பத்ரிநாத் - குப்தகாசி - கேதர்நாத் - பகுதி 3

*


சமோலி சென்று வண்டி மாறி செல்லுங்கள் என்று பலர் கூற ஏனோ அப்படி போக தோணவில்லை, ஒரு நாள் பத்ரியில் தங்கிவிட்டு போகலாம் என்று முடிவுக்கு வந்து விடுதிஅறை தேட ஆரம்பித்தேன், ஆனால் நினைத்தது போல் எங்கும் அறை காலி இல்லை என்ற வசனம்தான், நடப்பது நடக்கட்டும் என்று பனி படர்ந்த மலையை நோக்கி நடக்க ஆரம்பித்துவிட்டேன் அது பத்ரிநாத் கோவிலுக்கு பின்புறம் அமைந்திருந்தது, சிறுது தூரத்திற்கு பிறகு சிறு சிறு குகைகள் சிறிய கோவில்களை பார்க்க முடிந்தது. அதிக மனித நடமாட்டம் கிடையாது. ஒரு சிலர் எதிரே தென்பட்டனர் ஒருவரும் மலைக்கு சென்றிருக்க வாய்ப்பில்லை என்று எண்ணிக்கொண்டேன்.


மலைக்கு ஏறுவதற்கு இடப்பக்கம் பெரிய பனிப்பாறை போன்று ஒரு கி.மீ மேல் பறந்து விரிந்து கிடந்தது. முதல் முறை பார்த்ததால் வித்தியாசமாக இருந்தது அங்கேயே கரையில் நின்றுவிட்டேன். அருகில் இருவர் இருந்தனர் அந்த பனி பாறை தொடங்கும் இடத்தை பார்க்க எண்ணி மலைஇருக்கும் திசையை நோக்கி பார்க்க கன்னுகெட்டும் தூரம் வரை அது பறந்து விரிந்து கிடந்தது. பணிகட்டிமேல் இறங்கி நடக்கலாமா என்று யோசித்துகொண்டிருக்கையில் அருகில் இருந்த இருவரில் ஒருவர் முதலில் ஒரு குச்சியையும் பிறகு ஒரு காலையும் வைத்து தட்டி பார்த்து இறங்க தொடங்கினார். துணைக்கு ஒருவர் கிடைக்க நானும் கட கட என்று கீழே இறங்கினேன், என்னை தொடர்ந்து முதலில் இறங்கியவரின் நண்பரும் இறங்கினார். முழங்காலுக்கு மேல் இருக்கும் பனிகட்டியின் உயரம் அதன் அடியில் ஊற்று போல தண்ணீர் ஓடிகொண்டிருந்தது. கையில் கொண்டு சென்ற குச்சியை கொண்டு பணிகட்டியில் கிறுக்க தொடங்கினேன் தமிழ் என்று சரியாக தெளிவில்லாமல் கிறுகிருந்தேன்.




இறங்குவதற்கு முன்பணிகட்டிகளின் மீது எறிந்திருந்த சிறுகற்கள் ஆங்காங்கு சிறு துளையை ஏற்படுத்தி பாதி வெளியே தெரிவது போல் இருந்தது அதில் ஒரு கல்லை எடுத்து பெரியதாக தமிழ் என்று எழுதினேன், அதை பார்த்து அருகில் இருந்தவர் என்ன எழுதிருகிங்க என்று கேட்க, அவருக்கு பதில் சொல்லிக்கொண்டே சிறுகுழந்தை போல பணிகட்டியில் சறுக்கி விளையாட தொடங்கினேன் என்னை பார்த்த அவர்கள் இருவரும் சறுக்கி விளையாட தொடங்கினார்கள், ஒருவருக்கு முப்பதைந்திருக்கும் இன்னொருவருக்கு நாற்பது வயதிருக்கும்.

