பத்ரிநாத் - குப்தகாசி - கேதர்நாத் - பகுதி 5

*(கேதார்நாத் செல்ல நுழைவாயில்)

குறுகலான பாதையின் இரண்டு புறமும் கடைகள், இது தான் கோவிலுக்கு செல்லவதற்கு சரியான பாதையா என்று தோன்று அளவுக்கு இருந்தது, பன்னிரெண்டு கி.மீ'ரை கடக்க , நடைப்பயணம், குதிரை மற்றும் தொட்டில் போன்ற ஒன்று உள்ளது, மிக வயதானவர்கள் தொட்டில் போன்று இருப்பதில் செல்லலாம் நான்கு பேர் சுமந்து செல்கின்றனர், நடக்கமுடியாதவர்கள் குதிரையில் செல்லலாம் அனைத்தும் பேரம் பேசி முடித்தபிறகு, நான் என்ன வயசாகிவிட்டதா என்று நடந்தே செல்ல விருப்பப்பட்டேன். நல்ல கூட்டம் ஜூன், ஜூலையில் அதிக கூட்டம் இருக்கும், வலதுபுறத்தில் மந்தாகினி நதி ஓடிக்கொண்டிருக்கிறது ஒழுங்கற்ற பாதை சில இடங்களில் கைப்பிடிகள் இடிந்து கிடக்கின்றது பல இடங்கிளில் அருவி போன்று நீர் கொட்டுகின்றது, கால்கள் வைக்கும் பொழுது பார்த்து வைக்கவேண்டி இருந்தது.







அனைத்து வயதினரையும் பார்க்க முடிந்தது, பிறந்து சிலமாதங்கலான குழந்தைகளை கூட தூக்கி வந்திருந்தனர், வேண்டுதலாக இருக்கலாம் என்று எண்ணிக்கொண்டேன், மிக வயதானவர்கள் அதிகம் தென்பட்டனர், சிறிது தூரத்திலேயே கால் வலி வந்து ஷூ போட்டு செல்வது அவசியம் என்று உணர்த்தியது. கவனம் பாதையில் இல்லை என்றால் ஈசனை அடுத்த நொடியே பார்ப்பது உறுதி, நடக்கையில் வியர்வையும் நின்றால் குளிரும் எடுக்கிறது, முதல் முறை சென்றபொழுது ஆங்காங்கே அமர்ந்து தேநீர் குடித்து மலையை அடைய மாலையாகிவிட்டது, இருபுறமும் பார்த்துக்கொண்டே செல்லலாம், நதியின் ஓசை சில்லென்று தென்றல், அழகிய மலைகள் என்று பல மலைகளை கடந்து சென்றுக்கொண்டிருந்தேன், வழியில் பலவிதமானவர்களை சந்திக்கமுடிந்தது, என்னைவிட இரண்டு வயது குறைவான நபரிடம் தேநீர் குடிக்கும்பொழுது பேசிக்கொண்டிருந்தேன், அவர் கோவிலை அடையும் வரை குடிநீரை தவிர எதுவும் குடிப்பதில்லை என்று கூறினார் நான் தேநீர் குடித்துவிட்டு கிளம்பும்பொழுது அவர் குதிரையில் ஏறி என் முன்னே சென்றார். தென்னிந்தியர்கள் அதிகம் இங்கு வருகின்றனர் குறிப்பாக தமிழ், தெலுகு மற்றும் கன்னடம் பேசும் மக்கள் அதிகம் வருகின்றனர். மற்றும் குஜராத்தி, வங்காளி மக்களும் குறிப்பிடதகுந்த அளவு பார்க்க முடிந்தது மலை ஏறுவதற்குள் ஒருவழியாகிவிட்டது எப்படித்தான் இந்த மலைக்கு நடந்து வராங்கலோன்னு தோன்றியது.





முதல் முறை சென்ற பொழுது ஐந்து மணிநேரங்களுக்கு மேல் நடக்க வேண்டி இருந்தது, கேதரை அடையும் பொழுது நடைபயணம் முடிந்தது மற்றும் கேதரை அடைந்தது என்ற இரண்டும் பெரு மகிழ்ச்சியை கொடுத்தது, சமதல பரப்பில் நடக்க தொடங்கி சில நிமிடங்கள்குள்ளே கோவிலின் மேல்பகுதி தெரிந்தது, இவ்வளவு தூரம் நடந்து வந்தது இதை பார்ப்பதற்குத்தான் என்று எண்ணிய பொழுது எழுந்த உணர்வை சொற்களில் அடைக்க முடியவில்லை, பிறகு மெதுவாக நடந்து ஒரு சிறு பாலத்தின் வழியே மந்தாகினி நதியை கடந்து பாலம் முடியும் இடத்தில் இருக்கும் மணியை அடிக்க பிறந்த இசை குளிருடன் சேர, தெய்வீக இசையாக மனது பாவித்தது. நான் கடந்த பின்னும் மணியோசை கேட்டுக்கொண்டே இருந்தது எனக்கு பின் வந்தவர்கள் அதற்க்கு காரணமாக இருந்தனர். சரியான பாதை தானா என்று எண்ணிக்கொண்டே சென்றேன் ஒரு வழியை பார்த்து ஒரு வளைவில் திரும்பியதும் கோவில் முழுவதுமாக தெரிய தொடர்ந்து நடந்தது என் கால்கள். இருபுறமும் கடைகள், அனைத்து பொருட்களும் குதிரையின் உதவிக்கொண்டுதான் வந்திருக்க வேண்டும்.






