு நகைக்கடைகளில் கேட்டுப்பார்க்க கூறினார், அந்த தெருவை அடைந்ததும் பார்த்தால் செட்டியார் கட்டிடம், நாடார் கட்டிடம் என்று சாதி பெயர்கள் கொண்ட கட்டிடங்கள் அதிகம் காணப்பட்டது அந்த பகுதி முழுவதும் நகைக்கடை ஆனால் பெரும்பாலும் மூடப்பட்டிருந்தது. ஒரு கடையில் மட்டும் இன்றைய கணக்கு முடிச்சாச்சி குறைந்த அளவு வேண்டுமென்றால் மாற்றிக்கொள்ளுங்கள் என்று கூறினார், பணத்தை மாற்றிக்கொண்டு வெளியில் வந்து பார்த்தால் ஒரு ஆயிர ரூபாய் தாளில் மன்னர் இரண்டு கைகளை உயர்த்தி காண்பிப்பது போல இருந்தது.

லோஷன் அண்ணாவுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பே வருவதை தெரிவிக்க வேண்டும் என்று எண்ணி வந்து இறங்கிய பிறகு தான் கூப்பிட்டு சொல்லமுடிந்தது, நான்கு மணிக்கு மேல் வந்துடுவேன், பார்க்கலாம் என்று கூறிருந்தார், அவரை அழைத்து, இடம் தெரியாததால் மத்தியபேருந்து நிலையம் அருகில் இருக்கிறேன் என்று கூறிவிட்டு பேருந்து நிலையத்தை நோக்கிநடக்க தொடங்கினேன் குறுக்கு வழியில் வந்ததால் மீண்டும் சிறுதொழில் புரிவோர் சந்தை பக்கம் வந்துசேர்ந்தேன் அருகில் மேலே புத்தர் சிலையை காண நேர்ந்தது.



பேருந்து நிலையத்தை அடைந்தபொழுது வெய்யிலின் அளவு கூடியிருந்தது. சிறிது நேரத்திலேயே லோஷன் அண்ணன் அவரது உறவினர் ஒருவருடன் வந்து கூட்டிக்கொண்டு சென்றார், ஏற்கனவே ஒரு முறை லோஷன் அண்ணனை சிங்கையில் சந்தித்திருந்ததால் இயல்பாகவே பேசமுடிந்தது, ஏதாவது ஒரு கடைக்கு செல்லலாம் என்று அவர் வண்டியில் அந்த பகுதியில் பார்க்க அனைத்து கடைகளும் மூடிருந்தன, ஒவ்வொரு இடமாக செல்ல அந்த இடத்தை பற்றி கூறிக்கொண்டு வந்தார், நான் பணம் மாற்ற சென்ற தெருவிற்கு வேறு பெயர் இருந்தாலும் இன்னும் மக்கள் செட்டி தெரு என்று தான் அழைப்பார்களாம், அதை சுற்றியுள்ள பகுதியில் கடைவைத்திருப்பது பெரும்பாலும் தமிழகத்திலிருந்து வந்தவர்கள்தான் என்றும் கூறினார். இதே தெருக்களில் மற்ற நாட்களில் வந்தால் நடக்க கூட இயலாது அவ்வளவு கூட்டம் இருக்கும் என்று சொல்ல அந்த தெருக்களை மறுமுறை பார்த்துக்கொண்டே சென்றேன்.