( அடுத்த முறை சென்றபொழுது அங்கு பனிபாறைகள் இல்லை ஒரு ஆறு ஓடிகொண்டிருந்தது முதல்முறை சென்றபொழுது அதன் மீதுதான் விளையாடிகொண்டிருந்தேன் என்று நினைக்க சிலிர்ப்பாக இருந்தது, கொஞ்சம் பனிப்பாறை கரைந்திருந்தாலும் முதல் முறையே சிவலோகத்தை பார்த்திருப்பேன்)

சிறிது நேர விளையாட்டுக்கு பின் மீண்டும் மேலே ஏற தொடங்கினேன் அதற்குள் அவர்கள் இருவரிடமும் நல்ல அறிமுகம் கிடைத்துவிட்டது ஒருவர் மட்டும் புதிதாக வந்திருப்பதாகவும் அடுத்தவர் ஒவ்வொரு வருடமும் வந்து ஒருமாதம் தங்கிருந்துவிட்டு செல்வதாகவும் கூறினார். நேரம் போனது தெரியாமல் அங்கேயே சில மணிநேரம் இருந்திருக்க கூடும் இறுதியாக திரும்பும் பொழுது அவர்கள் எங்க தங்கிருகிங்க என்று வினவ இன்னும் அறை கிடைக்கவில்லை போய்த்தான் தேடனும் என்று கூறினேன், அறை கிடைப்பது கடினம் என்று கூறினார் பத்ரிநாத்தை நன்கு தெரிந்த அவர். சிறிது நேரத்திலேயே உங்களுக்கு விருப்பம் இருந்தால் எங்களுடனே தங்கலாம் ஒரு மடத்துக்கு சொந்தமான இடத்தில் தான் தங்கிருக்கிறோம் என்றார்.

சில மணிநேர பழக்கம்தான் என்றாலும் பெரியதாக நான் யோசிக்கவில்லை உடனே ஒப்புக்கொண்டேன் மடம் என்பதால் எதுவும் பிரச்சனை இருக்காது என்று என் மனம் என்னிருக்கலாம். வாடகை எவ்வளவு என்று கேட்க ச்சே ச்சே அது எல்லாம் இல்லை என்றார்.




கீழே இறங்கி கோவிலுக்கு அருகில் ஒரு பாலத்தின் தொடக்கத்தில் சிறிது நேரம் அமர்ந்தோம் பல காவிவுடை சாமியார்கள் கடந்து சென்றுகொண்டிருந்தனர், அங்கு அமர்ந்துகொண்டே சுற்றிலும் இருந்த மலைகளை பார்த்துக்கொண்டிருந்தேன். பிறகு ஒரு மடத்திருக்கு கூட்டிசென்றனர் அங்கு ஒரு சாமியார் அங்கு நின்றுகொண்டிருந்த மற்ற சாமியார்களுக்கு எதோ ஒரு சீட்டை கொடுத்துகொண்டிருந்தார், உணவு உண்பதற்காக இருக்கலாம் என்று எண்ணிக்கொண்டேன் என்னை அவர்கள் கூட்டிக்கொண்டு அந்த மடத்தின் தலைமை சாமியார் அறைக்கு சென்றனர், அந்த அறை முழுவதும் கடவுளின் படங்கள் அவர்கள் இருவரும் வயதான சாமியாரின் காலில் விழுந்து ஆசி வாங்கினார் பிறகு தரையில் அமர்ந்தனர், சாமியாரும் தரையில் அமர்ந்தார் நானும் அவர்கள் அருகில் அமர்ந்துகொண்டேன் அவர்கள் பேசிகொண்டிருகையிலே இன்னொரு சாமியார் அந்த அறைக்கு வந்து என்னருகில் அமர்ந்தார் நிறைய ருட்ராக்ஷ்மாலை அணிதிருந்தார். எப்படி நல்ல ருட்ராக்ஷத்தை கண்டறிவது என்று என்னருகில் வந்தமர்ந்த சாமியாரிடம் கேட்க நீரில் மூழ்கினால் நல்லது மிதந்தால் போலி என்று கூறினர். எங்கிருந்து ருத்ராக்ஷம் வருகிறது என்று கேட்க நேப்பாளிலிருந்து வருகிறது என்று கூறினார். எனக்கு ஒரு ருத்ராக்ஷம் வேணும் என்று கூற நாளை காலை வா கண்டிப்பாக வாங்கி வைக்கிறேன் என்று கூறினார். ஆனால் போதையூட்டும் தண்ணீர், அசைவம் கூடவே கூடாது என்றார் ஏற்கனவே அவைகளை தொடுவதில்லை என்று கூற புன்னகை அவரிடம் இருந்து வந்தது.அது கொஞ்சம் பெரிய மடமாக இருந்ததால் அங்கு தான் தங்கபோகிறோம் என்று என்னிருந்தேன் ஆனால் அங்கிருத்து வேறு ஒரு இடத்துக்கு கூட்டிசென்றனர்.