கோவிலை மையமாக கொண்டு உருவான ஊர், பல கட்டிடங்கள் அனைத்தும் ஒவ்வொரு மடத்துக்கு சொந்தமானது, பெரும்பாலான மாநிலங்களுக்கு சொந்தமாக மடங்கள் இருக்கின்றன, தமிழகத்துக்கு இருந்ததாக நினைவில்லை. அனைத்து கட்டிடங்கள் கட்டவும் எந்தளவு குதிரைகள் உழைத்திருக்கும் என்று என்ன முடிந்தது. கோவிலை நெருங்கியதும் பெரிய வரிசையை காண முடிந்தது வரிசையை தொடர்ந்து செல்ல அது கோவிலின் பின்புறம் சென்று கொண்டிருந்தது ஒரு கி.மீ இருக்கும் போல் என்று எண்ணிக்கொண்டு இறுதியாக சென்று நின்றுக்கொண்டேன், எனக்கு பின் பலரும் இணைத்துக்கொண்டுதான் இருந்தனர். வரிசை மெதுவாக நகர்ந்தது ஒரு கட்டத்தில் அப்படியே நின்று போனது. பனிபடர்ந்த மலைகள் மூன்றுபுறமும் அதன் நடுவில் கோவில். மாலைநேர குளிர், நமசிவாய கோசங்கள், புது அனுபவம், நான் தான் இப்படி தனிமையில் ஊர் சுற்றிக்கொண்டிருகிறேனா, முடிவை மாற்றிக்கொண்டு அனந்தவிகாரில்லிருந்து திரும்பி சென்றிருந்தால் இந்த அற்ப்புத இடத்தை பார்த்திருக்க முடியுமா ? என்று எண்ணி லேசான மழையில் மலையில் கோவிலை பார்த்துகொண்டு இருக்கும்பொழுதே குளிர் என்னில் இறங்குவதை உணரமுடிந்தது, நான் மட்டும் தான் ஷாட்சுடன் இருந்தது கோவிலை நெருங்கும் பொழுது மற்றவர்களை பார்த்து தெரிந்துக்கொண்டேன். நெடு நேரம் வரிசை நின்றதுக்கு காரணம் கோவிலில் பூசை செய்ததுதான் என்று, பின்புதான் தெரிந்தது. கோவிலின் பின்புறம் வழியாக வரிசை சென்றது அதற்க்குள் முழுவதுமாகவே இருட்டிருந்தது.

கோவில் வாயில் அருகில் இரண்டு சாமியார்கள், ஒருவர் அந்த குளிரிலும் சட்டை எதுவும் போடாமல் இன்னொருவர் ஒரு துணி போல் கட்டிக்கொண்டு அமர்ந்திருந்தனர், வரிசையில் இருந்தவர்கள் காசை கொடுத்துவிட்டு அவர்கள் கால்களை தொட்டு கும்பிட்டுக்கொண்டனர்,காசையும் கொடுத்துவிட்டு கால்களையும் தொட்டு கும்பிடுகிரார்களே என்று எண்ணி சிறுபுன்னகையுடன் கடந்து சென்றேன், தமிழக கோவில்களை ஒப்பிடும் பொழுது மிக மிக சிறிய கோவில் இதற்க்கா இவ்வளவு கூட்டம் வருகிறது என்று எண்ணிக்கொண்டே கோவிலுக்குள் நுழைந்தேன். முதலில் சிறு அறை பாண்டவர்களின் சிலைகள் மற்றும் கண்ணனின் சிலை என்று அந்த அறையில் இருந்தது, கண்ணன் இருந்த சிலையின் அருகில் ஒரு பலகையில் கிறுக்கியது போன்று தமிழில் எழுதபட்டிருந்தது, நம் மக்களை தமிழில் பெயர் காட்டி மகிழ்வித்து காசு சம்பாரிக்க இந்த எழுத்துக்கள் என்று எண்ணினாலும் அதை பார்த்தபொழுது பெரும்மகிழ்ச்சிதான் ஆனால் கோவிலின் பின்புறம் திருஞானசம்பந்தர் இயற்றிய திருக்கேதாரம் தமிழிலும் இந்தியிலும் கல்லில் பொறித்து வைத்திருந்ததை முதல் முறை சென்ற பொழுது பார்க்காமலே திரும்பிருந்தேன், அதற்க்குகாரணம் கோவிலை நெருங்கும்முன்பே சூழ்ந்த இருளும் முதல் முறை சென்ற பொழுது இருந்த மக்கள் கூட்டமாகவும் இருக்கலாம்.