சரியாக அமர்ந்து பேச நல்ல உணவகம் கிடைக்கததால் "கொழும்பி எந்த கடை திறந்திருக்கோ இல்லையோ கே.எப்.சி மற்றும் பீசா-ஹட் திறந்திருக்கும் வாங்க போகலாம் என்று கூட்டிசென்றார்" பல விசயங்களை பற்றி பேசிக்கொண்டிருந்தோம், தொலைபேசியில் பேசியபோதே பொன்னம்பலனார் கோவிலுக்கு போயிட்டு போங்க என்று சொல்லிருந்தார். சந்திப்பின் முடிவில் அவரே அந்த கோவிலில் வந்து இறக்கிவிட்டு அருகில் உள்ள அருளனந்தர் கோவிலுக்கு போயிட்டு போங்க வேண்டிக்கொண்டது நடக்கும் என்று நம்பிக்கை உள்ளது என்று கூறி விடைப்பெற்றார். நான் பணம் மாற்றுவதற்காக அந்த பகுதி முழுவதுமே சுற்றிருந்தேன் அதை சுற்றியுள்ள பகுதிகளை லோஷன் அண்ணன் காண்பித்திருந்தார்.


பொன்னம்பலனார் கோவில் கருங்கல்லால் கட்டப்பட்டிருந்தது, பராமரிப்புகூட நன்றாக இருக்கிறது, கோவிலை சுற்றி பார்த்துவிட்டு நடந்து சென்று அருளனந்தர் கோவிலை பார்க்க உள்ளுக்குள் சிங்களத்தில் பூசை நடந்துக்கொண்டிருந்தது. சில நொடிகள் கோவிலின் வெளியிலேயே நின்று பார்த்துவிட்டு மீண்டும் கோட்டையை நோக்கி புறப்பட்டேன். ஒரு பேருந்து எடுத்து கோட்டையை அடைந்ததும். விமானநிலைய பேருந்தில் ஏறிக்கொண்டேன் குளிரூட்டப்ட்டிருந்த வண்டி, பெயரளவில் மட்டும் குளிர் இருந்தது பேருந்து கட்டணமாக எழுபது வாங்கியதாக ஞாபகம். கட்டுநாயக்காவை ஒருமணிநேரம் இருபது நிமிடங்கள் சென்று வந்தடைந்தது, அருகிலிருந்த உணவகத்திற்கு சென்றுவிட்டு தங்கிருந்த விடுதியை நோக்கி சென்றேன். விடுதியில் பணிபுரியும் இருபது வயதை கடந்த சிங்கள பையன் ஒருவன் நன்றாக பேசிக்கொண்டிருந்தான். தமிழகத்தில் உள்ள பிரபலமான அரசியல்வாதிகள் எங்கள் அரசுக்கு எதிராக இருக்கிறார்கள் ஆனால் இங்கு சிங்கள , தமிழ் , இசுலாமிய மக்கள் அன்புடனும் அமைதியாகவும் வாழ்கிறோம் என்று கூறிகொண்டு இருந்தான்.

சிறிது நேரத்திலேயே ஒரு சிங்கள செய்தித்தாள் கொண்டுவந்து அதில் ஒரு படத்தை காட்டி இது எல்லாம் வி.புலிகளின் இடங்கள் இங்க தான் கொடுமை படுத்துவாங்க பாருங்க என்று காட்டினான். தாங்கள்/தங்கள் அரசு உங்கள் முன்பு தவறாக சித்தரிக்கபட்டுவுள்ளது என்பது போலவே பெரும்பாலான சிங்களர்களின் மனநிலை உள்ளது. தமிழர்களும் தங்களின் அடையாளங்களை இழக்க விரும்பவில்லை என்றே தோன்றுகிறது.

தனிமையில் பல பயணங்கள் சென்றிருக்கிறேன் நமக்கான முழு சுதந்திரமும் நம்மிடம் இருக்கும் ஆகவே மகிழ்ச்சியின் அளவும் கூடுதலாக இருக்கும் ஆனால் இந்த பயணத்தில் மகிழ்ச்சி என்பது ஏதும் இல்லை இலங்கையில் இறங்கி மீண்டும் கிளம்பும்வரை இதே தேசத்தின் இன்னொரு மூலையில் பலலட்சம் மக்கள் கொன்று புதைக்கபட்டிருகிறார்கள் / எரிக்கபட்டிருக்கிறார்கள் என்ற எண்ணம் இருந்துக்கொண்டே இருந்தது.