கொஞ்சம் உயரமான பகுதியில் அமைந்த ஒரு வீட்டுக் கூட்டிசென்றனர். அங்கு ஒரு வயதான துறவி இருந்தார், என்னை பற்றி கூட்டிசென்றவர் அவரிடம் சொல்ல, சிரித்துக்கொண்டே தாராளமாக தங்கிக்கோ ஒரு உருளைகிழங்கு கொஞ்சம் கோதுமை மாவுதான் கூட போடபோறேன் வேறு ஒன்னும் பெருசா நா செய்யபோறது இல்ல என்று புன்னகையுடன் கூறினார். அந்த வீட்டில் பாதி பூசை அறைதான் இருந்தது. சிறிது நேரத்திலேயே கடவுள் சிலைகள் மற்றும் பூசை அறையை சுத்தம் செய்து விளக்கேற்றி உடுக்கை அடித்து பூசையை தொடங்கினார் ஒரு மணிநேரத்துக்கு மேல் வழிபாடு தொடர்ந்தது அனைத்து இந்து கடவுள்களும் அங்கு இருந்தது. பூசை முடிந்ததும் திருநீறு கொடுத்தார். பிறகு சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தோம். கைலாயத்துக்கு செல்ல கடுவுசீடு, குடியுரிமை பற்றி தெரியாமல் உத்ராஞ்சல் எல்லை வரை சென்று திருப்பி அனுப்பப்பட்ட நிகழ்ச்சியை கூறினார்.



சிறிது நேரத்திலேயே என்னை கூட்டிவந்தவர் சமையலுக்கு வேண்டிய உதவிகள் செய்ய சப்பாத்தியும், உருளைக்கிழங்கு குருமாவும் செய்து கொடுத்தார். உணவு முடித்த பின் நன்கு இருடிருந்தது. அந்த வீட்டுக்கு ஒட்டியே இன்னொரு வீடு இருந்தது அந்த வீட்டில்தான் தங்க போகிறோம் என்றார், மூன்று நான்கு கட்டில்கள்இருந்தது கம்பளி போர்வைகள் ஏராளமாக இருந்தது. எங்கு விருப்பமோ அங்கு படுத்துக்குங்க என்று கூறினார் கூட்டிசென்றவர். ஒரு கட்டிலில் படுத்து மூன்று கம்பளிகள் போர்த்தியபிறகுதான் குளிர் அடங்கியது போல் இருந்தது எங்காவது விடுதியில் அறை கிடைத்திருந்தாலும் இத்தனை வசதி இருந்திருக்காது என்று மனம் கூறியது. நால்ல உறக்கம். லேசான குளிர் இருந்துகொண்டே இருந்தது உடம்பின் சூடு அதை தணிக்கும் பொருட்டு இருந்தது ஒரு புதுவிதமான உணர்வு உணரமுடிந்தது.

காலை வண்டிக்கு செல்லும் பொருட்டு விடியற்காலையிலேயே என்னை எழுப்பிவிட்டனர். வெளியில் வந்து வலது புறம் திரும்பி பனிபடர்ந்த மலையைகாண என்னையறியாமல் என் இருகரங்களும் தலைமேல் கூப்பி வணங்கியது. அனைவருக்கும் அந்த மலையை காணும் பொழுது அப்படிதான் தோனுமா என்று தெரியவில்லை ஆனால் எனக்கு பின்பு வந்த இருவரும் அவ்வாறே செய்தனர்.