அலங்கரிக்கப்பட்டு இருந்த கேதாரனாதர் புலித்தோல் போத்திருந்த்தாக தோன்றியது அலங்காரம் அப்படி, பயணம் முழுவதுமாக வெற்றிபெற்றுவிட்டது என்று எண்ணிக்கொண்டேன், அதற்குள் மின்னல் போல வெளியேறவேண்டி இருந்தது . அதிக மக்கள் கூட்டம் என்பதால் சில நிமிடங்களுக்குள்ளே வலபக்க வழியாக வெளியேறினேன். கோவிலுக்கு பின்பு இன்னும் ஒரு சிறிய கோவில் அதற்குள் செல்ல, லிங்கத்தை தொட்டு பூசை செய்துக்கொண்டிருந்தனர். நானும் ஒரு சுற்று சுற்றிவிட்டு. வெளியே வரும்பொழுது இன்னும் கடுமையாக குளிர் இறங்க ஆரம்பித்தது. கோவிலை ஒரு சுறு சுற்றிவிட்டு தங்க அறை தேட எங்கும் கிட்டவில்லை முழுவதுமாக ஆக்கரமிக்கப்பட்டிருந்தது அறைகள், கேதர்நாத்தின் அனைத்து வீதிகளிலும் (இருப்பதே நாலு வீதிதான்) சுற்றியும் எங்கும் அறை கிடைக்கவில்லை, கௌரிகுந்த் செல்லலாம் என்றால் மிகவும் இருட்டிவிட்டது, என்னசெய்யலாம் என்று ஒரு மடத்தின் வெளியில் நின்று யோசித்துக்கொண்டிருக்கும் பொழுதே தம்பி அஞ்சு டிகிரிக்கு கீழ இருக்கும் இப்படி பேன்ட் கூட போடாம இருக்கியே உடம்பு சரியில்லாம போய்டும் என்று கண்டிக்கும் தொனியில் அந்த மடத்தை சேர்ந்தவர் கூற, பேன்ட்டை எடுத்து அங்கேயே சாட்ஸ் மேல் போட்டுக்கொண்டேன். திரும்பவும் ஒரு முறை கேதார் தெருக்களை வளம் வந்து எங்காவது அறை கிடைக்குமா என்று தேடிக்கொண்டே இருந்தேன். அந்த அந்த மாநிலத்தவருக்கு மட்டுமே முன்னுரிமை அந்த மடங்கள் கொடுக்கின்றன. தமிழர்களுக்கு என்று ஒரு இடம் அங்கு இல்லாதது பெரும் குறைதான் இத்தனைக்கு தமிழர்கள் அதிகம் செல்லும் இடம் அது. நீண்ட நேரத்துக்கு பிறகு தங்க இடம் கிடைக்கும் என்று நம்பிக்கை இழந்து ஒரு கடையில் அமர்ந்து விசாரிக்க, ஒருத்தர்தானே நான் உதவி செய்யுறேன் ஆனா அவர் கேக்குற தொகைய கொடுத்துடுங்க என்று கூறினார், சிறிது நேரத்தில் ஒருவர் வந்து கூட்டிச்சென்றார்.


இடம் நன்றாக இருந்தது என்று எல்லாம் கூற முடியாது ஒரு ஐந்து மணிநேரம் தங்க தானே என்றும், இது கிடைத்ததே பெரிது என்றும் நினைத்து காசை கொடுத்து விட்டு உள்ளே சென்றால் பெரிய அறையில் இன்னும் நான்கு பேர் இருந்தனர் உத்திரபிரதேசத்தை சேர்ந்தவர்கள். யாருன்னே தெரியாதே என்று எண்ணினாலும் வேறு வழியில்லாமல் தங்க வேண்டி இருந்தது, என்ன வேல பாக்குறிங்கன்னு என்னை ஒருவர் கேட்க பதில் கூறிவிட்டு, அவர்களை நான் கேட்க ஒருவர் பண்டிட் என்று மிடுக்காக கூறினார், அந்த ஐந்து மணிநேரமும் மெதுவாக கடக்க சிலமணி நேரங்கள் தூங்கியும் இருந்தேன், விடியற்காலையில் விழித்ததும் அவர்களை காண அவர்களும் கிளம்ப தயாராக இருந்தனர் ஒருவர் என்னையும் வா என்று கூட்டிசெல்ல அவர்கள் பின்னால் தொடர்ந்தேன் கோவிலின் வெளியில் இருந்து வணங்கிவிட்டு (விடியற்காலையே பெரிய வரிசை நின்றுக்கொண்டிருந்தது) கௌரிகுந்த்தை நோக்கி நடக்க தொடங்கினோம்.


தேடல் தொடரும்....

குறிப்பு : புகைப்படங்கள் அனைத்தும் மூன்றாவதுமுறை சென்றபொழுது எடுத்தது

1 comments:

வினோத் கெளதம் said...

Machi Plz change the font size..
its hard to read..