காலையில் புறப்பட தயாராகியபிறகு அந்த வயதான பெண்துறவியின் வீடிற்கு சென்றோம் சிறிது நேரம் தரையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம் அவர் எனக்கு முன்பு தரையில் அமர்ந்திருந்தார், கிளம்பும் முன் அமர்ந்தவாறே அவரின் காலுக்கு நேராக குனியவும், மாதாஜிகிட்ட ஆசி வாங்கிக்கோ என்று என்னை கூறிவந்தவர் சொல்லவும் சரியாக இருந்தது. என் வாழ்க்கையில் இரண்டாவது முறை காலில்விழுந்து ஆசி வாங்கியது அன்றுதான் (முதல் முறை என் அன்னையிடம் பதினைந்து வயதில் ஆசி வாங்கினேன்). என் முதிகில் கைவைத்து இரண்டு மூன்று முறை தட்டி எதோ கூறினார், நல்லருன்னுதான் சொல்லிருப்பார் என்று எண்ணிக்கொண்டேன். ( அங்கு அனைவரும் முதுகில் தட்டிதான் ஆசி வழங்குகிறார்கள்). துறவியிடம் ஆசி வாங்கினால் நல்லது என்று எல்லாம் எண்ணி காலில் விழவில்லை, ஊர் பேர் தெரியாத என்னக்கு ஒரு நாள் தங்க இடம் கொடுத்து ஒரு வேலை உணவு கொடுத்த அந்த மனது என்னை காலில் விழவைத்தது.

பிறகு நேராக கரம்குந்த்துக்கு சென்று நீராடிவிட்டு கோவிலுக்கு செல்லலாம் என்று என்ன நீண்ட வரிசை கண்ணுக்கு தென்பட அப்படியே கிளம்புவதாக அவர்களிடம் கூறிவிட்டு பேருந்துநிலையத்தை நோக்கி நடக்கத்தொடங்கினேன், அவர்கள் இருவரும் கோவிலுக்கு சென்றனர், எனக்கு பெரும்உதவி செய்தவருக்கு நன்றி என்று கூறினேன் அது பத்தாது என்று என் மனம் கூறினாலும் வேறு என்ன சொல்வது என்று அப்பொழுது தெரியவில்லை. எனக்கு அவர் உதவி செய்தது இறையின் செயல்தான் என்று என் மனம் எண்ணிக்கொண்டது, இந்த முறை கேதர்நாத் செல்லும்வண்டி நிரம்பிவிட்டதால் சீக்கிரம் எடுத்துவிட்டனர். வேறுவழியில்லாமல் எப்படியாவது இன்று செல்லவேண்டும் என்று வரைபடத்தை எடுத்து பார்க்க தொடங்கினேன்.


தேடல் தொடரும்...

குறிப்பு : புகைப்படங்கள் அனைத்தும் இரண்டாவதுமுறை சென்றபொழுது எடுத்தது

6 comments:

நிகழ்காலத்தில்... said...

பயணத்தை நன்றாக அனுபவித்து இருக்கிறீர்கள்..

எனக்கும் இதுபோல சுற்ற ஆசை உண்டு.:))

ஸ்வாமி ஓம்கார் said...

மாதாஜீகீ ஜெய்ஹொ..!

ஆ.ஞானசேகரன் said...

நல்ல பயணக்கட்டுரை அனுபவித்து எழுதியுள்ளதாக தெரிகின்றது

தமிழ் நாடன் said...

//துறவியிடம் ஆசி வாங்கினால் நல்லது என்று எல்லாம் எண்ணி காலில் விழவில்லை, ஊர் பேர் தெரியாத என்னக்கு ஒரு நாள் தங்க இடம் கொடுத்து ஒரு வேலை உணவு கொடுத்த அந்த மனது என்னை காலில் விழவைத்தது//

அங்கங்கே பித்தனின் ஞானம் தலைகாட்டுகிறது.

நல்ல பயண அனுபவ(வித்த) கட்டுரை!

பித்தனின் வாக்கு said...

நல்ல கட்டுரை அனுபவித்து பயணம் மேற்கொண்டு உள்ளீர்கள். பெறாமையாக இருக்கு. அப்ப அப்ப குறுக்கு சால் ஓட்டுற பகுத்தறிவை விலக்கினால், இன்னமும் தங்களுக்கு நல்லது நடக்கும். இல்லாவிட்டால் ஒரு கட்டத்தில் நம் அறிவினால் ஆவது ஒன்றும் இல்லை என உணர்விர்கள்.(எதுக்கும் கோவியார் கிட்ட இருந்து கொஞ்சம் தள்ளி உக்காருங்க) ஹா ஹா ஹா.

S.A. நவாஸுதீன் said...

இவ்வளவு விஷயங்களையும் நினைவில் வைத்து இப்படி ஒரு பதிவு உங்களால் மட்டும்தான் முடியும்.